இன்னும் எத்தனைக் காலம்தான்...?

 

கட்டுரை




‘காலனியம் என்னும் கொள்கை ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயம் சுரண்டி அதன்மீது ஆதிக்கம் செலுத்தி, அதன் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் ஒரு முறையாகும். காலனியம் தனக்கு முந்தைய சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில்லை. அதை மாற்றுகின்றது. புதிய காலனியக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குகின்றது. அந்தப் புதிய காலனியக் கட்டமைப்பு, உலக முதலாளித்துவ அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி’ 1

அன்பானவர்களே ‘கதை’ நிகழ்வுக்கு உங்களை மீண்டும் வரவேற்கிறேன். மாதந்தோறும் கூடும் இந்நிகழ்ச்சிக்கு நீங்கள் தரும் ஆதரவு வியக்க வைக்கிறது; தொடர்ந்து உழைக்கத் தூண்டுகிறது. நாம் கதைகளை உருவாக்குவதில்லை, கதைகள்தாம் நம்மை உருவாக்குகின்றன. நம் மூலமாக கதைகள் தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்பதே உண்மெய். சரி, வழக்கமாக கதைகளை உரையாடும் நாம், இம்முறை கட்டுரையை விவாதிக்க இருக்கிறோம். கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை என்பதாலும், கட்டுரையை ஓர் கதையைப் போல சொல்லிப் பார்க்கும் மாற்று முயற்சியாக இருக்கும் என்பதாலும் இம்முறை கட்டுரை விவாதிக்கப்படுகிறது. 

அண்மையில், சமூகம், அரசியல் குறித்து ஐம்பது வயது மதிக்கத்தக்க உறவினருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, ‘பெரியாரும் அம்பேத்கரும்தான் ஜாதி, ஜாதின்னு சொல்லிட்டிருந்தாங்க. அண்ணாவும் எம்ஜியாரும் எல்லாரும் ஒன்னுன்னுதான் சொன்னாங்க’ என்றார். ஒருபுறம் இயல்பாகவும், மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. ஒடுக்கப்பட்டோர், ‘பொது’ சமூகத்தோடு இணைந்துகொள்ள நினைப்பது இயல்புதான். இருப்பினும் பல ஆண்டுகளாக இம்முயற்சி தொடர்வதுதான் வேதனையாக இருக்கிறது. மற்றொரு சம்பவம், பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான புகார்களும் அது தொடர்பான தொலைக்காட்சி, சமூக ஊடக விவாதங்களும். இதன் தொடர்ச்சியாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டமும் பேசுபொருளானது. இவற்றில் பிரதானமாக முன்வைக்கப்படுவது ‘ஆரிய – திராவிட’ சித்தாந்த மோதலே. உண்மெய்யில் ஆரிய – திராவிட முரண்பாடுதான் இங்கிருக்கும் ஒரே பிரச்சினையா?

இதுபோன்ற குழப்பங்களுக்கு விடையளிக்கும்விதமாக அமைந்திருக்கிறது ஜோதிராஜ் சாமிநாதன் எழுதிய ‘திராவிடக் காலனியம்’ கட்டுரை. நூறாண்டுகள் கடந்த திராவிடக் கருத்தியலின் மற்றொரு பரிணாமமாக இக்கட்டுரை விளங்குகிறது. கொள்கை, கோட்பாடு, புரட்சி, இயக்கம், அரசியல், கலை, பண்பாடு என்று பல்வேறு தளங்களில் இயங்கிய சித்தாந்தம், சமகாலத்தில் தேங்கி நிற்கிற யதார்த்தத்தை விவரிக்கிறது ‘திராவிடக் காலனியம்.’ கடந்தகால வரலாற்றை விவரிக்காமல், சமகால அவலங்களைக் குறிப்பிட்டு அதன் மூலம் காலனியத்தின் கோட்பாடுகளையும் திராவிடத்தின் இயங்கியலையும் உணர்த்துவதுதான் கட்டுரையின் சிறப்பம்சமாக கருதுகிறேன். சரி, இனி கட்டுரை...

பெரியாரின் ‘ஆரிய திராவிட’ கோட்பாட்டிலிருந்து கட்டுரையைத் தொடங்குகிறார் ஆசிரியர். இந்தக் கொரோனா காலகட்டத்திலும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை தடை செய்வது, நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலையேற்றம், சனாதனத்திற்கு எதிரான குரலை ஒடுக்குவது உள்ளிட்ட பாசிச செயற்பாடுகளையும் அதற்கு எதிரான செயற்பாடுகளையும் குறிப்பிடும் ஆசிரியர், இதே கொரோனா காலகட்டத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களைப் பட்டியலிட்டு, அதற்கெதிராக திராவிடத் தலைவர்களின் எதிர்வினைகள் ஏதுமில்லாததையும் குறிப்பிடுகிறார். பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்கும் அன்றைய மு.க. ஸ்டாலின், பாபாசாகேப் அம்பேத்கரின் சிலைகள் தாக்கப்பட்டதற்கு சிறு கண்டனம் கூட தெரிவிக்காதது நமக்கும் வருத்தமளிக்கிறது. சாத்தான்குளம் வியாபாரிகள் கொலைக்கு கொந்தளிக்கும் திராவிடப் போராளிகள், தமிழ்நாடு முழுவதும் தலித் மக்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை எளிதாகக் கடந்து சென்றதில், இது அன்றாடம் நடப்பதுதானே என்ற சாதிய எண்ணம்தான் தெரிகிறது. வரலாற்றில் சற்றே பின்சென்று பார்த்தால், முதுகுளத்தூர், கீழ்வெண்மணி சம்பவங்களின்போது பெரியாரின் செயற்பாடும் இவ்வாறுதான் இருந்தது. அதேவேளை, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள், தங்கள் சமூகத்தின் மீதான வன்முறைகளையும் கண்டித்தனர்; பிற சமூகப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தனர். பாபாசாகேப் பட்டியலின மக்களுக்கு உழைத்ததைப் போன்றே, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் சமூக உரிமை வழங்கியதை இதனோடு பொருத்திப் பார்க்கலாம்.

1990களுக்குப் பிறகான காலகட்டத்தில் தலித் எழுச்சி நடந்த சமயத்தில்தான் பார்ப்பனரல்லாத – தலித்தல்லாத பிரிவினரின் சாதி அதிகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. உலக அளவில் நடந்த மாற்றங்கள், உள்ளூரிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியதால், அதிகாரப் பரவலாக்கம் குறித்த கருத்துகள் எழுச்சி பெற்றன. இதனை ஏற்றுக்கொள்ளாத இடைநிலைச் சாதியினர், வன்முறை உள்ளிட்ட பல வழிகளில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். இதனால் சமூக இறுக்கம் அதிகரித்தது. ஆட்சியிலிருந்த பெரியாரின் சீடர்கள், அண்ணாவின் தம்பிகள், உள்ளூர் அளவிலான சாதி ஆதிக்கத்தைக் கண்டிக்காமல், வாக்கரசியலுக்காக அதை வளர்த்தெடுத்தனர் என்று சில சான்றுகளோடு குற்றஞ்சாட்டுகிறார் ஜோதிராஜ். 
இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘கும்பகோணம், திருப்புறம்பியம் கிராமத்தைத் தாண்டி அமைந்திருக்கும் புது காலனியில் பறையர் சமூகத்தினர் வசித்துவந்தனர். 23.8.1988 அன்று கலியபெருமாள் மகன் செல்வம் என்பவர் உயிரிழந்தார். அம்மக்களுக்கு ஏற்கெனவே கொள்ளிடக்கரையில் சுடுகாடு இருந்தது. இதற்கு முன்பாக, 1983ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், புதுகாலனியில் பெண் ஒருவர் இறந்தபோது கொள்ளிடக்கரைச் சுடுகாட்டில்தான் அடக்கம் செய்யப்பட்டார். ஆகையால் செல்வத்தின்  உடலைக் கொள்ளிடக்கரையில் அடக்கம் செய்ய சென்றபோது, நூற்றுக்கணக்கான வன்னியர் சங்கத்தினர் சாலையை மறித்தனர். 1983இல் சாலையை மறிக்காதவர்கள், 88இல் மறித்ததற்குக் காரணம், அப்போது அவர்களுக்கென்று சங்கம் அமைத்துக்கொண்டதுதான்.’2 உங்கள் சந்தேகப் பார்வை புரிகிறது, ‘குடிதாங்கி’ பிரச்சினைதான். இதுகுறித்த இன்னொரு தகவலையும் பின்னர் குறிப்பிடுகிறேன். 

இதே காலகட்டத்தில் இஸ்லாமிய ஒடுக்குமுறை அதிகரித்ததையும் குறிப்பிட வேண்டும். சாத்தான்குளம் காவல்துறை அத்துமீறலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிடத் தலைவர்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள் மீதான காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்ததுண்டா என்று கட்டுரையாளர் கேள்வி எழுப்புகிறார். மேலும், நாட்டில் வாழும் முஸ்லிம்களைவிட சிறையிலிருக்கும் முஸ்லிம்களே அதிகம் என்ற அதிர்ச்சிகர புள்ளிவிவரத்தை முன்வைக்கிறார். இந்திய அளவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 14 சதவீதம். ஆனால் இந்தியச் சிறைகளில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 சதவீதம். சமூகநீதி மாநிலமான தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 6 சதவீதம்; சிறைகளிலோ 15 சதவீதம்.3 இவற்றில் தண்டனைக் கைதிகளைவிட விசாரணைக் கைதிகளே அதிகம். ஓரிரு நாட்களில் திரும்பி வேண்டியவர்கள் ஆண்டுக்கணக்காக சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் பொருந்தும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று சாதி இந்து கட்சிகள் ஒப்பாரி வைக்கின்றன. தலித்துகள் மீதான தாக்குதல்களில் மிகச்சில மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீ்ழ் பதிவாகின்றன. அதையும் போராடித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. தலைவர்களின் பிறந்தநாட்களில் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படும்போது இஸ்லாமியர்கள், தலித்துகளை விடுதலை செய்யக் கோரி இன்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. சரி, இதெல்லாம் அரச வன்கொடுமைதானே, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தினால் சமூக மாற்றம் நிகழாதா என்ற கேள்வி எழலாம். இங்குதான் கட்டுரைக்குள் கிராம்சி வருகிறார். ‘அரசுமீது தொடுக்கும் தாக்குதல் ஒரேயடியில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்காது. அரசு அதிரும்போது, பொது சமூகம் என்னும் பலமிக்க உருவம் வெளித்தெரியும்’4 என்று கிராம்சி மூலம் தான் புரிந்துகொண்டதை விளக்குகிறார் ஜோதிராஜ். ஜனநாயக அமைப்பில் அரசைவிட பலம்வாய்ந்தது ‘பொது’ சமூகம்தான். இல்லையென்றால், ஆணவக் கொலை வழக்குகளில் நீதி கிடைத்திருக்க வேண்டுமே. அரசியல் சமரசங்கள் யாவும் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இங்கு அரசு விதிமுறைகளும் சட்டங்களும் சாதியமைப்புக்குக் கட்டுப்பட்டே இயங்குகின்றன. எனவே, ‘எல்லாரும் ஒன்னா இருக்கலாம்’ என்பதற்கான பொருள், ‘எங்களுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும்’ என்பதுதான்.

சரி அடுத்த கேள்விக்கு வருவோம், இங்கு ஆரிய - திராவிட முரண்பாடுதான் ஒரே பிரச்சனையா? நிச்சயமாக இல்லை என்கிறார் ஜோதிராஜ். இப்போதுவரை கம்யூனிஸ்ட்டுகளைத்தான் போராளிகள் என்று கருதுகின்றனர். சே குவேரா உடை அணிந்தவரெல்லாம் புரட்சியாளர் என்று கருதப்பட்டனர். ஆனால் இந்தியச் சூழலில் கம்யூனிஸ்ட்டுகளின் செயற்பாடு என்பது நவ பார்ப்பனியத்தைக் கட்டமைப்பதாகவே இருக்கிறது. ‘வேதங்களின் தேசம்’ என்பது எந்தவகையில் புரட்சிக்கு வித்திடும் என்று புரியவில்லை. சமகாலத்தை எடுத்துக்கொள்வோம். கல்வி – எழுத்தறிவில் கேரளா முதன்மை மாநிலமாக இருக்கிறதென்று கருதப்படுகிறது. ஆனால், யதார்த்தம் வேறாக இருக்கிறது. அங்குள்ள பழங்குடி சமூகத்தினர் இன்னும் கல்வியறிவு பெறாதவர்களாகவே இருக்கிறார்கள்.5 அவர்களின் வளங்களைச் சுரண்ட தயாராக இருக்கும் அரசு, அவர்களுக்கு கல்வி வழங்க தொடர்ந்து ஆலோசனை செய்துவருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதெல்லாம் பார்ப்பனிய கட்டமைப்புக்கு உதவுவதாகவே அமையும். பட்டியலின மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதே, உண்மெய்யான புரட்சிக்கு வித்திடும். அண்மையில் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, “அரசியல் தளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஓய்வுபெற்றுவிட்டதாகக் கருதுகிறேன். ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைத்துவிட்டு, வேலை முடிந்ததென்று அமைதியாகிவிட்டார்கள்” என்றார். கிட்டத்தட்ட இதே தொனியில்தான் கட்டுரையாளரும் பேசுகிறார். ‘பொதுவுடைமை, சமத்துவத்தை ஏற்படுத்தும்போது சமூகம் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்துவிட முடியாது. பொதுவுடைமை இவற்றில் ஒன்றைத்தான் கொடுக்க முடியும். எல்லாவற்றையும் கொடுக்க முடியாது’6 என்ற அம்பேத்கரின் கூற்றைக் குறிப்பிட்டு இந்தியச் சூழலில் கம்யூனிஸ்ட்டுகளின் போதாமையை விவரிக்கிறார். உழைக்கும் வர்க்கத்துக்குள் இருக்கும் முரண்பாட்டையும் சாதியின் தன்மையையும் கவனப்படுத்தாமலேயே கம்யூனிஸ்ட்டுகள் இத்தனை காலமும் இயங்கிவந்திருக்கிறார்கள் என்கிறார் ஜோதிராஜ். சரி கம்யூனிஸ்ட்டுகளை ஓரமாய் வைத்துவிட்டு, கட்டுரையின் மையச்சரடான திராவிடம் குறித்து பேசலாம்.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்துசென்ற நேரம். அதுகுறித்து நாவலர் நெடுஞ்செழியன் கலைஞர் கருணாநிதியிடம் வருத்தப்பட்டிருக்கிறார். “எம்ஜிஆர் பிரிந்துசென்றதும் நன்மைக்குத்தான். எதிர்க்கட்சியாக நம் கொள்கையை ஒத்த நபர் இருக்கிறார். இல்லையென்றால் அந்த இடத்தில் மதவாத சக்திகள் வந்திருக்கும்,” என்றாராம் கருணாநிதி. இதை இரண்டுவிதமான சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம். ஒன்று, மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, தன்னுடைய ஜனநாயக பிம்பம் சரிந்துவிடக் கூடாது, அதேசமயம் மாநில அரசுகள் தன் கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது. அதனால் சற்றே ஜனநாயகத்தன்மையோடு தனக்கேற்ற கட்சிகளையே ஆளுங்கட்சியாக்குகிறது. உதாரணத்திற்கு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தையே எடுத்துக்கொள்வோம். இச்சட்டத்தால் பட்டியலின மக்களுக்கு யாதொரு நன்மையும் நடக்கப்போவதில்லை. மாறாக அவர்கள் தொடர்ந்து இந்து மதத்திலேயே நீடிக்க நேரும். மேலும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்குள்ளாகவே கிராம கோவில்களில் பார்ப்பனியம் நுழைந்து தன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருக்கும். எனவே இது சமூக விடுதலைக்கு எந்தவகையிலும் உதவாது என்கிறார் கட்டுரையாளர். ஸ்டாலினின் செயற்பாடுகளும் இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே இருக்கின்றன. திமுகவில் பெரும்பான்மையோர் இந்துக்கள் என்று சொல்வது, இந்து விரோத கட்சி என்ற விமர்சனத்திற்கு உடனடியாக பதில் சொல்வது, அதிமுகவை விமர்சிக்கும் அளவு பாஜகவை விமர்சிக்காதது போன்றவை ஸ்டாலின் மீது சந்தேகத்தை உண்டாக்குகின்றன என்ற ஜோதிராஜின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது. இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலத்தில், ‘ஸ்டாலின் தலைமை பொறுப்புக்கு வந்தால் திமுகவை ஆதரிக்க தயார்’ என்று சோ. ராமசாமி கூறியதாக ஞாபகம். இதன் நம்பகத்தன்மையை வேறாரு சம்பவம் வழியாக உறுதிபடுத்திக்கொள்ளலாம். அரசியலுக்கு வருவதாக ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அறிவித்தபோது, பல்வேறு அரசியல் தலைவர்களைப் பற்றி அவர் பேசினார். அப்போது ஸ்டாலினை பற்றி கூறுகையில், “சோ சார் அடிக்கடி சொல்வார். ஸ்டாலின சுதந்திரமா விட்டா அவர் நல்லா செயல்படுவாரு” என்றார். கருணாநிதி இருந்த காலக்கட்டத்தோடு இந்கக் கூற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கருணாநிதி ஸ்டாலினை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று சோ. ராமசாமி சொல்கிறார். தி.க, வி.சி.க போன்ற கூடாநட்புகளை ஸ்டாலின் தவிர்த்துக்கொள்வது அவருக்கு நல்லது என தேர்தலுக்கு முன்பு பாஜக பிரமுகர் ஒருவர் கூறியிருந்தார். இவற்றோடு இணைத்து சோ. ராமசாமியின் கூற்றை அணுகுங்கள். பாஜக சித்தாந்தவாதி எதற்காக ஸ்டாலினை புகழ வேண்டும் என்ற கேள்வியிலிருந்தே திராவிட அரசியலின் போக்கைக் கணிக்க முடியும். சிங்காரச் சென்னை என்ற திட்டத்தின் மூலம் தலித் மக்களை நகரிலிருந்து அப்புறப்படுத்தி, சென்னையை ‘தூய்மை’யாக்கிய பெருமை ஸ்டாலினையே சேரும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது அதற்காக கூட சோ பாராட்டியிருக்கலாம்.

பண்பாட்டு விடுதலையைத் தொடர்ந்து வரும் சமூக விடுதலையே நீண்டகால பயனைத் தரும். அதுவே அரசியல் விடுதலைக்கும் இட்டுச் செல்லும். உலகம் முழுவதும் இதற்கான சான்றுகள் உள்ளன. பெரியாரும் பண்பாட்டு விடுதலைக்கான செயற்பாடுகளைத் தன் பிரச்சார மேடைகளில் முன்னெடுத்தார். பட்டியலின மக்களுக்கு மேடையிலேயே மதமாற்றம் செய்துவைத்தார். கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, ஆலய நுழைவு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார். ஆனால் மதமாற்றம் தவிர்த்து மற்ற யாவையும் பகுத்தறிவு என்ற எல்லைக்குள் நிகழ்த்தியதால் இன்று இச்சிந்தனைகள் வறட்டுத்தன்மையாய் மாறிப்போய்விட்டன என்கிறார் கட்டுரையாளர். ‘ஒருவரது சுயநலத்துடன் முரண்படாத வரையில் பகுத்தறிவு தனது பணியைச் செய்கிறது. சுயநல சக்திகளுடன் மோத நேரிடும்போது அது தோல்வியடைகிறது. பல இந்துக்கள் தீண்டாமையில் தங்கள் சுயநலத்தைக் காண்கின்றனர். எனவே பகுத்தறிவின் ஆணைகளுக்குச் சுயநலம் பணிந்து போகாதது இயல்பே’ என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கூற்று பெரியாருக்கும் பொருந்தும் என்கிறார். பெரியார் செய்த பண்பாட்டு மாற்றம் அவரது சீடர்களால் அடுத்த கட்டத்திற்கு வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வறட்டுப் பகுத்தறிவாலும் சுயநலத்தாலும் அவர்கள் அதை தவிர்த்துவிட்டனர். அதேவேளை தலித்துகள் குறித்த பெரியாரின் பார்வைதான் அவரது சீடர்களிடமும் இருக்கிறது. இங்கே கட்டுரையாளர் மற்றுமொரு சான்றையும் தருகிறார். ‘ஒருமுறை திமுகவை ஆதரிக்கக்கூடாது என்றார். ஆனால் அக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்றது. அந்தத் தேர்தல் வெற்றியைக் கண்டித்த பெரியார், தாழ்த்தப்பட்டவர்களால்தான் திமுக வெற்றிபெற்றதாகக் குற்றஞ்சாட்டி கேவலமாக பேசினார்,’7 சற்றே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் பெரியாரின் செயற்பாடுகளை உற்று நோக்கும்போது, மாற்றுச் சிந்தனைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்குமான உருவமாக அவர் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளை, பெரியார் பார்ப்பனரல்லாத - தலி்த்தல்லாத இடைநிலைச் சாதிகளின் முன்னேற்றதிற்காகவே அதிகமாக உழைத்திருக்கிறார் என்பதும் அதற்காக தலித்துகளை இகழ்ந்து பேசவும் அவர் தயங்கவில்லை என்பதும் புலப்படும். நீதிக்கட்சி குறித்த பாபாசாகேப் அம்பேத்கரின் விமர்சனம் உங்களில் பலருக்கும் நினைவிருக்கும். அரசியல் ரீதியாக இடைநிலைச் சாதிகளின் முன்னேற்றத்திற்காக மட்டும் பணியாற்றிய நீதிக்கட்சியைப் போலவே, சாதி இந்துக்களின் அதிகார குவிப்புக்காக மட்டுமே திமுகவும் அதிமுகவும் பணியாற்றுவதாக ஜோதிராஜ் குறிப்பிடுகிறார். மேலும் பட்டியலின மக்களுக்கு இவர்கள் பெற்றுத்தந்ததாக சொல்லப்படும் உரிமைகளெல்லாம் ஏற்கெனவே அரசியலமைப்புச் சட்டம் மூலம் அண்ணல் அம்பேத்கர் பெற்று தந்தவையே. சமூகநீதி மாநிலங்களாக கருதப்படும் தமிழ்நாடு, கேரளா பகுதிகளில்தான் இந்தியாவில் இல்லாத அளவிலான எண்ணிக்கையில் நிலமற்ற விவசாயக் கூலிகள் இருப்பதாக8 அதிர்ச்சி தரவுகளைத் தருகிறார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைவைத் தடுத்தது, திராவிடக் கட்சிகள் செய்த மற்றுமொரு சதி. தலித்துகள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், பழங்குடியினர் ஆகியோர் அரசியல் ரீதியாக ஒன்றிணைவதை ஆதிக்க சாதிகள் விரும்பவில்லை. சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் பெரும்பான்மை சாதிகளான வன்னியர்களும் ஆதிதிராவிடர்களும், ராமதாஸ் – திருமாவளவன் தலைமையில் ஒன்றிணையும் சூழல் உருவானபோது, இருவருக்குமிடையில் பகையை வளர்த்து இரு சமூகங்களின் ஒன்றிணைவைத் தடுத்தனர் ஆதிக்க சாதிகள். 

இப்போது ‘குடிதாங்கி’ விவகாரத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்; பெரும்பான்மை அரசியலின் மற்றுமொரு பரிமாணத்தையும் விளக்குவதாகவும் அமையும். குடிதாங்கி பிரச்சனையில் பிணத்தைப் பொது வழியாக எடுத்துச் செல்லும் போராட்டத்தில் நான்கு ஆண்டு காலமாக சட்டப் போராட்டம் நடத்தியது, சிறை சென்றது எல்லாம் டி.எம். மணி (எ) உமர் பாரூக் தலைமையிலான நீலப்புலிகள் போன்ற வட்டார அமைப்புகளே. பிணத்தைப் பொதுவழியாக எடுத்துச்செல்ல முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்ட பிறகு அரசியல் லாபம் கருதி வந்த ராமதாஸ், ‘தமி்ழ்க்குடிதாங்கி’ பட்டம்பெற்றுக்கொண்டார். இதுகுறித்து டி.எம். மணி ‘ஜாதி ஒழிந்தது’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார் (வேர்கள் பதிப்பகம்). இங்குக் குறிப்பிட வேண்டியது, சிறிய அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் அறுவடையை, பெரிய கட்சிகள் பெற்றுக்கொள்வதுதான். சாதி இந்துக்களின் போராட்டங்கள் கூட வெளியே தெரிகிறது. தலித்துகளின் வலி மிகுந்த போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, அவர்கள் பெற்ற உரிமைகள் யாவும் ‘திராவிடம்’ வழங்கிய சலுகைகளாக கட்டமைக்கப்படுகிறது. இப்படியாக பல்வேறுபட்ட தலித் அமைப்புகள் ஒன்றிணைவது, தலித் – இஸ்லாமியர் அமைப்புகள் ஒன்றிணைவது ஆகியவற்றைத் தடுத்து, தங்களின் அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்கின்றனர் ஆதிக்க ஜாதியினர். இங்கு முன்பு குறிப்பிட்ட கருத்தை நினைவுகூற விரும்புகிறேன். பாஜக தனக்கேற்ற கட்சிகளை மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் அமைத்துக்கொள்வதைப் போல, திராவிடக் கட்சிகளும் செயல்படுகின்றன. தன்னை மீறி எந்தக் கட்சியும் பலம்பெற்றுவிடக் கூடாது என்பதில் அவை தெளிவாக இருக்கின்றன.  

அரசியல் அறிவுஜீவிகளைக் கண்காணித்து அவர்களை அரவணைத்து அவர்களது வீரியத்தைக் குறைத்து, தம் புகழ்பாட வைப்பதில் திமுக – அதிமுக தலைமைகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. சமூகநீதி பேசி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள், தம் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள உதவும் கருவியாகத்தான் சாதியைக் கையாள்கின்றன. கட்சிப் பதவிகளில் இவர்கள் கடைப்பிடிக்கும் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தைக் கவனித்தாலே இது விளங்கும். இட ஒதுக்கீடு விவகாரங்களில் திராவிடக் கட்சியினரின் சாதிய அரசியலை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அருந்ததியிருக்கு உள் ஒதுக்கீடு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு போன்றவை முக்கியமான முன்னெடுப்புகள் என்றாலும், ஒரே பட்டியலுக்குள் இருக்கும் சாதிகளிடையே கசப்புணர்வைத் தூண்டுவது மறுக்க முடியாது. மேலும், மக்கள் தொகையிலும் சமூக அதிகாரத்திலும் சிறுபான்மையாகவுள்ள பிற சாதியினருக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்காதது, வாக்கு வங்கியாக மட்டுமே திராவிடக் கட்சிகள் சாதியைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. இவை யாவும் காலனிய கருத்தாக்கத்தின் நீட்சி என்று நிறுவுவதில்தான் இக்கட்டுரை புது வடிவம் எடுக்கிறது. 

காலனியத்தின் காலம் முடிவடைந்துவிட்டது, பின்னைக் காலனியம், பின்நவீனத்துவம் போன்ற மாற்றுக் கருத்தாக்கங்களின் காலம் என்று நீங்கள் நினைக்கலாம். முதலில் காலனியம் குறித்து பார்ப்போம். ‘காலனியம் என்னும் கொள்கை ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயம் சுரண்டி அதன்மீது ஆதிக்கம் செலுத்தி, அதன் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் ஒரு முறையாகும். காலனியம் தனக்கு முந்தைய சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில்லை. அதை மாற்றுகின்றது. புதிய காலனியக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குகின்றது. அந்தப் புதிய காலனியக் கட்டமைப்பு உலக முதலாளித்துவ அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி’ என்கிறார் பிபின் சந்திரா. திராவிடக் கட்சிகளின் செயற்பாடுகளை காலனியத்துடன் இணைத்துப் புரிந்துகொள்வதற்கு முன், பின்னைக் காலனியத்தையும் தெரிந்துகொள்வோம். தத்தம் நாட்டுச் சூழலமைவுகள் மற்றும் மரபுகளோடு ஏற்கெனவே கலந்து கிடக்கின்ற உண்மெய்களைப் புதிய எதார்த்தமாகப் புனரமைப்பதே பின்னைக் காலனியத்துவத்தின் முதன்மைச் செயல்பாடாகும். மறுதலிப்பதும் மாற்று தேடுவதுமே பின்னைக் காலனித்துவத்தின் நோக்கமாகும்.9 மேலும், ‘மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர்களான ஆரிஃப் திர்லிக், அஜீஸ் அகமது ஆகியோர் பின்னைக் காலனித்துவக் கொள்கைகளின் பல அடிப்படைக் கருத்துக்களையே கேள்விக்குரியதாக்கினர். பின்னைக் காலனித்துவம் புலம்பெயர்ந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்ட கொள்கை என்றும், அது அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தோற்றுவிக்கப்பட்டது என்றும் இவர்கள் கூறினர். ஆதலால் இது அமெரிக்காவின் அரசியல், பொருளாதார முன்னேற்றம் சார்ந்த ஒரு கொள்கையாக மையப்படுத்தப்படுகிறது. ஆரிஃப், பின்னைக் காலனித்துவத்தை அடிப்படையியலுக்கு எதிரானதாக நோக்குகிறார்.’10 சரி, இப்போது திராவிடத்துக்கு வருவோம். சமூக இயக்கமாக தொடங்கிய திராவிட இயக்கம், பார்ப்பனர்களின் ஆதிக்கம், நகரங்களில் வாழும் பட்டியலின மக்களின் பொருளாதார நிலை, இடைநிலைச் சாதியினரின் நிலை யாவற்றையும் நுட்பமாக தெரிந்துகொள்கிறார்கள். பிறகு கலை, இலக்கியம், சமூகம், பண்பாடு என அனைத்து தளங்களிலும் களமிறங்குகிறார்கள். பெரியார் அக்காலத்திய சமூக கட்டமைப்பை மொத்தமாக விமர்சிக்கிறார், கேள்விக்குட்படுத்துகிறார். பாழடைந்த கட்டடத்தை மொத்தமாக அழித்து, மறுநிர்மாணம் செய்ய வேண்டுமேயொழிய, மேல்பூச்சு வேலை செய்யக் கூடாது என்ற அடிப்படையில், அவர் அனைத்தையும் கட்டுடைக்கிறார். பெரியார், மேற்கத்திய அறிஞரான இங்கர்சால் போன்றோரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு பகுத்தறிவையும் கடவுள் மறுப்பையும் உள்வாங்கினார். தொழில் வளர்ச்சி மிகுந்த நவீன உலகம் குறித்த பார்வை அவருக்கிருந்தது. அதனால் பண்பாட்டிலிருந்து அவருக்கு எதுவுமே தேவைப்படவில்லை. மொத்தமாக அனைத்தையும் உடைத்து நொறுக்க விரும்பினார். ஆனால் அவர் வழிவந்தவர்கள் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, சுயமரியாதை மூன்றும் ஒன்றென கருதினர். பெரியாரைத் தாண்டி சிந்திக்க அவர்கள் விரும்பவில்லை. மேலும் சாதிய அதிகாரத்தையும் விட்டுத்தர விரும்பவில்லை. கடவுள் மறுப்பில் சாதி ஒழிப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, கட்டடத்தை மறுநிர்மாணம் செய்யாமல் மேல்பூச்சு வேலைகளையே தொடர்ந்து செய்துவருகிறார்கள். அதை மறைக்க பழம்பெருமைகளையும் திராவிடர் என்ற உணர்வையும் முதன்மைப்படுத்தி செயற்பாடுகளை மேற்கொண்டனர். பழைய மன்னர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், அகநானூறு, புறநானூறு என வீரத்தையும் தியாகத்தையும் அலங்கார மேடைப்பேச்சுகளால் பரப்பினர். சிலப்பதிகாரத்தை போற்றி புகழ்ந்தனர். ஆரிய ராம காதைக்கு மாற்றாக திராவிட ராவண காவியத்தை இயற்றினார்கள். பண்பாட்டு கூறுகளைப் பகுத்தறிவுக்கு எதிர்நிலையில் வைத்து வறட்டுத்தனமான கருத்தியலை உருவாக்கினர். இடைநிலைச் சாதியினரின் வீர வரலாறுகளைத் தொகுத்து தமிழ்த்தாய்க்கு விருந்தாக்கினர். கண்ணகி சிலை, திருவள்ளுவர் சிலை, தமிழறிஞர்கள் சிலைகள், நகர கட்டமைப்புகளுக்கு தலைவர்களின் பெயர்கள் என பார்ப்பனியத்திற்கு எதிரான முன்னெடுப்புகளாக இவை அறியப்பட்டாலும் காலனித்துவ செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவும் இருக்கின்றன. அதுவரை இருந்த சமூக கட்டமைப்பை அழித்து புதிய ஜனநாயக அமைப்பை உருவாக்கும் முயற்சியாக இவை தோற்றமளிக்கலாம். ஆனால், இந்த எதிர் செயற்பாடுகளில் யார் கவனப்படுத்தப்பட்டார்கள், யார் மறைக்கப்பட்டார்கள் என்பதில்தான் திராவிட காலனியத்தின் வேர் மறைந்திருக்கிறது.   

திராவிடச் சிந்தனைக்கும் தமிழ்த் தேசியச் சிந்தனைக்கும் ஆசானாக விளங்கிய அயோத்திதாச பண்டிதர் குறித்து பெரியாருக்கு முன்பே தெரிந்திருக்கிறது. திராவிட மகாஜன சபையை நிறுவியது, பூர்வ பௌத்த கதையாடல்களை உருவாக்கியது, பௌத்த சங்கங்களைத் தோற்றுவித்தது என பண்டிதரின் அத்தனை செயற்பாடுகள் குறித்தும் பெரியாருக்கு தெரிந்திருக்கிறது. கோலார் தங்க வயலுக்குச் சென்றிருந்தபோது அப்பாதுரையார் மூலமாக பண்டிதரின் சமூக செயற்பாடுகளையும் இலக்கிய செயற்பாடுகளையும் தெரிந்துகொள்ளும் பெரியார், தன்னுடைய பிரச்சாரங்களில் மிகச்சில இடங்களில் மட்டுமே அயோத்திதாசரை பற்றி குறிப்பிடுகிறார். மாறாக, பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து பல மேடைகளில் பேசுகிறார். தான் முன்னெடுத்துள்ள கருத்தியலை தனக்கு முன்பே ஒருவர் பேசியிருக்கிறார், அதுவும் தன் மாகாணத்திலேயே பேசியிருக்கிறார் என்பது ஒரு தலைவருக்கு உற்சாகத்தையே தந்திருக்கும், தந்திருக்க வேண்டும். ஆனால், பண்டிதரின் பிறப்பு, அத்தகைய உற்சாகத்தைப் பெரியாருக்கு வழங்கியிருக்காது என்கிறார் கட்டுரையாளர். பண்டிதரின் பரந்த அளவிலான செயற்பாடுகள் பட்டியலின மக்களுக்கானவை, அவர்களின் சமூக விடுதலைக்கானவை. பெரியாரைப் போல் அவர் மேற்கத்திய விஞ்ஞானத்தை கையிலெடுக்காமல், உள்ளூர் பண்பாட்டு அடையாளங்களிலிருந்தே அம்மக்களுக்கான விடுதலையைச் சாத்தியமாக்கினார். பௌத்த மதத்தைப் பரப்பினார். சாதியத்திற்கெதிரான பல மாற்றுக் கதையாடல்களை, பண்பாட்டு விழுமியங்களிலிருந்து சான்றுகளுடன் உருவாக்கினார். இத்தகைய அறிஞரை பெரியார் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்ததாக ஜோதிராஜ் குற்றஞ்சாட்டுகிறார். 

வடக்கில் செயல்பட்ட அம்பேத்கரை, “இனி அவர்தான் உங்கள் தலைவர்” என்று பட்டியலின மக்களிடம் பேசிய பெரியார், தமிழ்நாட்டில் உழைத்த அயோத்திதாச பண்டிதரை குறிப்பிடாததற்கு தன்னலமும் சாதிய உணர்வும் தவிர வேறென்ன காரணங்கள் இருக்க முடியும். பெரியாரைப் போலவே அவரது சீடர்களும் திராவிடத்தின் தந்தையான அயோத்திதாச பண்டிதரை தொடர்ந்து மறைத்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களின் கலை இலக்கிய செயற்பாடுகளில் கூட இவற்றை உணரவைக்கிறார் கட்டுரையாளர். தலித் இலக்கியங்களில் தன் அனுபவங்களை எழுதும் இலக்கியத்திற்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கிறது. ஏனென்றால் அவை கழிவிரக்கத்தைக் கோருகின்றன. அதேவேளை, அயோத்திதாசரது ‘இந்திரர்தேச சரித்திரம்’ போன்ற இலக்கிய விடுதலை கோரும் படைப்புகளைக் கவனமாக தவிர்த்துவிடுகின்றனர். அகநானூறு, புறநானூறு தாண்டி திராவிட மூளை சிந்திப்பதில்லை என்கிறார். பெண் விடுதலை என்றால் சிலப்பதிகாரமே எல்லை. தப்பித்தவறி கூட மணிமேகலையிடம் செல்ல மாட்டார்கள். சிலப்பதிகாரத்தின் பெண்ணடிமைத்தனத்தைப் பெரியாரே விமர்சனம் செய்திருந்தாலும் மணிமேகலை போல் அறிவு தளத்தில் மக்களை இயங்கவிடாமல் உணர்ச்சி தளத்தில் வைத்திருப்பதற்காகவே சிலப்பதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என கட்டுடைக்கிறார். 

பண்பாட்டு புரட்சி இல்லாமல் சமூகப் புரட்சி சாத்தியமில்லை. சமய விடுதலையாக, தாழ்த்தப்பட்டவர்களை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யத் தூண்டினார் பெரியார். மேலும், கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்றோருடன் நட்பு பாராட்டினார். பெரியாரின் சீடர்கள் இதுபோன்ற பண்பாட்டு விடுதலைச் செயற்பாடுகளை மேற்கொண்டதில்லை. கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு என மக்களிடமிருந்து விலகியே நின்றனர். புத்தர் கையாண்ட நடுவழியைப் பின்பற்றாமல் வறண்ட கோட்பாடுகளையே சொல்லிக்கொண்டிருந்தனர். பண்பாட்டு அளவில் நம்மைத் திராவிடர் என்று உணரவைக்க திராவிட இயக்கங்களும் கட்சிகளும் என்ன செய்தன? திமுகவில் பெரும்பான்மையோர் இந்துக்கள் என்று சொல்ல வைத்தது பார்ப்பனியத்தின் வெற்றிதானே. பார்ப்பனர்கள் தங்களின் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் இன்றைய தலைமுறையின் மனங்களிலும் பதியவைத்துவிட்ட நிலையில், இவர்ளால் என்ன முடிந்தது. நீங்களும் ராமானுஜரைத்தானே கையிலெடுத்தீர்கள். ‘ராவண காவியம்’ போல் எத்தனை மாற்றுக் கதையாடல்களை உருவாக்கியிருக்கிறீர்கள்? அதை மக்களிடத்தில் சேர்க்க என்ன செய்திருக்கிறீர்கள்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். அதற்கு அவரே விடையும் தருகிறார். ஆரியத்துக்கு எதிரான கருத்தியலாக திராவிடத்தைக் கட்டமைக்க விரும்பி, அவர்களது வினைக்கு எதிர்வினையாக செய்லபட தொடங்கினார்கள். அங்கே ராமன் என்றால் இங்கே ராவணன், அங்கே சீதை என்றால் இங்கே கண்ணகி, அங்கே சாணக்கியர் என்றால் இங்கே திருவள்ளுவர். ஆனால் ராமனும் சீதையும் திராவிட பண்பாட்டில் கலந்துவிட்ட அளவுகூட ராவணனும் கண்ணகியும் கலக்கவில்லை. திராவிட இயக்கங்கள் பண்பாட்டுக் கூறுகளில் கவனம் செலுத்தவில்லை. பகுத்தறிவு என்ற போர்வையில் அதைத் தெளிவாக தவிர்த்திருக்கின்றனர். ஏனென்றால் பண்பாட்டில் சாதி கலந்திருக்கிறது. அதைக் கலைக்க இவர்கள் விரும்பவில்லை. அயோத்திதாச பண்டிதரை இவர்கள் இருட்டடிப்பு செய்வதற்கான காரணத்தை இதில் புரிந்துகொள்ளலாம். அவர் எதிர் பிம்பங்களை உருவாக்கவில்லை, மாற்றுக் கதையாடல்களை உருவாக்கினார். பண்பாட்டு விழுமியங்களில் உள்மெய்யாக மறைந்துள்ள பௌத்தக் கூறுகளை வெளிக்கொணர்ந்தார். பெரியாரைப் போல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி இழுக்காமல், பௌத்தத்திற்கு இட்டுச்சென்றார். பாபாசாகேப் கூறுவது போல் இந்திய வரலாறு என்பது பார்ப்பனியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையிலான முரண்பாடுதான் என்பதை அவருக்கு முன்பாகவே கண்டடைந்தவர் பண்டிதர். அதனால்தான் அவரால் தமிழ்ப் பௌத்தம் என்ற கோட்பாட்டை முன்வைக்க முடிந்தது. திராவிட பண்பாட்டின் ஒவ்வொரு புள்ளியிலும் பௌத்த அடையாளம் இருப்பதைச் சான்றுகளோடு நிறுவிய பண்டிதரை ‘திராவிடர்கள்’ கவனப்படுத்தாததில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் பண்டிதரின் திராவிடத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் சுதந்திரமும் இருப்பதுதான். 

திராவிட இயக்கங்கள் பார்ப்பனர்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தார்களே தவிர, அதைச் சமமாக பகிர்ந்தளிக்க விரும்பவி்ல்லை என்கிறார். 90களில் தலித் எழுச்சிக்குப் பிறகு இந்த அதிகார பிரதிநிதித்துவம் இறுக்கமடைந்துவிட்டது என்றும் சாதி அடிப்படையிலான வாக்கரசியல் மேலும் கூர்மையடைந்துவிட்டது என்றும் சான்றுகளுடன் விவரிக்கிறார். நேரமின்மை காரணமாக ஒன்றை மட்டும் விளக்குகிறேன். படிநிலைச் சமூகத்தில் சாதி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இடைநிலைச் சாதியினரிடையேயும் பட்டியலினத்தவர்களிடையேயும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியதில் திராவிடக் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன. குறிப்பிட்ட சில சாதிகளுக்கு அதிகாரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் வழங்கிய திராவிடம், அதே நிலையிலுள்ள பிற சாதிகளை ஒதுக்கியது சாதிய மோதலை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் தேர்தல்களில் வாக்குகளைப் பிரிக்கவும் உதவியிருக்கிறது. உதாரணத்திற்கு, பாஜக கிருஷ்ணசாமியை ஆதரித்ததற்கும், திமுக அதியமானை ஆதரித்ததற்கும், அதிமுக ஜெகன்மூர்த்தியாரை ஆதரித்ததற்கும் இத்தகைய பிரித்தாளும் தந்திரமே காரணம். சாதி, மதம் கடந்து ஒன்றிணைவதையும், வர்க்கமாக ஒன்றிணைவதையும் தடுத்து அதிகார மோதலை வளர்த்துவிட்டதே திராவிடத்தின் சாதனை. 

இப்போது திராவிடக் கட்சிகளின் செயற்பாடுகளைக் காலனியத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல் என அனைத்து தளங்களிலும் அது அதிகார வேட்கையோடு இயங்கியதைப் புரிந்துகொள்ளலாம். ‘காலனியம் தனக்கு முந்தைய சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில்லை. அதை மாற்றுகின்றது. ஒரு புதிய காலனியக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குகின்றது. அந்தப் புதிய காலனியக் கட்டமைப்பு உலக முதலாளித்துவ அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி’ என்ற பிபின் சந்திராவின் கூற்றை எடுத்துக்கொண்டால், திராவிடம் தனக்கு முந்தைய சமூக கட்டமைப்பைப் பாதுகாக்கவில்லை. மாறாக மன்னர்கள் புகழ்பாடும் உணர்வுரீதியான பழம்பெருமை கட்டமைப்பை உருவாக்கியது; பண்பாட்டுக் கூறுகளைத் தவிர்த்துவிட்டு வறட்டு பகுத்தறிவை பேசியது; இடைநிலைச் சாதியினரின் அதிகார நிலைகளை மேம்படுத்தியது. இவை யாவும் தற்போது பார்ப்பனிய அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. பட்டியலின மக்களை மதம் மாற வைத்த பெரியார், இடைநிலை சாதியினருக்கு மதமாற்றம் செய்யத் தவறியது (அ) அதிக அளவில் செய்யாததன் விளைவே இது என்கிறார் கட்டுரையாளர். பார்ப்பனியத்தை எதிர்க்கிற போராட்டத்தில் பெரியார், இடைநிலைச் சாதியினரின் சமயக் கருத்துகளை அத்தனை வீரியமாக விமர்சிக்கவில்லை. மென்மையான போக்கையே கடைப்பிடித்தார். வள்ளலார் குறித்த புத்தகங்களைக் கூட அவர் பதிப்பித்திருக்கிறார். வைணவத்தை எதிர்த்த அளவுக்கு பெரியார் சைவத்தை எதிர்க்கவில்லை என்கிறார் கட்டுரையாளர். பெரியாரின் பிரச்சாரங்களின்போது சைவ மடங்கள்தான் அவருக்கும் தொண்டர்களுக்கும் தங்குமிடமும் நிதியுதவியும் அளித்தன என்பது அனைவரும் அறிந்ததே. இதன் தொடர்ச்சியை அண்ணாவின் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற நிலைப்பாட்டிலும் காணலாம். ‘பகுத்தறிவையும் சுயமரியாதையையும் வலியுறுத்திய போதிலும் திராவிட இயக்கத்தின் உள்ளீடாகச் சைவத் தமிழ் அடையாளமும் சைவக் கறை படிந்த தமிழ் வரலாறும்தான் இருக்கிறது என்பதே உண்மை.’11 என்ற ஸ்டாலின் ராஜாங்கத்தின் கூற்றும் கவனிக்கத்தக்கது. இப்போது அந்த ஒரே குலம் எது, ஒரே தேவன் யார் என்பது விளங்கியிருக்கும். 

காலனியத்தின் மற்றொரு பண்பு அதன் அடக்குமுறை. தனக்கு எதிரான கருத்துகளை வன்முறை உள்ளிட்ட பல வடிவங்களில் அது எதிர்க்கும். இங்கு திராவிடம் அடையாளப்படுத்தவது அல்லது முத்திரையிடுவதன் மூலம் எதிர்க்கருத்துகளை ஒடுக்குகிறது. தன்னை எதிர்த்து பேசுபவரை ‘தேச விரோதி’ என்று அடையாளப்படுத்தும் பாஜகவை போலவே, திராவிட ஆதரவாளர்களும் தங்களுக்கு எதிரான கருத்துகளுக்கு ‘சனாதனம்’, ‘சாதியவாதம்’, ‘சங்கி’ என முத்திரை குத்திவிடுகிறார்கள். இது ஒருவகையான தப்பித்தல் மனப்பான்மை. ‘கர்ணன்’ பட விவகாரத்தில் கூட திராவிடத்தின் பாசிச முகம் வெளிப்பட்டது. மக்களை அரசியல்மயபடுத்தாமல் இங்கு எந்த விடுதலையும் சாத்தியமில்லை. திராவிடம் மக்களை சாதிமயப்படுத்தி தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது. சாதிய மனநிலையை மேலும் இறுக்கமாக்கி தன் வறட்டுச் சிந்தனைக்கான தேவையை அதுவே உருவாக்கிக்கொள்கிறது. ‘சாதி என்றாலே அதைத் தமிழகத்தில் ஓட்டு வங்கியாக இல்லாத பிராமணர்களுக்குச் சொந்தமாக்கிவிடுவதும், ஓட்டு வங்கியாக இருக்கும் பிராமணரல்லாத சாதிகளிடமிருந்து தனித்து நிறுத்துவதும் அதன் அரசியல்.’11a இப்படியாக இங்கு ஆரிய - திராவிட போரைக் கட்டமைத்துக்கொண்டே பிற சிறுபான்மை மக்களை ஒடுக்குகிறது. இந்த இடத்தில் பின்னைக் காலனியத்தோடும் திராவிடத்தை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். காலனியத்தின் எதிர்ச் செயற்பாடாகத்தான் பின்னைக் காலனியம் இயங்கியது. 

காலனியாதிக்கத்தை எதிர்த்து உருவானதுதான் பின்னைக் காலனியம். அந்தவகையில் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்து உருவான திராவிடம், தனக்கு ஆதரவான அனைத்து தத்துவங்களையும் இணைத்துக்கொண்டு வளர்ந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், தன் பார்ப்பனிய சிந்தனையால் திராவிடக் காலனியத்தை உருவாக்கியது. ‘காலனியம் இன்றும் இருக்கிறது, ஏனென்றால் அதன் மூலவேர் அறிவுத்தோற்றவியல் காலனியத்தில் (Epistemological colonization) இருக்கிறது’12 என்பார் ரமோன் கிரோஸ்ஃபுகேல். அதில்தான் திராவிட பார்ப்பனியத்தின் வெற்றிபெற்றிருக்கிறது. ஏனென்றால் இங்கு ஆளுங்கட்சி திமுக என்றால், எதிர்க்கட்சி அதிமுக. மாற்றுக்கட்சி நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என எல்லாமே பார்ப்பனியத்தின் மாறுபட்ட வடிவங்களே. திராவிடத்திலிருந்து (பார்ப்பனியத்திலிருந்து) வெளியேறாமல் நமக்கு மீட்சி இல்லை. அயோத்திதாசரைப் போல், அண்ணல் அம்பேத்கரைப் போல் பண்பாட்டுப் புரட்சியை மேற்கொள்ளாமல் விடுதலை சாத்தியமில்லை.                  

இன்னும் பல தளங்களில் விரியும் இந்த திராவிடக் காலனியத்தை மிகச் சுருக்கமாக இங்கே சொல்லியிருக்கிறேன். நூறாண்டுகால திராவிட சிந்தனையை அதைவிட முந்நூறு, நானூறு ஆண்டுகால காலனியத்தோடு ஒப்பிடுவது எளிய முயற்சியல்ல. சமகால எல்லைக்குள் நின்று இதை விளக்கியிருக்கிறேன். கடைசியாக, என்னதான் பார்ப்பனரல்லாதார் அமைப்பு, கட்சி என்று சொல்லிக்கொண்டாலும் பார்ப்பனியமே உங்கள் தத்துவமாக இருக்கிறது. படிநிலைச் சமூகத்தை உருவாக்கிய மதத்தை, அதற்கு அதிகாரம் வழங்கிய சாத்திரங்களை, புராணங்களைவிட்டு வெளியேறாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது. ஜாதி ஒழிப்பு என்பது பெயரில் இல்லை; மனநிலையில் இருக்கிறது. தலித் மக்கள் பொது சமூகத்தோடு இணைய விரும்புகிறார்களேயொழிய, பணிந்துபோக விரும்பவில்லை. காலனியச் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள், பின் காலனியம், பின் நவீனத்துவம், பின் தலித்தியம் என்று சிந்தனைகள் வளர்ந்துகொண்டே போகிறது. பின் திராவிடத்தை நோக்கி முதலடி எடுத்து வையுங்கள் என்று தன் பார்வையை முன்வைக்கிறார். திராவிட இயக்கங்களுக்கு இது வெறும் தோழமைச் சுட்டலே. இந்திய வரலாற்றை ஆரிய – திராவிட முரண்பாடாக இல்லாமல் பார்ப்பனியத்திற்கும் பௌத்தத்திற்குமான போராக உணருங்கள். இளைஞர்களால் அதிகாரம் பெற்ற இயக்கம், இன்று இளைஞர்களை ஈர்க்க திண்டாடுகிறது. முதலில் கருப்பு சட்டை அணிந்தவரெல்லாம் முற்போக்காளர்கள் என்ற மூடநம்பிக்கையிலிருந்து வெளியே வாருங்கள்.


குறிப்புகள்:

1. பிபன் சந்திரா, ‘காலனியம்’, த.அசோகன் முத்துசாமி (மொ-ர்.), பாரதி புத்தகாலயம், சென்னை, 2012, பக்: 4 - 5
2. டி.எம். மணி, ‘ஜாதி ஒழிந்தது’, வேர்கள் பதிப்பகம், பக்: 59 - 62
4. கந்தையா சண்முகலிங்கம், ‘சுந்தர ராமசாமியின் காலச்சுவடு’, பக்: 287
5. சவிதா முனுசாமி, ‘சேரிப்பெண் பேசுகிறேன்’, நவபோதி பதிப்பகம், பக்: 98
6. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு - 7, பக்: 433
7. அன்பு பொன்னோவியம், ‘உணவில் ஒளிந்திருக்கும் சாதி’, சித்தார்த்தா பதிப்பகம், பக்: 62
8. சந்திர பான் & டாக்டர் ஷியோராஜ் சிங், தி இந்து 04.01.2000
10. Peter Barry, ‘Polginning Theory – An introduction to(Peter Barry, ‘Polginning Theory – An introduction toLiterary and Cultural Theory’, Manchester UniversityPress, 1995, Pp.88-92
11. ஸ்டாலின் ராஜாங்கம், ‘சாதியம் கைகூடாத நீதி’, காலச்சுவடு பதிப்பகம், பக்: 149
11a. ஸ்டாலின் ராஜாங்கம், ‘சாதியம் கைகூடாத நீதி’, காலச்சுவடு பதிப்பகம், பக்: 137
12. https://www.meipporul.in/decolonisation-in-theory-and-practice/


நீலம், ஜூலை 2021

Comments

Popular posts from this blog

அத்தனை எளிதில் கிட்டுமா ஜிஸ்மானியத்தான மிஃறாஜ்

பேரன்பும் பெருங்கோபமும்