புதுமையின் நாஸ்டால்ஜியா
திரை
அன்பார்ந்த வாசகர்களே, உங்களுக்கு அற்புதமான ஒரு கதையைச் சொல்லலாம் என்றிருந்தேன். நீங்கள் இதுவரை கேட்டிராத, நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் மரபுகளைக் கட்டுடைக்கும் கதை. இயற்கையின் இயல்புகளை வெளிப்படுத்தும் அக்கதையைச் சொல்ல நினைத்தபோதுதான் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றார்கள். ஆகையால் முதலில் அதைப் பகிர்ந்துகொள்கிறேன்.
அதற்கும் முன்பாக அதுவைதம் பற்றிச் சொல்லிவிடுகிறேன். ஆதிசங்கரரின் தத்துவக் கோட்பாடுதான் அதுவைதம். ‘இருப்பது ஒன்றே’ என்பது அக்கோட்பாட்டின் சாரம்; இருப்பது பரம்பொருள் ஒன்றே, மற்றனைத்தும் மாயை; உயிர்களனைத்தும் பரம்பொருளின் வடிவங்கள். நம் அனைவருக்குள்ளும் இருக்கிற உயிர் (அ) ஆன்மா பரம்பொருள். உடலும் உடல்சார்ந்த உணர்வுகளும் உடல்சார்ந்த வாழ்க்கையும் மாயை. இருளில் கயிற்றைப் பாம்பென நினைப்பதுபோல. காலம், நேரம், இடம், மனம் என்பதெல்லாம் வெறும் கனவு. உடல்சார்ந்த தர்க்கங்கள் நீங்கும்வரை பாம்பெனும் மாயை நீங்காது. ஆன்ம ஒளியில் மனமெனும் மாயை நீங்கி, கனவிலிருந்து விழித்துக்கொண்டால் பரம்பொருள் எனும் நிலையை அடையலாம் என்கிறார் ஆதிசங்கரர்.
●
கே. பாலசந்தர் தன் திரைப்படங்களில் மரபை மீறும் சில கதைகளை, கதை மாந்தர்களைத் தனக்கே உரிய நாடக பாணியில் கையாண்டிருப்பார். ‘அபூர்வ ராகங்கள்’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அரங்கேற்றம்’, ‘மன்மத லீலை’, ‘நெற்றிக்கண்’ போன்றவை என் அறிவுக்குட்பட்ட எடுத்துக்காட்டுகள். அவருடைய காலத்தில் அவர் உண்டாக்கிய அதிர்ச்சி மதிப்பீடுகளில் பாதியைத்தான் இன்றைய இயக்குநர்கள் உண்டாக்குகிறார்கள். அதுவே மாற்றுமுயற்சி எனக் கொண்டாடப்படுகிறது. அப்படி தனக்கே உரிய நாடக பாணியில் சில தேய்வழக்குகளை தியாகராஜன் குமாரராஜா கையாண்டிருக்கும் படைப்புதான் ‘சூப்பர் டீலக்ஸ்’.
‘எது தர்மம்?’
‘எது தேவையோ அதுவே தர்மம்!’
என்ற புராண வரிகளோடுதான் தியாகராஜா குமாரராஜாவின் முதல் படமான ‘ஆரண்ய காண்டம்’ தொடங்கும். கிட்டத்தட்ட இதே பொருளோடுதான் அவரது இரண்டாவது படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ முடிவடைகிறது. இதற்கு ஏன் பத்தாண்டுகள் காத்திருந்தார் எனத் தெரியவில்லை. மாற்றுத் திரைப்படம் என்பது சமூகக்கருத்துகளை மாற்றுவது. ‘கலை’ என்பதற்குக் கலைத்துப் போடுவது என்ற பொருளும் உண்டு (உபயம்: சிவசங்கர் எஸ்.ஜே., செந்தூரன்) நம் இந்தியச் சூழலின் மாற்று முயற்சி; பொதுப்புத்தியைச் சிதைப்பது; மையத்திலிருந்து விலகி விளிம்பில் நின்று பார்ப்பது. ஆனால் ‘சூப்பர் டீலக்ஸ்’ முப்பரிமாண கண்ணாடியைப் போட்டுக்கொண்டு மையத்திலிருந்தே பார்க்கிறது.
திருநங்கைகள் குறித்த அடிப்படை தெளிவுகூட இல்லாமல், அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காகவே உருவாக்கப்பட்டதாக இருக்கிறது ஷில்பா கதாபாத்திரம். ஜோதியின் முன்பாக சேலை உடுத்தும் காட்சி அபத்தமெனில், பின்னணியில் ஒலிக்கும் பாடல் வக்கிரம். ஷில்பாவின்மீது இரக்கமும் ஆதங்கமும் உருவாக வேண்டும் என்ற மெனக்கெடலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அவருக்கான திரைக்கதை. திருநங்கைகள் சமூக அளவில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துவரும் சூழலில் இப்பாத்திரப் படைப்பு பிற்போக்குத்தனமாகத் தெரிகிறது. பெண்ணாகத் தன்னை உணரும் ஷில்பாவை மீண்டும் ஜோதியுடனே வாழ நிர்ப்பந்திப்பது அன்பின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை. கதாசிரியரோ இயக்குநரோ திருநங்கைகள் குறித்த சிறு கள ஆய்வு செய்திருந்தால்கூட இந்த அபத்தம் நிகழ்ந்திருக்காது. இதில் ஜோதியின் உளவியலும் தர்க்கங்களும் மறைக்கப்பட்டுவிட்டன. கல்லானாலும் கணவன் என்ற மரபு மீறப்படாமல் காக்கப்படுகின்றது.
படத்தின் முதன்மை வில்லன் பெயர் பெர்லின். சிறுவர்களைக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தும் ‘இசுலாமிய தாதா’ கதாபாத்திரத்தின் பெயர் இடிஅமீன். பலகோடி பேர் இறந்த சுனாமியில், சுனாமி ஆண்டவரால் காப்பாற்றப்பட்டதாக நம்பும் கிறித்துவ மதபோதகர் பெயர் அற்புதம் (எ) தனசேகர். அவரது விசுவாமிக்க உதவியாளர் பெயர் இராமசாமி.
மருத்துவமனையில் தன் மகனுக்காகப் பிரார்த்திக்கும் தனசேகரைப் பார்த்து, ‘மதத்தைப் பரப்ப இதுவா இடம்?’ என்று கோபமாகக் கேட்பாள் மனைவி லீலா. உலகமயமாதலுக்குப் பின் சிறுபான்மைப் பிரிவினரைக் குற்றச்செயல்கள் செய்பவராகக் காட்சிப்படுத்துவது தமிழ்த் திரைச்சூழலில் தொடர்ந்து நடந்துவருகிறது. மீண்டும் இந்தத் தேய்வழக்குகளை எழுதுவதற்கா நான்கு திரைக்கதையாளர்கள். பொதுப்புத்தியை எந்தவிதத்திலும் கேள்விக்குட்படுத்தாத படைப்பை ‘மாற்று சினிமா’ என்று எப்படி ஏற்றுக்கொள்வது?

“இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?” (புதிய ஏற்பாடு, மத்தேயு 7:4)
●
நான் சொல்ல வந்த கதையைச் சொல்லிவிடுகிறேன். அறிவுத்திறனற்ற நான்கு ஆண்கள், யானையைப் பார்க்கக் காட்டிற்குச் சென்றார்களாம். ஒருவன் காலைத் தொட்டுப் பார்த்து அதுதான் யானை என்றானாம், மற்றொருவன் வயிற்றைத் தொட்டுப் பார்த்து அதுதான் யானை என்றானாம். அடுத்தவன் காதை தொட்டுப் பார்த்து அதுதான் யானை என்றானாம். நான்காமானவன் கொஞ்சம் யோசித்து ‘நாம் தொட்டுக்கொண்டிருப்பது ஒரே யானையின் பாகங்களை’ என்றானாம். அப்போது ஒரு அசரீரி கேட்டதாம், ‘நீங்கள் தொட்டுக்கொண்டிருப்பது யானையை அல்ல, கரடியை’ என்று.
காலச்சுவடு, மே 2019

Comments
Post a Comment