அத்தனை எளிதில் கிட்டுமா ஜிஸ்மானியத்தான மிஃறாஜ்





அவ்வாய லோடும் பைத்துல் முகத்தீ சழகுமிகுஞ்
செவ்வான பள்ளித் திருவாய லாமதிற் சென்றுமதிற்
றவ்வாம லங்ங னகத்தா சவிபுதர் தங்களின் கோன்
சவ்வான தூணைக் கைவிர லாற்றமர் தானிட்டாரோ
                                                                                    (மிகுறாசு மாலை: 111)

நபிகள் நாயகம் விண்ணுலகம் சென்றடைவதற்கும் முன் தொழுகைக்காகப் பைத்துல் முகத்தீசிற்குச் செல்லும்போது, தாம் ஏறிவந்த புறாக் என்னும் வாகனத்தை அங்குள்ள தூணில் தம் சுட்டுவிரலால் துளைசெய்து அதில் கட்டி, தம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்களோடு கூடியுற்றார் என்ற பொருளில் ஆலிப் புலவர் பாடிய பாடலே இது.

இப்பாடலை ஆலிப் புலவர் அரங்கேற்றுகையில், ‘சவ்வான தூணைக் கைவிர லாற்றமர் தானிட்டாரோ’ என்ற வரியினைப் புலவர் உரைக்கும்போது முச்சுடர் அண்ணல் பெருமான் அவ்விடத்தில் தோன்றி, “ஆலி, அச்செய்தி அல்லாஹ்வுக்கும் ஜிப்றயீலுக்கும் எனக்குமே தெரியும். உனக்கு எவ்வாறு தெரியும்?” என்று வினவினார்களாம்.

கனவு - கனவிலி - குதிரை

கனவு என்பதற்கு ஆழ்மன எண்ணம், பாலியல் சிந்தனை, விருப்ப நிறைவேற்றம், கவனிக்கப்படாத பதிவுகள், இறை வெளிப்பாடு, எதிர்கால ஆருடம், எதிர்மறை உணர்வு, மனநோய்க்கான அறிகுறி, மரபுத் தொடர்ச்சி, தொன்மங்கள் எனப் பற்பல அர்த்தப்பாடுகள் சொல்லப்படுகின்றன. அந்தவகையில், நீலம் - யாழி தயாரிப்பில், ராஜேஷ் எழுத்தில், மனோஜ் லியோனல் ஜேசன் இயக்கியிருக்கும் ‘குதிரை வால்’ திரைப்படத்தில் வரும் குதிரை எதைக் குறிக்கிறது? அதற்கும் முன்பு பொதுவாகக் குதிரை எதைக் குறிக்கிறது என்று யோசித்தால் ஞானம், வேகம், வீரம், பாலுணர்ச்சி, பெண், அந்நியர் எனப் பல குறியீடுகள் சொல்லப்படுகின்றன.

‘குதிரைவால்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கதாசிரியர் ராஜேஷ், குதிரை என்றால் கணவாய் வழியாகக் குதிரையில் வந்தவர்களைக் குறிக்கிறது என்றார். பிரதியில் அப்படித்தான் அர்த்தப்படுத்தப் பட்டிருக்கிறதா என்றால் இல்லையென்றே சொல்லலாம். இரு கதாபாத்திரங்கள் குதிரையைப் பாலியல் குறியீடு என்றே விளக்கம் தருகின்றனர். மேலும் நாயகனின் ஆண்மைக் குறைவே குதிரையாக வெளிப்பட்டுள்ளதென்றும் நாயகன் தனக்குள்ளாகப் பெண்மையை உணரும் காரணத்தினாலேயே அவனுக்குக் குதிரைவால் முளைத்திருப்பதாகவும் விளக்கம் தரப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே நாயகன் கனவிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான். இங்கு கனவானது புதிராகவும் கனவின் விளைவான வால், உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகவும் கருதப்படுகின்றன. தீர்வைத் தேடி நாயகன் பலரை அணுகுகிறான். நனவிலுள்ள பிரச்சினைகளுக்கான வடிகாலாகக் கனவு வருகிறது என்ற கோட்பாட்டிலிருந்து விலகிக் கனவுப் பிரச்சினை யிலிருந்து விலக நனவைப் பயன்படுத்திக்கொள்கிறான் நாயகன். காவியத்துவமான முடிவை நோக்கிச் செல்லும் கதையில், கனவையும் கனவிலியையும் காரண காரியத்தோடு இணைக்க முயன்றிருக்கிறார். ஒருவகையில் அதுவே பிரச்சினையாகவும் ஆகிவிடுகிறது. அதைப் பிறகு பார்ப்போம்.

கனவு, நனவு என்ற கதையில் எது கனவு, எது நனவு என்ற புதிராட்டம் சுவாரசியமாக இருக்கும். கன்னட சினிமாவான ‘லூசியா’ இந்தப் புதிராட்டத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கும். ‘குதிரைவா’லில் அந்தச் சுவாரசியம் இல்லை, மாறாக கனவுக்கானக் கனவின் விளைவாகத் தோன்றிய வாலுக்கான காரணத்தை விவரித்திருக்கிறார்கள். இந்த இடத்தில்தான் ஃப்ராய்டு வருகிறார். பாலியல் இச்சைகள்தான் கனவுக்கான மூலம் என்ற ஃப்ராய்டியச் சிந்தனையிலிருந்தே தீர்வைக் கண்டடைந்திருக்கிறார்கள். இது அபத்தமான ஒன்று. ஃப்ராய்டின் அக்கோட்பாட்டைப் பலரும் ஆதாரப்பூர்வமாக நிராகரித்திருக்கிறார்கள்.

இப்படி யோசித்துப் பார்க்கலாம், பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கதாசிரியர் ராஜேஷ், ஃப்ராய்டுக்கு எதிராகவே பேசினார். தயாரிப்பாளர் பா. இரஞ்சித்தும் தொன்மத்தை இன்னொரு தொன்மம் கொண்டுதான் எதிர்க்க முடியும் என்ற பொருளில் பேசினார். இவ்விரண்டு கருத்துகளைக் கொண்டு மீண்டும் குதிரையை ஆராயலாம். குதிரைமீது வந்தவர்களின் குறியீடாகக் குதிரையையும் அதன் நீட்சியாக வால் முளைத்ததையும் கொள்ளலாம். மாற்றுத் தொன்மமான நீலி, ஆதிக்குடி, கனவுக்கு ஆரூடம் சொல்லும் மரபினர் ஆகியவற்றைக் கொண்டு கதாநாயகன் விடுதலை அடைகிறான் என்றே வைத்துக்கொண்டாலும், எந்தப் புள்ளியில் இம்மாற்றம் நிகழ்ந்ததென்று யோசித்தால், கணித ஆசிரியரும் ஜோசியரும் சொல்லும் பாலியல் குறியீடு, ஆண்தன்மை இழப்பு போன்றவைதான் நாயகனைத் தன் பால்யம் நோக்கித் தள்ளியிருக்கிறது. ஆக, குதிரை பாலியல் குறியீடாகவே நாயகனின் மனத்திலும் பார்வையாளர்கள் மனத்திலும் பிம்பமாக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தொன்மங்கள் நினைவுகளில் ஓடும் கதையாகவே தங்கிவிட்டன. எம்ஜிஆரும் நாயகனுக்கான ‘ஆண்’ பிரச்சினையின் குறியீடாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இப்படியாகக் குதிரை கனவையும் கனவிலியையும் இணைக்கிற காரணப்படுத்துகிற ஒன்றாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

யதார்த்தம் - மாய யதார்த்தம் - காரணம்

மாய யதார்த்தம் என்ற கருத்தியல் உள்ளதை உள்ளவாறே காட்டும் யதார்த்தப் போக்கை எதிர்த்து உருவான கலகச் சிந்தனை. ஓவியத்தில் தொடங்கிய இம்மரபு இலக்கியம், சினிமா என விரிவடைந்துள்ளது. ‘குதிரைவா’லும் மாய யதார்த்த சினிமா என்றே அறிமுகமானது. அதிலேயும் இயக்குநர் தடுமாறியிருக்கிறார். சில உதாரணங்களோடு சொல்வது சரியாக இருக்கும், ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் ‘அவன் என்னைக் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கிறான்’ (தொகுப்பு: ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை) என்ற சிறுகதையில் கதைசொல்லியை ஒருவன் குடையால் தலையில் அடித்துக்கொண்டேயிருப்பான். வீடு, அலுவலகம், பொது இடம் என விடாது அடித்துக்கொண்டேயிருப்பான். கதைசொல்லி தடுத்தாலும் நிறுத்தமாட்டான். இப்படியாகக் கதை போகும். அவன் யார், எதற்காக அடிக்கிறான் என எதுவுமே கதையில் இருக்காது. இருப்பினும் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய கதை அது. வங்க இயக்குநர் மிருணாள் சென்னின் படமொன்றில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், ஒருநாள் காணாமல் போய்விடுவாள். வேலைக்குச் சென்றவள் வீடு திரும்ப நேரமானதால் குடும்பத்தினர் பரபரப்படைவார்கள். பல இடங்களில் தேடுவார்கள், புகார் அளிப்பார்கள். அடுத்த நாள் காலை அவள் வீடு திரும்புவாள். குடும்பத்தினருக்கு நிம்மதி. கதை அவ்வளவுதான். அவள் எங்கே சென்றாள் என்ற கேள்விக்குப் பதிலிருக்காது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் இயக்குநரிடம் கேட்டபோது, “அவள் எங்கு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். அது அவளது உரிமை. அதில் என்னால் தலையிட முடியாது” என்று பதிலளித்திருக்கிறார் மிருணாள் சென்.

யதார்த்தத்துக்கும் மாயத்துக்குமான வேறுபாடே இதுதான். இது ஏன் இப்படி இருக்கிறது என்றால், அது அப்படித்தான் என்றே பதிலாகச் சொல்ல முடியும். கனவில் வந்த குதிரையின் வால், நாயகனுக்கு முளைத்திருப்பது மாய யதார்த்தம். ஏன் முளைத்தது என்றால், முளைத்துவிட்டது அவ்வளவுதான் என்றுதான் மாய யதார்த்தப் படைப்பு கடந்து சென்றிருக்க வேண்டும். மாறாக, ஏன் வால் முளைத்தது, குதிரை என்பது என்ன, உன் வாழ்வில் உள்ள பெண் யார், அவள் என்னவானாள் என காரணங்களைத் தேடிக்கொண்டே செல்வதால் யதார்த்தப் படைப்பாகவே தேங்கிவிடுகிறது ‘குதிரைவால்’. கதையில் மாயம் இருக்க வேண்டும், மாறாக, கதை கூறும் விதத்திலேயே மாய யதார்த்தம் கையாளப்பட்டிருக்கிறது.

சொல்லப்படும் காரணங்களும் பழைமைத்தன்மையாகவே இருக்கின்றன. உன் வாழ்வில் உள்ள பெண் யார் என்பதற்கும் நாயகனின் ‘ஆண்’ பிரச்சினைக்கும் இணைப்பை ஏற்படுத்தி, ‘காமம் இல்லாக் காதலாக’ நாயகனின் பால்யத்திற்கு விரிகிறது களம். நாயகன் தன் பெயரை ஃப்ராய்ட் என்று சொல்லிக்கொள்வதற்கும், பால்யகாலத் தோழி தன் பெயரை நீலி என்று சொல்வதற்கும்கூடக் காரணத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள். கனவுப் பாத்திரமாக வரும் அஞ்சலி பாட்டீல், இருசாயி, வானவில், வான்கா எனத் தன் பெயரைச் சொல்வதோடு இதை இணைத்துப் பார்க்கலாம். குதிரைவால் மாய யதார்த்தப் படமா குறியீட்டுப் படமா என்ற கேள்விதான் கடைசியில் மிஞ்சுகிறது.

சரி, இப்படி யோசித்துப் பார்க்கலாம். நாயகன் கண்டது வேறொருவருடைய கனவாக இருக்கலாம். தன் கனவின் மூலம் வேறொருவரின் விடுதலைக்கு உதவியிருக்கலாம். குதிரை என்பது உண்மையாகவே குதிரை மீது வந்தவர்களாக இருக்கலாம். அதன்படி ஆதிக்குடியின் விடுதலைக்கு நாயகன் உதவியிருக்கலாம்... இன்னும் பல ‘கலாம்...’ எனத் திரையரங்கில் யோசித்துக்கொண்டிருக்கும்போது அருகில் யாரோ என்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். உற்றுப் பார்த்தால் அது நானேதான்... ஆத்தீ....

எழுத்து - திரை - முரண்

எழுத்தின் உலகைக் காட்சிகளால் விவரிக்கவே முடியாது. எழுத்தால் எழும் வாசிப்பனுபவம் கட்டற்றது. நபருக்கு நபர் மாறுபடுவது. திரை சட்டகத்துக்குட்பட்டது. ஆகச் சிறந்த கற்பனையானாலும் சட்டகத்திற்குள்தான் நிகழ முடியும். வாசகரின் மனத்தில் உருவாகும் பிம்பத்திற்கும் பார்வையாளரின் கண்ணில் தோன்றும் பிம்பத்திற்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டவர் நல்ல இயக்குநராகவோ திரைக்கதையாசிரியராகவோ உருவெடுக்க முடியும். அந்த வேறுபாட்டை உணராது தடுமாறிய திரைப்படங்களின் புதிய வரவாகக் ‘குதிரைவால்’ அமைந்துவிட்டது வருத்தத்திற்குரியது. குதிரைவாலின் உயிர் இலக்கியமாகவும் உடல் சினிமாவாகவும் இருக்கிறது. இலக்கிய மொழி காட்சி மொழியாவதும் திரைப்படக் காட்சி இலக்கியமாவதும் அத்தனை எளிதல்ல. கொஞ்சம் தவறினாலும் குழப்பமான, சாரமற்ற பிரதியாகப் படைப்பு சரிந்துவிடும்.

கனவு, மாய யதார்த்தம், உளவியல் எனப் பல படிமங்கள் கொண்ட கதையில் எந்தத் திசையில் செல்ல வேண்டுமென்ற குழப்பத்தால் புதிய மொந்தையில் பழைய கள்ளாகப் புளிக்கிறது படைப்பு. இறந்த மனிதர் தன்னுடன் உரையாடுவது, குறிப்பிட்ட நேரத்தில் தனக்கு மட்டும் கேட்கும் பாடல்கள், சிறு வயதில் ஏற்பட்ட குற்றவுணர்ச்சி ஆகியவை மனநலப் பாதிப்புக்கான அறிகுறிகள். ‘கனவுகள் அபத்தமானவை அல்ல, நீங்கள் மனநோயாளியாக இல்லாதவரை’ என்ற கோட்பாட்டோடு இதைப் பொருத்திப் பாருங்கள். நாயகனுக்கு இருப்பது மனநலப் பாதிப்பு. நாயகன் தொலைக்காட்சி பார்க்கும்போதெல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டோர் குறித்த செய்திகள் ஒளிபரப்பாகும். ஆக, வால் முளைத்ததுகூட அபத்தமான கனவு எனக் கொள்ளலாம்; அல்லது நனவில் தன் பிரச்சினைகளால் அழுத்தத்துக்குள்ளாகும் நாயகன், அதிலிருந்து வெளியேறக் கனவைப் பயன்படுத்திக்கொள்கிறான் என்றும் புரிந்துகொள்ளலாம். இருப்பினும் அது எந்த மாதிரியான விடுதலை என்று காண்பதில்தான் படைப்பாளர்களின் முற்போக்குப் பார்வை அடங்கியிருக்கிறது.

பிரச்சினையை எதிர்கொள்வதற்குப் பதிலாக அதிலிருந்து ஓடி விலகுவதும், தப்பிக்கப் பார்ப்பதும் பலவீனமான மனநிலை. இதற்கு மாய யதார்த்த முகமூடி போட்டுவிடுவது படைப்பாளிகளின் பணியல்ல. ‘குதிரைவால்’ நாயகனின் பிரச்சினையிருந்த உளவியல் பாதிப்பே. அவன் காணும் கனவுகூட உளவியலாக அவன் எதிர்கொள்ளும் வலியின் பிம்பமே. நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “நாயகனின் பால்ய காலத்திற்கும் நடப்புக் காலத்திற்கும் இடையேயான காலம் குறித்து எந்தத் தகவலும் இல்லை” என்று குறைபட்டுக்கொண்டேன். “இயேசுநாதர்கூட இளமையில் என்ன செய்தார் என்ற எந்தத் தகவலும் பைபிளில் இல்லை” என்றார். அந்நேரத்திற்கு அதை ஏற்றுக்கொண்டாலும், பின்னர் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தேன். இப்போதும் அது உளவியல் பிரச்சினையாகவே உள்ளது. திருமணப் பருவத்தைக் கடந்த வயதில்தான் நாயகனுக்குக் குதிரைக் கனவு வருகிறது. ‘ஆண்’ பிரச்சினை குறித்த அழுத்தங்கள் அதிகரித்ததனாலேயே அந்த வயதில் வால் முளைத்துள்ளது. வால் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை, ஏனெனில் அது பிறருக்குத் தெரிவதை அவன் விரும்பவில்லை. தன் உளவியல் பிரச்சினையிலிருந்து விடுதலை பெறவே பால்ய காலத்தைப் பயன்படுத்திக்கொள்கிறான்.

திரும்பத்திரும்பப் பழைமைக்குள் சென்று ஒளிந்துகொள்வதையே நவீன படங்கள் செய்கின்றன. இருசாயி, வானவில் பெயர்களைக் கொண்ட கதாபாத்திரம், “மலைதான் ஆதிக்குடி. மனிதர்கள் மலையைக் கெடுத்துவிட்டார்கள். மலைமீது ஏற்றிவிட்டால் வானத்தைத் தொட்டுவிடலாம். ஆனால் அந்தப் பயணத்தில் மலை பின்னகர்ந்துகொண்டே செல்கிறது” என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். ஆண் பிரச்சினையிலிருந்து தப்பிக்கக் காமம் இல்லாக் காதலில் கரைவது, கிணற்றில் விழுவது பறவையாவது எனப் பழங்காவியத்தன்மை கொண்ட கதை எந்த வகையில் நவீனப் படமாகவோ மாய யதார்த்தப் படமாகவோ இருக்குமென்று தெரியவில்லை. ஃப்ராய்ட் என்றால் அது பழைய, விமர்சனத்துக்குள்ளான சிந்தனையின் உருவமே. அவரது கோட்பாடுகளில் சிலவற்றை மட்டுமே நவீன உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. எரிக் ஃப்ராம், யூங், லக்கான் எனப் பல ஆய்வாளர்கள் அவரது முடிவுகளை விமர்சித்துள்ளார்கள். இந்நிலையில் அவரையே தீர்வாகக் கொண்டிருப்பது முரணாக உள்ளது.

இதற்கு மொத்தமாக ஒருவரை மட்டும் காரணமாக்குவது ஜனநாயகக் கலைக்கான மரியாதை அல்ல. கூட்டு முயற்சியின் பிரதியே சினிமா. இப்படம் முக்கியமான முயற்சி என்று சொல்வதில் மாற்றுக் கருத்து இல்லை. இலக்கியமும் கோட்பாடும் சினிமாவும் இணையும் வெளியை ஓரளவுக்குச் சாத்தியப்படுத்தியிருக்கிறது இந்தப் படம். அதே கட்டத்தில் முழுமையடையாதது மட்டுமல்ல பழைமைக்குள் கட்டமைத்துக்கொண்டதும் இதைத் தோல்விகரமான முயற்சியாக்கிவிட்டது.


நபிகளின் மிஃறாஜ் பயணத்தை ரூஹானியத்தான மிஃறாஜ், ஜிஸ்மானியத்தான மிஃறாஜ் என இருவகையாகச் சொல்வர். ரூஹானியத்தான மிஃறாஜ் ஆன்ம தரிசனம் ஆகும்; உயிர் மட்டும் பயணிப்பது. ஜிஸ்மானியத்தான மிஃறாஜ் எனில் உடலும் உயிரும் மேற்கொள்ளும் பயணம். முஸ்லிம்கள் பலர் நபிகளின் வானுலகப் பயணத்தை ஜிஸ்மானியத்தான மிஃறாஜ் என்றே நம்புகிறார்கள். சிலர் ரூஹானியத்தான பயணம் என்பர், மிஃறாஜ் என்பதே நபிகள் கண்ட கனவு என்று சொல்வோரும் உளர். எது எப்படியிருப்பினும் நபிகளின் வாழ்விலும் இஸ்லாத்தின் வரலாற்றிலும் மிஃறாஜ் முக்கிய நிகழ்வாக அமைந்துவிட்டது. அதன் விளைவும் நன்மையாகவே இருந்தது, இருக்கிறது. இதிலும் புராக் எனும் அதிசய குதிரைதான் நபிகளைச் சுமந்திருக்கிறது. ஒருவேளை இந்தக் குதிரை நாயகனின் கனவில் வந்திருந்தால் பயணம் மாறியிருக்குமோ என்னவோ...

காலச்சுவடு, ஏப்ரல் 2022

Comments

Popular posts from this blog

இன்னும் எத்தனைக் காலம்தான்...?

பேரன்பும் பெருங்கோபமும்