காஞ்சுர்மார்கின் இளவரசன்

சிறுகதை


ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

 

ப்போது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பந்தைத் துரத்திக்கொண்டு ஓடி, தடுமாறி கீழே விழுகிறேன். அதன்பிறகு எதுவும் நினைவிலில்லை. ஒரேயொரு காட்சி... நான் வலியில் துடிப்பதைப் பார்த்து அவன் பதைபதைப்புடன் கண் கலங்க நின்றது, அது மட்டும்தான் மனதிலிருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது இச்சம்பவம்தான் கண்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது மீண்டும்... வீட்டிலுள்ள எனதறையில் இருக்கிறேன். சுற்றி பொருட்களெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. எதையோ தேட வந்தேன், அது கடந்த காலத்தைக் கிளறிவிட்டிருக்கிறது. அடிக்கடி நடப்பதுதான். என்னதான் புதிய புதிய விஷயங்களைச் செய்தாலும் பழைய நினைவுகளை நோக்கித்தான் மனம் செல்கிறது. சுகமான நினைவுகளெல்லாம் இல்லை, இப்போதிருக்கும் அதே வலியும் போராட்டமுமான நினைவுகள்தாம். என்ன, அப்போது விளையாடிக் கொண்டிருந்தேன், இப்போது இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம். இந்திய அணிக்காக விளையாடியபோது அணிந்திருந்த தொப்பியைக் காணவில்லை. அதைத் தேடத்தான் வந்தேன். பள்ளி அளவிலான போட்டிகள் தொடங்கி, கவுன்ட்டி போட்டிகள்வரை பல அணிகள், பல தொப்பிகள். அதில் தொலைந்தது போக மிச்சமிருந்தது மும்பை அணிக்கான தொப்பியும் இந்திய அணிக்கான தொப்பியும்தாம். அதிலும் ஒன்று காணவில்லை. இப்போது என்ன செய்வது, ஆண்ட்ரியாவைத்தான் கேட்க வேண்டும்.

பேபி கொஞ்சம் இங்க வரியா?

சமையலறையில் இருந்திருப்பாள் போல, புலம்பிக் கொண்டே வருகிறாள்.

என்ன செஞ்சி வச்சிருக்க!

ஐ லாஸ்ட் மை இண்டியன் கேப்

அதெப்படிக் காணாமப் போகும். அந்தப் பெட்டிலதான இருந்தது. சரி, இப்போ அது எதுக்கு உனக்கு?

நாளை கெட் - டுகெதருக்குப் போட்டுக்கலாம்னு தோனுச்சு.

ஓ... இங்கதான் எங்கயாவது இருக்கணும். தேடிக்கலாம், இப்போ எழுந்திருங்க.

கண்கள் வழியாக என் மனநிலையை உணர்ந்திருப்பாள் போல, கடைசியாகப் பேசிய போது அவளது குரல் கனிந்திருந்தது. எனக்கும் கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. பாடிக்கொண்டே ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்து கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தேன். மாலை பயிற்சி கொடுக்கச் செல்ல வேண்டும். டாக்சியில் போலாமா? நடந்து சென்றால் குறைந்தது ஒருமணி நேரம் ஆகும். டாக்சிக்குப் பணம் வேண்டும், யாரிடம் கேட்பது. சரி, இப்போதைக்கு ஒரு கேம் போடுவோம் என மீண்டும் கைப்பேசிக்குள் நுழைந்தேன். வாசலில் யாரோ அழைப்பது போல் இருந்தது. கதவு பாதி மூடியிருந்ததால் எதுவும் தெரியவில்லை. ஆட்டத்தைத் தொடர்ந்தேன். மீண்டும் யாரோ அழைக்கிறார்கள். எழுந்துபோய் பார்த்தேன். முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் நின்றருந்தான். கையை நீட்டி, 'உங்க தொப்பி' என்று தயங்கித் தயங்கிச் சொன்னான். என் உணர்வை எப்படி வெளிப்படுத்துவதென்று தெரியவில்லை. எனக்கே குழப்பமாகத்தான் இருந்தது. ஆச்சரியம், குதூகலம், பூரிப்பு... எல்லாம் இருந்தாலும் இப்படி நடக்குமென்று எதிர்பார்த்தது போலவும் இருந்தது. கண்கள் விரிந்து, நாக்கு குழறி, ஒருவழியாக "உள்ள வாங்க" என்றழைத்து, சோபாவில் அமர வைத்தேன். எனக்கு இருப்பு கொள்ளவில்லை, நிற்பதா அமர்வதா என்று தெரியாமல் மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு உள்ளே சென்றேன். இவள் எங்கு சென்றாளோ, சமையலறையிலும் இல்லை. குளிக்கச் சென்றிருப்பாளோ, என்ன அவசரம். மீண்டும் ஹாலுக்கே வந்தேன். கைகளைப் பிணைத்தபடி நின்றேன்,

என்ன சாப்பிடறீங்க, டீ, காபி....?

இல்ல சார். எதுவும் வேணாம். உங்க தொப்பி..

ஓ, யா... தேங்க் யூ ஸோ மச். உங்களுக்கு எப்படி இது?

ஸ்போர்ட்ஸ் கடையில விட்டுட்டீங்க. நேத்தே கொடுக்கச் சொல்லி ஓனர் குடுத்தாரு. நைட்டு லேட்டாயிடுச்சு, அதான்.

ஓ... ஒன்னும் பிரச்சனையில்ல. தேங்க்யூ அகெய்ன். ப்ரெஷ் ஜூஸ் குடிக்கறீங்களா?

இல்ல சார், கிளம்பறேன்.

ஓகே, பட் கண்டிப்பா ஒருநாள் லன்ச்சுக்கு வரணும்.

மெலிதாகச் சிரித்தான். இன்னமும் அவனுக்குள் தயக்கம் இருப்பது புரிந்தது. செருப்பு மாட்டும் இடைவெளியில் இரண்டுமுறை என்னைத் திரும்பிப் பார்த்தான். ஏதோ சொல்ல நினைக்கிறான். ஆனால்...

ஏதாவது சொல்லணுமா?

....

இல்ல என்கிட்ட ஏதாவது சொல்லணுமா?

நான் உங்களோட ஃபேன் சார்.

அவன் முகத்திலிருந்த பெருமை என் முகத்திலும்...

ஸோ ஸ்வீட். இதுக்கு ஏங்க இவ்ளோ தயங்குறீங்க.

அதற்கும் அதே மெல்லிய சிரிப்பு.

வேலையிருக்கா?

இல்ல சார், இன்னிக்கு லீவு.

சூப்பர், அப்ப இருங்க ஒரு ரவுண்ட் போலாம்.

உள்ளே சென்று அவளைத் தேடினேன். இன்னமுமா குளிக்கிறாள்? 'வெளியே செல்கிறேன், அரைமணி நேரத்தில் திரும்பிவிடுகிறேன். கதவைப் பூட்டவில்லை' என வாட்ஸப் செய்துவிட்டு அவனோடு கிளம்பினேன். வழக்கமாக இப்படிச் செய்கிற ஆள்தான். ஆனால், இவன் எப்படி எடுத்துக்கொள்வான் எனத் தெரியவில்லை. ரசிகன் என்று சொல்லியிருக்கிறான், அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

நான் இப்படித்தான்...

தெரியும் சார்.

அப்ப சரி, உங்க வீடு எங்க?

பிந்தி பஜார்ல சார்.

பள்ளிவாசலின் பாங்கொலி, சாலின் கலகலப்பு, 18 பேர் குடித்தனம் நடத்தும் வீட்டின் புழுக்கம், பொதுக் கழிப்பறை வரிசையில் நடக்கும் பேச்சுவார்த்தைகள்... இவை யாவும் இரண்டு நொடி அனுபவங்களாயின. இயல்புநிலைக்குத் திரும்பி அவனைப் பார்த்தேன்.

உங்கள வீட்டுல விட்ரலாம்னு நெனச்சேன். கார் புக் பண்ணவா?

ஐயோ சார், அதெல்லாம் வேணாம். என்கிட்ட வண்டி இருக்கு, நான் போய்க்கறேன்.

ஓ கமான், யூ மேட் மை டே. நீங்களே அத கெடுத்துராதீங்க. உங்க வண்டி எங்க?

சைக்கிளா..! உண்மையில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். அவசியம் இதெல்லாம் வேண்டுமா? ஒரு கைக்குலுக்கல், செல்ஃபி, ஆட்டோகிராஃப் ஆகியவற்றோடு இந்தச் சந்திப்பை முடித்துக் கொள்ளலாமே. நாளை கெட் - டுகெதருக்குத் தயாராகலாம், ஆண்ட்ரியாவுடன் பொழுதைக் கழிக்கலாம், அட ஒரு குட்டித் தூக்கமாவது... இப்படியெல்லாம் வலது மூளை யோசித்துக் கொண்டிருக்கையில், இடது மூளையோ 'நீ சைக்கிள் ஓட்டுகிறாயா அல்லது பின்னாடி உட்கார்ந்து கொள்கிறாயா?' எனக் கேட்டது.

அப்பா கூட சைக்கிள்ல போனதுதான் ஞாபகத்துக்கு வருது.

....

அவருதான் விளையாட வச்சாரு, சொல்லிக் கொடுத்தாரு, எல்லாம் பண்ணாரு, ஆனா...

என்ன சார் ஆச்சு?

அப்பா அடிக்காத நாளே இல்லை. காரணம் தெரியாமல் கூட அடி வாங்கியிருக்கிறேன். எதற்கும் கலங்கியதில்லை. ஆனால் ஆபாசமாகத் திட்டுவது மட்டும் எனக்குப் பிடிக்காது. என் சமநிலையை மொத்தமாகச் சிதைத்துவிடும். அப்பா திட்டிக்கொண்டே அடிப்பார். இதனால் அடிக்கடி நண்பன் வீடிருக்கும் பிடிடி சாலுக்கு ஓடிவிடுவேன். அதற்கும் அடிப்பார். இதையெல்லாம் கூட மன்னித்துவிடுவேன். ஆனால், வித்யா என்ன பாவம் செய்தாள்!

எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா

மனநிலை பாதிக்கப்பட்டு சின்ன வயசிலேயே... அவங்கதான சார்.

என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் திரும்பிப் பார்த்து பதற்றத்துடன் சைக்கிளை ஓரமாக நிறுத்தினான். சில நொடிகளுக்குப் பிறகு மூச்சை நன்கு இழுத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அவனது நிலைமையும் புரிந்தது.

கொஞ்சம் எமோஷனலாயிட்டேன்.

புரியுது சார்.

சாவும்போது அவளுக்குப் பதினொரு வயசு. வறுமையா, எங்களால பாத்துக்க முடியலயா என்னன்னே தெரியல. அந்த வயசுல அது நிறையக் கத்துக்கொடுத்துச்சு.

அப்பாவோட வருமானம் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்குக் கூட போதவில்லை. அதனால் அவர் எங்களுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்ததில்லை. அவர் விளையாடுவதால் என்னையும் கிளப்புக்கு அழைத்துச் செல்வார். மட்டைமீது பந்து விழும் அந்தச் சத்தம் அதீத உற்சாகத்தைத் தந்தது. அப்பாவோடு விளையாடச் செல்வது போக, சாலில் உள்ள நண்பர்களோடும் விளையாடத் தொடங்கினேன். அதற்கும் அப்பா அடிப்பார். ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டிலிருக்கப் பிடிக்காமல் ஓடிவிடுவேன். தேடிக் கண்டுபிடித்து அடிப்பார்; தரக்குறைவாகத் திட்டுவார். எங்களுடைய படிப்புச் செலவுகளைச் சில செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதை அவர்கள் பெருந்தன்மையோடு செய்வதாக அப்பா சொல்வார், அவர்களும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். எனக்கு அது வெறுப்பாக இருந்தது. யாரும் எதையும் எனக்குச் சும்மா தர வேண்டாம், என் திறமைக்காகக் கொடுக்கட்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதற்கெல்லாம் கிரிக்கெட்தான் சரியான வழியென நம்பினேன்; அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்திருந்தேன். ஒருமுறை கிரிக்கெட் பேட் வாங்கப் பணமில்லாததால் நண்பர்களோடு சேர்ந்து திருடி.... பேசிக்கொண்டே இங்கே வந்து விட்டோமா! சரி, இந்த வழியாகத்தானே பிந்தி பஜாருக்குப் போக முடியும்! ஆனால், இவன் ஆள் வேறு மாதிரி இருக்கிறானே. படிய வைத்த முடி கலைந்து தொங்குகிறது. தாடியும் கொஞ்சம் முளைத்திருக்கிறது. சட்டையும் டக்கின் செய்யப்பட வில்லை. கேட்டால் என்ன பதில் சொல்வான்!

என்ன சார், அப்படியே நின்னுட்டீங்க... மலரும் நினைவுகளா!

இங்க ஏன் வந்தீங்க?

இவ்ளோ நேரம் சைக்கிள்ல வந்தது களைப்பா இருக்கும். அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு... உங்களுக்கு நாஸ்டால்ஜிக்காவும் இருக்கும்.

உங்க பேர் என்ன, கேட்க மறந்துட்டேன்.

ஜீசஸ்

அவனைப் பார்க்காமல் பொதுவாகப் புன்னகைத்தேன். வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியத்தை அவன் மெய்மறந்து பார்த்தது நினைவுக்கு வருகிறது. அந்தக் கண்களின் கனிவு அத்தகையது, யாரையும் ஆட்கொண்டுவிடும்.

ஜீசஸ் நீங்க பட்டம் விட்டிருக்கீங்களா, அதுவும் பேட்டிங் பண்ணும்போது...

13 வயதில் அப்பா ஆச்ரேகரிடம் சேர்த்துவிட்டார். அவர் நடத்திய வலைப் பயிற்சியில் நான் சிறப்பாக விளையாடியதால் தன்னுடைய பயிற்சி வகுப்பில் சேர்த்துக்கொண்டார். குருவைச் சீடனும் சீடனைக் குருவும் கண்டடைந்த தருணமாகத்தான் அதை இன்றளவும் நினைக்கிறேன். நான் என்னவாக ஆக வேண்டும் என்பதில் எனக்கோ அப்பாவுக்கோ எந்தத் திட்டமும் இருந்ததில்லை. விளையாட வேண்டும் அவ்வளவுதான். அதனால் ஆச்ரேகர் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருந்தோம். 

வியாகுல அன்னை பள்ளியிலிருந்து சர்தாஸ்ரம் பள்ளிக்கு மாறச் சொன்னார்; அப்பவே காஞ்சுர்மார்குக்கு வந்துட்டோம்னுதான் நினைக்கறேன். அவரே கல்விச் செலவுகளுக்கும் விளையாட்டுச் செலவுகளுக்கும் ஏற்பாடு செய்தார். ஆம், என் திறமைக்குத்தான் அங்கீகாரம் கொடுக்கிறார்கள். காலை 6 மணி இரயில் பிடித்து இந்த சிவாஜி பார்க்குக்கு வந்துவிடுவேன். பள்ளி முடிந்ததும் 6 மணி நேரம் பயிற்சி. இரவு வீடு செல்ல 12 மணியாகிவிடும்.

ஹாரிஸ் ஷீல்ட் செமி ஃபைனல், இன்னிக்கும் அந்த மேட்ச் பத்திப் பேசுவாங்களா?

கிரிக்கெட் உள்ள காலம்வரை பேசுவாங்க. எங்களுக்கு அந்த ஸ்கோர் பத்தல, ஆனா வேற வழியும் இல்ல. எங்க கோச் ஆச்ரேகர் டிக்ளேர் பண்ணச் சொல்லிட்டார். இல்லன்னா நாங்க இருந்த வேகத்துக்கு குறைஞ்சது 800 ரன்னாவது அடிச்சிருப்போம்.

உண்மையச் சொல்லுங்க யாரு பெஸ்ட்? நீங்களா அவரா?

அந்தக் கதை நினைவுக்கு வருகிறது. துறவியும் மன்னனும் கதை.

இந்தமாரியான கம்பேரிசன்ஸ எப்பவோ கடந்து வந்துட்டேன். என்ன ஜெயிக்கறதுக்கு இங்க நான் மட்டுந்தான் இருக்கேன்.

ஆச்ரேகரிடம்தான் நாங்கள் கிரிக்கெட் பயின்றோம். கடைசிவரை அவரது செல்லப்பிள்ளைகள் நாங்கள் இருவர்தாம். அந்த வயதுக்கேயுரிய அத்தனை குறும்புத்தனங்களையும் செய்திருக்கிறோம். நிறைய வடபாவ் சாப்பிடுவோம். இங்கே அதற்கென்றே நான்கைந்து கடைகளைத் தேர்வுசெய்து வைத்திருந்தோம். யார் அதிக வடபாவ்களைச் சாப்பிடுகிறார்கள் என்று எங்களுக்குள் பல போட்டிகள் நடக்கும். டென்னிஸ் வீரர் மெக்என்றோவின் ரசிகர்களாக இருந்தோம். அவரைப் போன்றே சிகை அலங்காரம் செய்து கொண்டோம். எனக்கு எப்போதும் மேற்கிந்திய வீரர்கள்தான் ஆதர்சம். அவர்களைப் போலவே என்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவேன். ஆனால், சச்சின் இன்றுவரை மெக்என்றோவைத் தாண்டவில்லை.

எனக்கு லாரா புடிக்கும். நீங்களும் கிட்டத்தட்ட அதே ஸ்டைல்லதான் பேட்டிங் பண்றீங்க.

இல்ல, டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்னு ஒருத்தர் இருந்தாரு. அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

பல்வன்கர் பாலுவச் சொல்லுவீங்கன்னு நெனச்சேன்.

அவன் கண்களை ஒருமுறை பார்த்தேன்.

அவர் ஸ்பின்னராச்சே. நான் பௌலிங்ல பெருசா இன்ட்ரஸ்ட் காட்டல. மத்தபடி ஐ ரெஸ்பெக்ட் ஹிம்.

அந்தச் சிறுவன் அபாரமாக விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் நிற்கும் விதமே வசீகரமாக இருக்கிறது. எந்த மாதிரியான பந்துவீச்சு என்பது பற்றியெல்லாம் அவன் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. எட்டுத்திசைகளிலும் பந்துகளைச் சிதறடித்துக்கொண்டிருக்கிறான். இதோ, இப்போது ஒன்று எங்களை நோக்கி வருகிறது. நல்ல உயரமான, நீளமான ஷாட். கண்டிப்பாக மைதானத்தைத் தாண்டி வெளியே வந்துவிடும். சிறுவயதில் சாலில் உள்ள சின்ன சந்துகளில்தான் விளையாடுவோம். உயரமாக அடித்தால் மட்டுமே ரன்கள் வரும். அதாவது, கட்டடத்தின் முதல்தளம் வரை சென்றால் இரண்டு ரன்கள், இரண்டாம் தளம்வரை சென்றால் நான்கு ரன்கள். இந்தப் பழக்கம் எனக்குக் கடைசிவரை மாறவில்லை. சாதாரண மேட்ச் என்றாலும் பரவாயில்லை, முக்கியமான மேட்ச்களிலும் இவன் ஏன் தேவையில்லாமல் தூக்கியடித்து அவுட்டாகிறான் என்று பலரும் கோபப்பட்டிருக்கிறார்கள். அதற்கான காரணம் எனக்கும் ஆச்ரேகருக்கும்தான் தெரியும். அவர் ஒருமுறை எங்கள் சாலுக்கு வந்திருக்கிறார்.

இங்கதான சச்சின் வீடு?

ஆமா, முதல்ல இங்கதான் இருந்தாங்க.

இந்த இடம்...

எனக்குப் புடிக்கறதில்ல. இந்த அமைதி என்னவோ மாதிரி இருக்கும். இந்த டிசைனே என் குணத்துக்கு எதிரா இருக்கறதா தோனும். எங்க வாழ்க்கைக்கு; எங்க சாலுக்கு எதிரான டிசைனா தோனும்.

திரும்ப நீங்க பிந்தி பஜாருக்குப் போகலயா?

அது என் ரத்தத்துலயே இருக்கு, திரும்பப் போறதுங்கறது அர்த்தமில்லாதது.

மீண்டும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். இந்த அமைதி என்னைத் துரத்திக்கொண்டேயிருக்கிறது. 'எங்கும் எப்போதும் அமைதியாக இரு' என்பதே எனக்கான அறிவுரையாக இருக்கிறது. ஏன் அமைதியாக இருக்கச் சொல்கிறார்களென்று எனக்குப் புரிந்ததேயில்லை. ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட வேண்டிய வாழ்க்கையில் அமைதியின் தேவையென்ன! பெருஞ் சத்தமே பேரமைதி என்பதை இவர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்கள்?... சத்தியமாக என்னால் இதை நம்ப முடியவில்லை. இவனுக்கு எப்படி இது கிடைத்தது, முதலில் இவன் யார், நான்தானே இவனை அழைத்துக்கொண்டு வந்தேன், இவன் என்னை அழைத்துவந்து ஊர்சுற்றுகிற மாதிரியல்லவா இருக்கிறது. இந்த டி ஷர்ட்டும் ஜீன்ஸ§ம் தொப்பியும் முன்பே அணிந்திருந்தானா?

சார் அப்படியே பின்னாடி பாருங்க...

ஹோட்டல் ப்ளூ டைமண்ட். மற்றவர்களெல்லாம் அவரவர் அறைகளுக்குச் சென்ற பின்னர் நான் மட்டும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த நோயெல்லாவைப் பார்த்து மயங்கி நின்ற தருணம், தூசிப் படலமாய்க் கண் முன்னே நகர்ந்துகொண்டிருந்தது. அந்த மணம் இப்போதும் என்மீது வீசுகிறது. மூளை உருவாக்கும் மாயாஜாலங்கள் ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த காலத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் கண நேரத்தில், அதுவும் துல்லியமாக, மீட்டெடுத்துவிடுகிறது... இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்திருக்கிறது. யாரிவன், இந்தப் பயணத்தை இங்கேயே முடித்துக் கொள்ளலாமா!

இந்த வண்டிய உள்ள பார்க் பண்ணிடுறீங்களா?

என்னைப் பற்றின பல விஷயங்கள் இவனுக்குத் தெரிந்திருக்கிறது. ரசிகனென்றால் இவ்வளவு தெரிந்து வைத்திருப்பார்களா! எனக்கு யாரைப் பிடிக்கும், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ்... இவர்களுடைய பேட்டிங் தவிர்த்து வேறெதுவும் தெரியாது. குருவாக மதிக்கும் சுனில் கவாஸ்கரின் வீட்டிற்குப் பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால், அவர் மனைவி பெயர்கூட தெரியவில்லை, மறந்து விட்டது. சல்மான் கான், மாதுரி தீட்சித், லதா மங்கேஷ்கர் என யாரையும் அவர்தம் துறை தாண்டி தெரிந்துகொண்டதில்லை. சச்சின் மட்டும் விதிவிலக்கு. இவன் எப்படி இத்தனையைத் தெரிந்துவைத்திருக்கிறான். இன்னும் இவனுக்கு வேறென்னென்ன தெரியும்!

போலாமா சார்?

நாப்பதாயிரம்.

என்னது சார்?

கைனடிக் ஹோண்டா. என் காசுல வாங்குன முதல் வண்டி. இந்தியன் டீம்ல அந்த வண்டிய வச்சிருந்த ஒரே ஆள் நான்தான். ஒருமுறை இங்க மும்பையில மேட்ச் நடந்தது, அநேகமா ஸ்ரீலங்காவோட இருக்கலாம், ஐயெம் நாட் ஷ்யூர். மேட்ச் பிராக்டிஸ்க்குத் தாஜ்ல தங்கியிருந்தோம். அப்போ கபில், அசார், சச்சின்னு எல்லாரும் கார்ல வருவாங்க. நான் மட்டும் என்னோட கைனடிக் ஹோண்டாவுல வருவேன். தவான கூப்ட்டு, பார்க் மை ஃபெராரின்னு...

நான் சிரித்துச் சிரித்துச் சொன்னதை அவன் எப்படி எடுத்துக்கொண்டான் எனத் தெரியவில்லை. விநோதமாக எண்ணியிருக்கவும் வாய்ப்புண்டு. அவன் வேறேதோ கேட்க எண்ணியிருக்கிறான், என்னவென்று புரிகிறது. அதற்காகத்தான் இங்கு அழைத்து வந்திருக்கிறான். அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை, சொல்வதானாலும் நோயெல்லாவின் சம்மதம் வேண்டும். அதைப் பற்றிப் பேசாதிருப்பதே உத்தமம். கேட்டாலும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். காதலித்தோம்; திருமணம் செய்துகொண்டோம்; பிரிந்துவிட்டோம்.

நிறையச் சேட்டைகள் பண்ணிருப்பீங்க போலயே.

உங்களால நினச்சுப் பாக்க முடியாத அளவுக்குப் பண்ணயிருக்கேன்.

ஏதாவது சொல்லுங்களேன்

ஒருமுறை சச்சினுக்கும் எனக்கும் பந்தயம், ஸ்கர்ட் போடணும்னு. நான் ஸ்கர்ட் போட்டுக் கிட்டதோட இல்லாம அப்படியே அகமதாபாத் வீதியில நடந்தேன். சில சமயம் நிர்வாணமா கூட ரோட்ல நின்னிருக்கேன்.

என்ன சொல்றீங்க, நிஜமாவா?

யா, இன்னும் நிறைய இருக்கு. கங்குலி ரூம்ல தண்ணிய ஊத்திவிட்டது, டீம் மேனேஜ்மென்ட்ல இருக்க எல்லாரையும் மிமிக் பண்ணது, மேட்ச் முடிஞ்சு சியர் கேர்ல்ஸோடு ஆடினது... இப்படி நிறைய.

பெரும்பாலும் இதுக்கெல்லாம் நீங்க மட்டும்தான தண்டிக்கப்பட்டீங்க.

இன்னிவரைக்கும் அதுமட்டும்தான் எனக்குப் புரியல. வாட் ஐ டிட் ராங் அண்ட் ஒய் ஒன்லி மீ?

நிஜமாவே உங்களுக்குப் புரியலயா?

புரிஞ்சிருக்கலாம்.

அம்மா ஒரு கதை சொல்வார். மும்பா தேவியின் அருளால் என் அப்பாவுக்கு வரம் தரும் நான்கு மந்திரங்கள் கிடைத்ததாம். அந்த நான்கையும் எனக்கே தந்துவிட வேண்டும் என்றும் 16 வயதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒன்று என நான்கு மந்திரங்களையும் எனக்கு அறிவிக்க வேண்டுமெனவும் மும்பா தேவி உத்தரவிட்டாளாம். 13 வயதில் ஹாரிஸ் ஷீல்ட் அரையிறுதிப் போட்டியில் செய்த சாதனையால் மனம் நிறைந்த அப்பா, அவசரப்பட்டு முதல் மந்திரத்தை அப்போதே சொல்லிவிட்டார். அடுத்து 17 வயதில் எனக்கும் அப்பாவுக்குமான உறவில் விரிசல் இருந்தாலும் இரண்டாவது மந்திரத்தைச் சொன்னார். 21 வயதில் நான் வீட்டைவிட்டே வெளியேறியிருந்தேன். அப்பாவுடன் தொடர்பே இல்லாமல் இருந்தது. பிறகு காஞ்சுர்மார்க் வந்துவிட்டோம். ஆனால், இப்போது அந்த இரண்டு மந்திரங்களும் வீணாய்க் கிடக்கின்றன. அதனால்தான் என்னுடைய வளர்ச்சி தடைப்பட்டுள்ளது என்பார் அம்மா. உண்மையில் இது அம்மா சொன்ன கதையா, அல்லது அம்மா சொன்னதாக எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேனா, தெரியவில்லை. பெருமுயற்சி செய்து எழுந்து நிற்கும் குழந்தை சிறு அசைவில் பொத்தென்று கீழே அமர்ந்துவிடும். மீண்டும் தட்டுத்தடுமாறி எழ முயலும். ஆசாத் மைதானத்தில் தொடங்கிய எங்கள் வளர்ச்சி பாதையில் சச்சின் பிஎம்டபிள்யூவில் செல்கிறான், நான் அதே பழைய கைனடிக் ஹோண்டாவில் செல்கிறேன்.  கடைசி டெஸ்ட் மேட்ச் விளையாடியபோது எனக்கு 23 வயது. நான் என்னவாக வேண்டும் என்று எனக்கோ என் தந்தைக்கோ எந்தத் தீர்மானமும் இல்லை. விளையாட வேண்டும், அது மட்டும் போதும் என்ற உணர்வுதான் என்னை இத்தனை காலமும் இயக்கிக்கொண்டிருக்கிறது... ஜீசஸ் கிறைஸ்ட் இவன் எங்கு வந்திருக்கிறான்!

சார் மன்னிச்சுங்குங்க, இன்னிக்கு வியாழக்கிழம, அதான் தர்காவுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். பத்து நிமிசம், போயிடலாம். இங்கயிருந்து நேரா உங்கள வீட்டுல விட்டுட்டு நான் கிளம்பறேன்.

அவன் தலையில் அணிந்திருந்த பச்சை வண்ண சத்தர், 96 உலகக் கோப்பை அரையிறுதிக்கு என்னை அழைத்துச் சென்றது. உன் பெயர் என்ன என்று இப்போது கேட்டால் என்ன சொல்வான்? இவன் உண்மையாகவே இவன்தானா? ஏன் என்னை இவ்வளவு தூரம் தொடர்கிறான். கடந்தகாலத்திற்குள் மூழ்கடித்து எதை நினைவூட்ட விரும்புகிறான்? என்னை எதையோ சொல்ல வைக்கிறான், அதன்மூலம் அவனுக்கான பதிலைப் பெற முயல்கிறான். எனக்கு ஓரளவு புரிகிறது. நான் யார் என்பது அவனுக்குத் தெரிய வேண்டும். எத்தனை முறை என்னை நிராகரித்தாலும் அடுத்த நாளே வலை பயிற்சிக்கு வந்துவிடுவேன். அப்பா எனக்குச் சொல்ல மறந்த மந்திரங்கள் என்னை வந்தடையாமல் இல்லை. 'நீ நன்றாக ஆடினாலும் ஆடாவிட்டாலும், தோற்றாலும் வென்றாலும் பயிற்சியை மட்டும் விட்டுவிடாதே.' ஆச்ரேகர் சொன்னது இன்னமும் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அணியிலிருந்து தூக்கி வீசப்படும்போதெல்லாம் வலை பயிற்சிதான் எனக்குத் தோள் கொடுத்தது. ரஞ்சி, இரானி என அடித்து நொறுக்கி மீண்டும் இந்திய அணிக்குள் செல்வேன். சில நேரம் காரணங்கள் இருக்கும், பல நேரம் இருக்காது. மீண்டும் தூக்கி வீசப்படுவேன். இன்றுவரை என்னைத் தாங்க அண்ணனோ, தட்டிக்கொடுக்க நிர்வாகமோ இல்லை. இதுதான் நான், என் திறமையே நான். என் ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் நான் யாரென்று, ஐ யெம்...

சார், வாங்க போலாம்.

யாரையாவது அழைத்து அங்கே உங்களுக்கு என்ன தெரிகிறதென்று கேட்க வேண்டும் போலிருந்தது. நான் விரும்பி அணியும் நீலநிறச் சட்டை, தொப்பி, தங்கச் சங்கிலி, காப்பு... இவன் யாரென்று இப்போது புரிகிறது. அப்பா சொல்லத் தவறிய இரண்டு மந்திரங்களை, வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் தெரியப்படுத்த வந்திருக்கிறான். அவன் அணிந்திருந்தது என்னுடைய தங்கச் சங்கிலி. அதில் நான் ஆசையாகப் பொறித்த வாசகம், 'வா முத்தமிடு. நான் காஞ்சுர்மார்கின் இளவரசன்'

எப்படி உங்களால எல்லாத்தையும் ஹாண்டில் பண்ண முடிஞ்சது?

வெல், எனக்கு நானே கதைகள் சொல்லிப்பேன். அம்மா சொன்ன கதைங்கள மாத்திச் சொல்லிப்பேன், இல்லன்னா நானே புதுக்கதைய யோசிப்பேன்.

வாவ் என்ன கதைங்க அது...

சரியா ஞாபகமில்ல, நான் ஃபேஸ் பண்ற பால்ஸ கடவுளோட பால், சாத்தானோட பால்னு பிரிச்சுக்குவேன். கடவுளோட பால்னா டிஃபென்ட் பண்ணுவேன், இல்லன்னா கிரவுண்ட் ஷாட் ஆடுவேன். சாத்தானோட பால்னா அட்டாக் பண்ணுவேன். சில நேரங்கள்ல சாத்தான் ஏமாத்திடுவான், அவுட்டாயிடுவேன்.

வாரே... வேற ஏதாவது ஞாபகமிருக்கா?

ரெண்டு நண்பர்கள் பத்தின ஒரு கத, ராஜாவுக்கான தகுதியுள்ள ஒருத்தன் தன்னோட துறவி நண்பன ராஜாவாக்கிட்டு இவன் துறவியாகிடுவான்னு போகும். மறந்துட்டேன்.

சரி, உங்கள ஏன் தொடர்ந்து நெக்லெக்ட் பண்ணாங்கன்னு யோசிச்சிருக்கீங்களா?

எனக்கு என் கேம்தான் முக்கியம். மத்த விஷயங்கள்ல இன்டிரஸ்ட் இல்ல.

உங்க கோச் ஆச்ரேகரோட செல்லப் பிள்ளைகள் உங்க ரெண்டு பேரையும் அவர் முன்னாடி நிறுத்தி, அவரோட ஃபேவரிட் யாருன்னு கேட்டா, யாரச் சொல்லுவார்.

பதிலேதும் சொல்லவில்லை, ஆனால் என் முகத்தில் பெருமையும் உற்சாகமும் வெளிப்பட்டிருக்கக் கூடும். சச்சின், அசார், கங்குலி என இவர்கள் கொண்டாடும் எவரை விடவும் பெரிய கொம்பன் நான். அவன் கைகளில் எதையோ மறைத்து வைத்திருந்தான். பழைய ஆங்கிலச் செய்தித்தாள்கள். சட்டென்று என்னைப் பிடித்திழுத்து அதற்குள்  போட்டுவிட்டான்... எங்கும் மரண அமைதி. பின்னணியில் ஏதோ முணுமுணுக்கும் சத்தம். உற்றுக் கேட்கக் கேட்க அவ்வளவும் ஆபாச வசைகள். என் அப்பா கூட இப்படியெல்லாம் பேசத் தயங்குவார். கெட்டுப் போன பாலின் மணம் வீசும் வார்த்தைகள் அவை. என்னால் அங்கு நிற்க முடியவில்லை, முட்டி மோதி வெளியே குதித்துவிட்டேன்.

இங்க பாருங்க மிஸ்டர்... யாரு என்ன வேணாலும் எழுதலாம், சொல்லலாம். ஏழ, ஸ்லம் பையன், சாதி, மதம்னு என்ன வேணாலும் சொல்லிக்கட்டும். இது எதுவுமே நான் இல்ல, நான் எதுன்னு நான் நினைக்கிறனோ அதுமட்டும்தான் நான்.

கணபத்

???

என் பேரு கணபத்

***

அவன் யாருன்னே தெரியல, ஒருவேள எனக்கு நானே சொல்லிக்குற கதையா அவன், இல்ல எல்லாரோட கண்ணுக்கும் தெரியற மனுசன்தானா. ஒன்னும் புரியல...

சரி விடு, வந்து சாப்பிடு, லன்ச் ரெடி, ஈவ்னிங் வெளிய போணும், நிறைய வேல இருக்கு...

என்ன சொல்ற நீ, மதியம்தான் ஆகுதா? அரநாள்தான் வெளிய இருந்தனா?

என்னாச்சு உனக்கு,

இல்ல ஒன்னுமில்ல.

வந்து சாப்பிடு, நாளைக்கு கெட் டுகெதர்னு ஞாபகம் இருக்கா இல்லையா?

ஆம் எனத் தலையாட்டிக்கொண்டேயிருந்தேன். நீண்ட யோசனையில் இருந்திருப்பேன் போல, தோளைக் குலுக்கினாள்.

வா....ட்....?

கடைசியா அவன் ஒன்னு கேட்டான்

என்ன, நாளைக்கு என்ன மெனுன்னு கேட்டானா?

கமான், டோன்ட் பி சில்லி...

தென் வாட்

உங்களுக்கு யார் மேலயாவது கம்ப்ளைண்ட்ஸ் இருக்கான்னு...

இருக்கா என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.

அப்சல்யூட்லி நோ. ஐயெம் வினோத் காம்ப்ளி, ஸ்டில் எ ப்ரின்ஸ்.


நீலம், ஜனவரி 2023

Comments

Popular posts from this blog

இன்னும் எத்தனைக் காலம்தான்...?

அத்தனை எளிதில் கிட்டுமா ஜிஸ்மானியத்தான மிஃறாஜ்

பேரன்பும் பெருங்கோபமும்