பேரன்பும் பெருங்கோபமும்
திரை
அன்புள்ள இரண்டாம் ‘அங்கிள்சாம்’,
அண்மையில் நான் பார்த்த ‘பேரன்பு’ திரைப்படத்தைப் பற்றிய என்னுடைய சில கருத்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து இதை எழுதுகிறேன். இதுநாள்வரையில் நீங்கள் எவ்வளவு ‘ஆசீர்வதிக்கப்பட்ட’ திரைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக இதை எழுதுகிறேன்.
அத்தியாயம் ஒன்று: பேரன்பு மிகையானது.
“சொற்களின் அரசியல் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.”
எங்கள் நாட்டில் ஒரு தத்துவமுண்டு, “தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.” எளிமையாகச் சொல்வதெனில் ‘அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு’ என்று எங்கள் முன்னாள் கவிஞரின் வரிகளைத்தான் சொல்ல வேண்டும். “ஏன் உங்கள் அம்மாக்களுக்கு அறிவிருப்பதில்லையா?” என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு என்னுடைய பதில்: அதெல்லாம் அப்படித்தான், உங்களுக்கு அது புரியாது.
உங்களுடைய ‘உலகமயமாதல்’ கோட்பாட்டின் விளைவு எங்கள் புரட்சிகர இயக்குநர். ஏன் இப்படிச் சொல்கிறேனென்று உங்களுக்குக் குழப்பமாயிருக்கலாம். எங்கள் இயக்குநரின் இரண்டாவது படத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு: விளம்பரங்களைப் பார்த்து ‘மேற்கத்திய’ நாய்க்குட்டியொன்று வேண்டுமென்று மகள் கேட்கிறாள். அப்பாவிடம் பணமில்லை, ஆனால் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்ததால் அதற்காகக் கடுமையாக உழைக்கிறார். எந்த அளவுக்கென்றால் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடியினரைக் கொல்ல நினைக்குமளவுக்கு. இதில் நாய்க்குட்டியும் பழங்குடியினரும் குறியீடுகளே என உங்கள் அறிவுக்கு விளங்காமற் போகாது. உங்கள் அறிவால் விளைந்த கோட்பாட்டின் எதிர்விளைவுதான் எங்கள் இயக்குநர்.
அறிவை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை; அன்பு செலுத்துவதன் வழியாக உலகை மாற்ற விரும்புகிறோம். யார் மீதாவது அன்புசெலுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்; யாரைப் பார்த்தாவது இரக்கப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்; உரிமை, விடுதலை என்பதெல்லாம் எங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி. பேரன்புதான் எங்கள் கொள்கை.
ஆனால் இவையெல்லாம் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதே. இப்படிச் சொன்னதற்காக என்மேல் நீங்கள் கோபப்படக்கூடாது, உண்மெய் அதுதான்.
இந்த அத்தியாயத்தை முடிக்கவேண்டிய இடம் வந்துவிட்டது. அப்பாவின் அன்பே பேரன்பு. அம்மா தன் ‘கடமை’யை மறந்துவிட்ட பிறகு, அப்பா ‘பெருந்தன்மை’யோடு அம்மாவாக மாறுவதே பேரன்பு.
“உங்கள் நாட்டில் அம்மாவினுடைய அறிவு ‘பேரறி’வாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதா,” என்று தயவுசெய்து கேட்காதீர்கள். “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லையென்று,” என காமத்தைக்கூட அம்மாக்களின் உரிமையாக்காத நாங்கள், அவர்களின் அறிவை ஏற்றுக்கொள்வோமா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எங்களுக்குக் கட்டுப்பட்டால் அது ஏற்கப்படும், ஆனால் பெரும்பாலும் அதைத் ‘திமிர்’ என்றே நாங்கள் கருதுவோம்.
அத்தியாயம் இரண்டு: பேரன்பு ஆபத்தானது
“மனிதன் என்பவன் சமூக விலங்கு”
எங்கள் கலையும் இலக்கியங்களும் மக்களுக்கானவைதாம். ஆனால் எந்த மக்களுக்கானவை என்ற கேள்விக்கான பதிலில்தான் உங்களுக்கும் எங்களுக்குமான வேறுபாடுள்ளது.
வயதுவந்தோரின் பாலியல் சிக்கலைப் பற்றிய உரையாடலே எங்களிடம் இல்லாதபட்சத்தில், எங்கள் புரட்சிகர இயக்குநர் குழந்தைகளின் பாலியல் சிக்கலை(!)க் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதிலும் தொலைக்காட்சியில் வரும் தன் மனம் கவர்ந்த நடிகனுக்கு முத்தம் கொடுக்கும் குழந்தையைப் பார்க்கும் அப்பா, எத்தகைய உளவியல் சிக்கலுக்கு ஆளாவான் என்பதை எங்கள் இயக்குநர் ஆகச்சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறித்துவைத்துக்கொள்ளுங்கள், எங்கள் முற்போக்கிற்கு முன்னே உங்களின் முதலாளித்துவம், பேரரசுவாதம் யாவும் பணியப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
நகரங்களின் கோர முகத்தை உங்கள் நாட்டிலேயே பார்த்திருப்பீர்கள். பிற ஊர்களிலிருந்து வேலை வாய்ப்புக்காகவும் தொழிலுக்காகவும் குடியேறியவர்களால்தான் நகரங்கள் இத்தகைய நிலைக்குள்ளாகியிருக்கிறது என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆனால் எங்கள் நாட்டில் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது. யாரையும் நம்ப முடிவதில்லை. குழந்தைகளை அறையிலேயே பூட்டிவைத்துச் செல்லும் அவலநிலைக்குத் தள்ளியிருக்கிறது. மனிதர்கள் பாதுகாப்பாக - அமைதியாக வாழமுடியாத, மனிதர்கள் மட்டுமல்ல குருவிகூடப் பாதுகாப்பாக வாழ முடியாத இடமாக நகரங்கள் மாறிவிட்டன. நகரம் எவ்வளவு இரக்கமற்றதென்றால், ‘பேரன்’பின் கடற்கரைக் காட்சியைப் பாருங்கள்.
ஆனால் இந்தக் காட்சி; காந்தி இரட்டை வாக்குரிமையை எதிர்த்து உண்ணாநோன்பு இருந்த வேளையில், அம்பேத்கருக்குக் காந்தியின் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று நெருக்கடி தந்தபோது, “இலட்சக்கணக்கான மக்களின் இனவிடுதலைதான் முக்கியம். காந்தியென்ற தனிமனிதன் முக்கியமல்லன்,” என்று பெரியார் கூறியது நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா அங்கிள்?
எங்கள் நாட்டு எளிய மக்கள் எந்த வேறுபாடுமின்றி மனிதர்களையும் பிற உயிர்களையும் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது எனக்கும் தெரியும். ஆனால் பாருங்கள், அவர்கள் சுத்தமாக இருப்பதில்லை, அவர்களுக்குப் போதிய கல்வி இல்லை, ஆதலால் அவர்களின் ‘அன்பை’ எங்கள் இயக்குநர்கள் (ஒருசிலர் தவிர) காட்சிப்படுத்துவதில்லை. ஒடுக்கப்படும் மக்களின் போக்கிடங்களாக இருப்பவை அந்த நகரங்கள்தான். சரி, அதை விடுங்கள்.
நகரங்கள் வாயிலாக எங்களை இயற்கையிடமிருந்து அந்நியப்படுத்தும் உங்களின் உலகமயமாதலுக்குப் பேரன்பினால் எங்கள் இயக்குநர் பதில் சொல்லி யிருக்கிறார். மனிதர்கள் இல்லாத இடத்தில், குருவி சாகாத இடத்தில், மரப்பொருட்களாலான ‘eco friendly’ வீட்டில் மின்சாரம் தவிர்த்து வாழும்முறையைப் பதிவுசெய்திருக்கிறார். நிலஆக்கிரமிப்பு, குழந்தைகள் காப்பகங்களின் வன்கொடுமை குறித்தும்கூட எங்கள் இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். உங்களின் ஒவ்வொரு ஆதிக்கத்திற்கு எதிராகவும் எங்களின் ‘இந்தியத் தமிழ்’ குரல் ஒலித்திருக்கிறது, இனியும் ஒலிக்கும்.
பெண்களை இரக்கமற்றவர்களாகக் காட்சிப்படுத்தியதுதான் ‘ஒரேயொரு’ குறையாகப் போய்விட்டது. ஏனென்றால், எங்கள் இயக்குநர் தன்னுடைய முந்திய படத்தில்தான் பெண்ணியம் பற்றிப் பேசினார். உடை, உடலுறவு, மதுவருந்துதல் என விரிந்த தளத்தில் பெண்ணியம் பேசியிருப்பார். பார்க்கவில்லையென்றால் அவசியம் பாருங்கள். அதனால்தான் இந்தப் படத்தில் தன் கருத்தைத் திணிக்காமல் ‘யதார்த்த’மாக முயற்சி செய்திருக்கிறார், வேறொன்றுமில்லை!
ஆண்கள் நாங்கள் அப்படியிப்படி இருந்தாலும், பெண்கள்தான் குமுகாயத்தின் அடிப்படையல்லவா! அவர்கள் தங்களின் கடமையிலிருந்து தவறும்போது அதைப் பதிவுசெய்ய வேண்டியது எங்கள் கடமை!
அத்தியாயம் மூன்று: பேரன்பு தவிர்க்க முடியாதது
“குழந்தைகளால் அவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக வாழமுடிந்ததே இல்லை.”
மதிப்பிற்குரிய அங்கிள், இந்தவொரு அத்தியாயத்தை மட்டும் கொஞ்சம் உணர்ச்சிகரமாய் எழுதிக்கொள்கிறேன். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசிர்வதிக்கப்பட்ட, பரிசுத்தநிலையில் இதை எழுதுகிறேன்.
(ஏன் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் தேவையில்லாமல் ஏதேதோ எழுதுகிறாயென்று நீங்கள் கேட்கலாம். எங்கள் புரட்சிகர இயக்குநரின் படம் பற்றிய உரையாடல் என்பதால் அவர் படங்களைப் போலவே ஆங்காங்கே ‘நிலைத்தகவல்’ பதிவிட்டேன்!)

பொதுப் புத்தியை எங்கள் இயக்குநர்கள் சிதைப்பதில்லை, குலைப்பதில்லை, அடிப்படையை மாற்றாமல் அதைப் புதுப்பிக்கிறார்கள். இந்தப் பொதுப் புத்தியைப் பற்றி உங்களுக்குச் சில குழப்பங்கள் இருக்கலாம். அமைதிக்கெதிரான எந்த நிகழ்வு நடந்தாலும் அதற்குக் காரணமாகச் சிவப்புத் தீவிரவாதத்தையோ பச்சைத் தீவிரவாதத்தையோ உலக மக்ககள் முணுமுணுக்கிறார்கள் என்றால் அந்தப் பெருமை உங்களுக்குத்தானே. அப்படித்தான் நாங்களும் எங்கள் நாட்டில் கருப்புத் தீவிரவாதத்தையும் நீலத் தீவிரவாதத்தையும் இனங்கண்டு பொதுப் புத்தியாக்கியிருக்கிறோம். இன்று சிலர் அந்த பொதுப்புத்தியை அசைக்கப் பார்க்கிறார்கள், தகர்க்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்காகவே சில காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார் எங்கள் இயக்குநர். அப்பா தன் முன்னாள் மனைவியைக் காணப்போகும் காட்சியில், கதைக்கும் காட்சிக்கும் தொடர்பே இல்லாமல் “தங்கம் பேரை ஸ்டெல்லானு மாத்திட்டோம்,” என்றொரு வசனம் வரும். அக்காட்சி ஒருசோற்றுப் பதம். அப்பாவின் துணையாக மாறும் திருநங்கையின் பெயர் மீரா. சரி, பெயரில் என்ன இருக்கிறது?
‘பாப்பா’ குழந்தையா இல்லையா என்பதே திரைப்படத்தில் பெரிய குழப்பமாக இருக்கிறதே! பதினெட்டு வயதுக்குட்பட்ட அனைவரையுமே குழந்தைகள் என்று ‘உலகச் சுகாதார நிறுவனம்,’ வகைப்படுத்துகிறது. அங்கிள் அந்நிறுவனம் உங்கள் அதிகாரத்துக்குட்பட்டதுதானே, ஆகையால் எங்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. குழந்தையை மக்களோடு பழக விடாமல் தனிமைப்படுத்துவதுதான் தீர்வா, கல்வி அவசிய மில்லையா என்று அறிவைக் குடைந்து நீங்கள் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். ஆனால் எங்கள் சூழலிலிருந்து பார்த்தால்தான் வலி தெரியும். அண்மையில் கேரளா விலிருந்து ஒரு தாயார் எங்கள் ‘பேரன்பு’ பற்றிப் பதிவு செய்திருக்கும் காணொளியைப் பாருங்கள்.
ஆனால் அங்கிள், என்னுடைய மிகப்பெரிய அய்யம் என்னவென்றால், உங்களுக்கு எதிரான கருத்துகளை இவ்வளவு வலிமையாகப் பேசியிருக்கும் படத்தை உங்கள் நட்புநாடுகள் எப்படி வரவேற்றன, விருதுகளுக்கும் பரிந்துரைத்தன? நீங்கள் கருத்துணர்வுக்குப் பெரிதாக ஆதரவளிப்பவரல்லர் என்பது எனக்குத் தெரியும். இப்படி சொல்வது உங்களுக்குக் கோபத்தைத் தரலாம், ஆனாலும் உண்மெய் அதுதானே. உங்கள் பரிந்துரைதான் எனக்கு அச்சத்தைத் தருகிறது. நீங்கள் பரிந்துரைத்த திரைப்படமே உங்களுக்கு எதிரான கருத்தியலை இவ்வளவு வலிமையாகப் பேசுகிறதென்றால், நீங்களும் உங்கள் நட்பு நாடுகளும் விருதுகளை வாரி வழங்கியிருக்கும் திரைப்படம் எப்படி இருக்குமோ?
எங்களுக்குள் இருக்கும் படிநிலை அரசியல் பற்றி தெரிந்தோ தெரியாமலோ நீங்கள்தரும் விருதுகள் எங்கள் இயக்குநர்களுக்கும் பொதுப்புத்திக்கும் பலமாக அமைந்துவிடுகின்றன. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். ஒரேயொரு வருத்தம், மலையாள நடிகருக்குப் பதில் எங்கள் உலக நடிகர் நடித்திருந்தால், எங்கள் நாட்டு உளவாளியாகப் பச்சைத் தீவிரவாதத்தை எதிர்த்து உங்கள் நாட்டை ஆபத்திலிருந்து காத்ததற்குக் கைமாறாக, குறைந்தபட்சம் ஒரு ‘ஆஸ்கார்’ விருதாவது வழங்கியிருப்பீர்கள். ஆனால் எங்கள் இயக்குநர் உங்கள் கோட்பாட்டிற்கு எதிரானவர். அதனால்தான் மீண்டும் குறியீடாக ‘மேற்’கிலிருந்து நடிகரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கட்டண உயர்வால் அஞ்சலில் அனுப்பமுடியவில்லை, அதனால் இங்கே பதிவிடுகிறேன், படித்துக்கொள்ளுங்கள்.
பேரன்பின் பெருங்கோபத்துடன் உங்கள் சகோதரனின் மகன்
இரண்டாம் மண்ட்டோ
(சாதத் அசன் இறந்துவிட்டான்)
காலச்சுவடு, மார்ச் 2019

Comments
Post a Comment