காஞ்சுர்மார்கின் இளவரசன்
சிறுகதை ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அ ப்போது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பந்தைத் துரத்திக்கொண்டு ஓடி, தடுமாறி கீழே விழுகிறேன். அதன்பிறகு எதுவும் நினைவிலில்லை. ஒரேயொரு காட்சி... நான் வலியில் துடிப்பதைப் பார்த்து அவன் பதைபதைப்புடன் கண் கலங்க நின்றது, அது மட்டும்தான் மனதிலிருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது இச்சம்பவம்தான் கண்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது மீண்டும்... வீட்டிலுள்ள எனதறையில் இருக்கிறேன். சுற்றி பொருட்களெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. எதையோ தேட வந்தேன், அது கடந்த காலத்தைக் கிளறிவிட்டிருக்கிறது. அடிக்கடி நடப்பதுதான். என்னதான் புதிய புதிய விஷயங்களைச் செய்தாலும் பழைய நினைவுகளை நோக்கித்தான் மனம் செல்கிறது. சுகமான நினைவுகளெல்லாம் இல்லை, இப்போதிருக்கும் அதே வலியும் போராட்டமுமான நினைவுகள்தாம். என்ன, அப்போது விளையாடிக் கொண்டிருந்தேன், இப்போது இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம். இந்திய அணிக்காக விளையாடியபோது அணிந்திருந்த தொப்பியைக் காணவில்லை. அதைத் தேடத்தான் வந்தேன். பள்ளி அளவிலான போட்டிகள் தொடங்கி, கவுன்ட்டி போட்டிகள்வரை பல அணிகள், பல தொப்பி...