கார்த்திக் சுவாமிநாதன் கேமரா வழியே தனுஷ்

திரை



ரங்கு முழுவதும் கைதட்டல்கள் ஒலிக்க, என்ன நினைப்பதென்றே தெரியாமல் கார்த்திக் தடுமாறும் அந்தக் காட்சி... தன் திரைவாழ்வில் இப்படியான நடிப்பை, அதற்கு முன்னரும் பின்னரும் தனுஷ் வெளிப்படுத்தியதில்லை என்றே சொல்லலாம். ஒரு கதாபாத்திரம் தன்னை முழுவதுமாக ஆட்கொள்ள அனுமதித்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியேறும் வித்தை தனுஷுக்கு வாய்த்திருப்பது நிச்சயம் ஆச்சரியமானதல்ல. தன் தேர்வுகள் குறித்தும், தன் அளவுகோல்கள் குறித்தும், தன் திறமை குறித்தும் அவருக்குத் தெளிவான பார்வை இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களில் தனிப்பட்ட தனுஷ் பிரதிபலித்துவிடக் கூடாது என்ற பிரக்ஞை இருப்பதும் முக்கியமானது. ஆனால் அதையும் மீறி கார்த்திக் சுவாமிநாதனுக்குள் தனுஷ் வெளிப்பட்டதுதான் இக்கட்டுரையின் மையப்புள்ளி.

கஸ்தூரிராஜா – விஜயலட்சுமி தம்பதியினரின் கடைசி பிள்ளை தனுஷ். மூத்தவர் செல்வராகவன், படிப்பில் கெட்டிக்காரர்; பொறியியல் பட்டதாரி. இரண்டு சகோதரிகளும் மருத்துவர்கள். குடும்ப சூழல் காரணமாக தனுஷ் மட்டும் பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டு திரைத்துறைக்குள் நுழைகிறார். நமக்குத் தெரிந்தவரையில் இதுவே தனுஷின் பிண்ணனி. இதன் அடிப்படையில் அவரது உளவியலைப் புரிந்துகொள்ள முற்பட்டால், வேறொரு பரிமாணம் கிடைக்கக் கூடும். பொதுவாகவே இளைய மகன்கள் மீது கூடுதலான பாசமும் அன்பும் இருந்தாலும், பொறுப்பு, கடமைகள் போன்றவை அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவதில்லை. மேலும், புறவுலகு பற்றிய விஷய ஞானம் உள்ளவராகவும் அவர்களை ஏற்பதில்லை. குடும்ப கட்டமைப்பின் அதிகார படிநிலையில் பெரும்பாலும் இவர்கள் அடித்தளத்திலேயே இருப்பார்கள். இதை தனுஷுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

பள்ளிப் படிப்போடு திரைத்துறைக்குள் நுழைந்தவருக்கு செல்வராகவன்தான் வழிகாட்டி. அவரது பட்டறையிலேயே மெருகேற்றப்படுகிறார். ‘காதல் கொண்டேன்’ கதாபாத்திரம் தனுஷ் என்ற தனிமனிதனுக்கு அந்நியமானது. அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை குறித்து எந்தப் புரிதலும் இருந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் பாராட்டப்பட்டார். இதற்கு முக்கிய காரணமாக செல்வராகவன் இருந்தாலும், அக்கதாபாத்திரத்தின் உளவியலோடு தனுஷ் தன்னையும் ஒப்புநோக்கியிருக்கக் கூடும். அடுத்தடுத்த படங்களில் அவரது வயதின் இயல்புக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைந்தபோதும் அவை வெற்றிபெறவில்லை. ‘ட்ரீம்ஸ்’ தோல்வியோடு அவரது திரை வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே பலரும் பேசினார்கள். மீண்டும் ‘புதுப்பேட்டை’யில் அண்ணனால் கூர்தீட்டப்படுகிறார் தனுஷ். அவருக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத கதாபாத்திரம். இன்றளவும் பேசக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மொத்தத்தில் ‘ஜீனியஸ்’ செல்வராகவன் இல்லையென்றால் தனுஷ் இல்லை என்றே வரலாறு பேசியது. இங்கேயும் அவரது உளவியலை உற்றுநோக்கினால், குடும்பத்தின் கடைசி பையன், செல்ல மகன், திரையிலும் அடுத்த வீட்டு பையன் என்ற ஆதர்சமான உருவகம், ஆனால் தனிப்பட்ட அங்கீகாரம் என்றில்லாமல் அண்ணனோடு இணைந்தே அந்த அங்கீகாரம் கிடைக்கிறது. இதற்கு அவரது கல்வித் தகுதியும் காரணமாக இருக்கலாம். இன்னொரு பக்கம் உருவ கேலி. நடிகராக ஏற்றுக்கொண்ட சமூகம், கதாநாயகனாக ஏற்க தயங்கியது. ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘சுள்ளான்’ போன்ற படங்களில் சிறப்பாகவே நடித்திருந்தாலும், அவை ஏற்கப்படாமல் போனதற்கு தனுஷின் உருவமே காரணம். இதற்கிடையில் யாருமே கற்பனை செய்யாத வகையில் அவருக்குத் திருமணம் நடக்கிறது. இதுவரை அண்ணனோடு இணைந்து கிடைத்த அங்கீகாரம், இனி மாமனாரோடு இணைத்து கிடைக்கப் போகிறது. தனுஷின் வெற்றி என்பது அவரது முயற்சியில் வந்தது என்பதை விட அதிர்ஷ்டத்தால் வந்தது என்றே அதுவரையில் கருதப்பட்டது. “படங்கள் ஓடவில்லையென்றாலும் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்” என்றே பரவலாக பேசப்பட்டது. உளவியலாக இதிலிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சி செய்திருப்பார் தனுஷ். ‘திருடா திருடி’ தொடங்கி ‘சுள்ளான்’ வரையிலான திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்கள் வீட்டுக்கு அடங்காத இளைய மகன், ஒரு கட்டத்திற்கு பிறகு தன் தவறுகளை உணர்ந்து அதை சரி செய்வதாக முடியும். கிட்டத்தட்ட இது ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘மாப்பிள்ளை’ வரை சிறிய மாற்றத்துடன் தொடர்ந்தது. அந்தச் சிறு மாற்றத்தில்தான் தனுஷ் தன் உளவியல் சிக்கலிலிருந்து வெளியேற முயன்றதை நாம் உணர முடியும்.

‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் தனுஷின் திரைவாழ்க்கையிலும், தன்னுணர்விலும் மிக முக்கியமான திரைப்படம். அதுவரை இளைய மகன் கதாபாத்திரத்தில் நடித்தவர், அந்தப் படத்திலிருந்து மூத்த மகன் (அ) ‘அண்ணன்’ கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். தன் மீது செலுத்தப்பட்ட அத்தனை குடும்ப அதிகாரங்களையும், தன் தமையன் கதாபாத்திரம் மீது செலுத்த தொடங்கினார் தனுஷ். இருப்பினும் பொறுப்பற்ற இளைஞன் என்ற பாத்திர வடிவமைப்பு ‘மாப்பிள்ளை’ வரை தொடரவே செய்தது. அதன் பின்னணியில் வியாபார காரணங்களும் இருக்கலாம். அதுவரை, தனக்கு ஒன்றும் தெரியாது என்ற பழியை சுமந்தவர், ‘திருவிளையாடல்’ படத்தின் மூலம் உளவியலாக அதிலிருந்து வெளியேற முயன்றார் அல்லது தன் சகோதர கதாபாத்திரங்கள் மீது அப்பழியைச் சுமத்தினார். “எல்லாம் தெரிஞ்ச மாரி பேசாத”என்ற வசனம் அவரது பெரும்பாலான படங்களில் இடம்பெறும். முக்கியமாக ‘அசுர’னில் இது பல இடங்களில் வெளிப்படும். தன்னைவிட வயதில் குறைந்தவரை தலையில் அடிப்பது, காலால் எத்துவது போன்ற காட்சிகள் இல்லாத தனுஷ் படங்களே இல்லையென்று சொல்லலாம். அண்மையில் வந்த ‘கர்ணன்’ உட்பட. இப்படியாக தனுஷ் தன் ‘இளைய மகன்’ என்ற தனிப்பட்ட சிக்கலை திரைக்குள் ஓரளவு மீற முயன்றிருக்கிறார். குடும்ப கட்டமைப்பில் கடைசி பிள்ளையாக இருப்பவர்கள், தன்னைவிட இளையவர்களிடம் ஆதிக்கத் தன்மையோடு நடந்துகொள்வதோடு இதைப் பொருத்திப் பார்க்கலாம். பிரதிக்குள் உள்ள நிகழ்வுகளுக்குப் பதிலாக தன்னுடைய தனிப்பட்ட மனநிலைகளையும் இணைத்து வெளிப்படுத்தும் உடா ஹேகனுடைய நடிப்பு முறையின் அடுத்த கட்ட பரிமாணமாக தனுஷின் நடிப்பை புரிந்துகொள்ளலாம். அதாவது பிரதிக்குள் உள்ள நிகழ்வுகளோடு தன்னுடைய மனநிலையை இணைத்து வெளிப்படுத்தும் நடிப்புமுறையை அவர் கையாள்வதாக கொள்ளலாம்.

மற்றொரு சிக்கலாக அண்ணனோடு இணைந்து கிடைக்கப்பெற்ற அங்கீகாரத்தை மீறவும் பலவாறாக போராடியிருக்கிறார் தனுஷ். பாலுமகேந்திராவுடன் பணிபுரிந்தது முக்கிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. சில இயக்குநர்களோடு தொடர்ந்து பணியாற்றுவதன் மூலம் தனக்குகந்த சூழலில் தன் படைப்பாற்றலை மேம்படுத்திக்கொள்ள நினைத்திருக்கலாம். அந்தவகையில் பூபதி பாண்டியன், வெற்றிமாறன், மித்ரன் ஜவஹர், சுராஜ் என சில இயக்குநர்களைக் கண்டடைந்தார். அவர்களோடு தொடர்ந்து படங்கள் செய்தார். இருப்பினும். தனுஷ் குறித்த பொதுப் பார்வையிலும், கதாபாத்திர கட்டமைப்பிலும் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. ஆனால் அவரது நடிப்பிலும் கதைத் தேர்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தபடியே இருந்தன. விடலைத்தனமான கதாபாத்திரத்திலும் சில மாற்றங்களை செய்துகொண்டார். ‘பொல்லாதவ’னில் அதை உணரலாம். அந்த விடலைத்தனத்திற்குள்ளே ஒரு வலியையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தினார். மேலும், உடல் ரீதியாகவும் தன் மீதான விமர்சனத்திற்கும் சிக்ஸ் பேக் மூலம் பதிலளித்தார். அதுவரை குறும்புத்தனமான இளைஞனாக இருந்தவர் மெல்ல மெல்ல குடும்ப பார்வையாளர்களின் நாயகனாக உருமாற தொடங்கினார். இளைய மகன் மனநிலையில் இருந்து பொறுப்புள்ள அதிகாரத்தை பெறக்கூடிய மூத்த மகன் மனநிலை நோக்கிய செயற்பாடாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். அந்த வகையில் உளவியலாக தனுஷ் தன்னை மெருகேற்றிக்கொண்டதாகவே தெரிகிறது. அதன் உச்சநிலையாக அமைந்ததுதான் ‘மயக்கம் என்ன’ கார்த்திக் சுவாமிநாதன் கதாபாத்திரம்.

பொறுப்பற்ற இளைஞன் என்ற உருவகத்திலிருந்து தெளிந்த சிந்தனை கொண்ட இளைஞனாக தனுஷ் உருமாறத் தொடங்கிய படம் ‘மயக்கம் என்ன’. வாசு போல், பிரபு போல், கே.பி. கருப்பு போல் விட்டேத்தியாக சுற்றும் இளைஞன் அல்ல கார்த்திக். தான் என்ன செய்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ள இலட்சியவாத பார்வை கொண்டவன். தலையில் அடிபட்டு மூர்க்கமான மனநிலையில் இருக்கும்போதும் தன் கனவைக் கைவிடாதவன். இந்தப் போக்கு ‘அநேகன்’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மரியான்’, ‘அசுரன், ‘கர்ணன்’ என அவர் அடுத்தடுத்து நடித்த படங்களிலும் தொடர்ந்ததைக் கவனிக்கலாம். ‘மாரி’ கதாபாத்திரம் கூட விட்டேத்தியாக இருந்தாலும் அதன் பின்னணியில் ஒரு நிராகரிப்பு இருக்கும். மேலும், தான் என்ன செய்கிறோம், அதன் விளைவு என்ன என்பதை நன்றாக உணர்ந்து செய்யக்கூடிய கதாபாத்திரம் அது. தன் முதிர்ச்சியை நடிப்பில் மட்டுமல்லாமல் பாடல்கள், தயாரிப்பு என பன்முகத் தன்மையோடு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஏதும் அறியாதவன் என்ற இளைய மகன் பிம்பத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவருக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இவையெல்லாவற்றையும் விட மிக முக்கிய மாற்றம் ஒன்றை கார்த்திக் சுவாமிநாதன் சாத்தியப்படுத்தினார்.

தன் அண்ணன் பட்டறையில் உருவானவர், அவரைத் தாண்டி இவரால் நடித்துவிட முடியாது என்ற கருதுகோளையும் மீறி பார்த்தார் தனுஷ். ஜீனியஸ் செல்வராகவனின் நடிப்புமுறையைக் கைவிட்ட தனுஷ், “இனிமேலும் நீ நடிச்சுக் காட்டாத, நானே நடிக்கிறேன்” என வெளிப்படையாகவே அண்ணனின் வட்டத்திலிருந்து விலக தொடங்கினார். பொதுவாக செல்வாவின் கதாபாத்திரங்களில் அவர் மட்டுமே தெரிவார். சற்றே நாடகத்தனம் கலந்த நடிப்பு அனைவரிடமும் வெளிப்படும். இம்முறை தனுஷ் அதைச் செய்யவில்லை. அவரது நடிப்பில் எங்கேயுமே செல்வாவின் க்ளிஷே இல்லை. ‘மயக்கம் என்ன’ கதையை செல்வராகவன் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பலரும் விவாதித்தனர். ஆனால் மறுமுனையில் யோசித்தால், அது தனுஷுக்கும் பொருந்தும். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், தன்னுணர்வு குறித்தும் பெரிதும் பகிர்ந்துகொள்ளாத தனுஷ், மேடைகளில் அதீத அடக்கத்தோடு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தனுஷ், அப்படிச் செய்வதன் மூலம் திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான். ‘நான் பொறுப்பற்றவன் அல்ல, விட்டேத்தியானவன் அல்ல, நானும் திறமைசாலிதான்’ என்பதே அது. கார்த்திக் சுவாமிநாதன் மூலம் அதைச் சொல்ல தொடங்குகிறார். மனிதனின் அத்தனை பலம், பலவீனங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தனுஷ் தன்னை முழுமையாகவே ஒப்படைத்தார். தன் எல்லை எது, எங்கே மீற வேண்டும், எங்கே பணிய வேண்டும், எங்கே கட்டுடைக்க வேண்டும் என்பதை கதாபாத்திரத்திற்குள்ளேயே பரிசோதித்துக்கொண்டார்.

செல்வராகவன், தனுஷ் இருவருமே பொருளாதார ஒடுக்குமுறையை சந்தித்திருக்கின்றனர். சமூக ஒடுக்குமுறை குறித்து செல்வா உணர்ந்த அளவுக்கு தனுஷ் உணர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே. இந்நிலையில் இருவருமே தமக்கான அடையாளத்தை உருவாக்கவே போராடியிருப்பர். அதில் செல்வராகவன் தடாலடியாக சில விதிமீறல்களைக் கையாண்டார். திரைத்துறையில் கொஞ்சம் வேகமாகவே பயணித்தார் என்றே சொல்லலாம். இயக்குநராக தொடக்கத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றிகள் அவரை உந்தி தள்ளியது. புதுப்புது வண்ணங்களைத் தேடி ஓடினார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரை இழுத்துப் பிடித்தார்கள். வியாபாரம், காலகட்டம், அடையாளம் எல்லாமே அவரை நெருக்கியது. இப்போதுவரை அவர் அங்கேயே நின்றிவிட்டார் என்றே சொல்லலாம். ஆனால் தனுஷ் அப்படி தடாலடியாக பயணிக்கவில்லை. ஏனென்றால் செல்வராகவனின் முகம் பிரதியில் தெரியாது. தனுஷின் முகம் பிரதியில் தெரியும். இதுதான் காரணம். தன்னை கதாநாயகனாக ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் நெடும்பயணம் போக வேண்டும் என்பதை தொடக்கத்திலேயே தனுஷ் உணர்ந்திருப்பார். அந்தந்த காலகட்டத்தை ஒட்டியே தனது எல்லையை மீறினார் தனுஷ். அந்தவகையில், அவர் தொடர்ந்து பணியாற்றிய இயக்குநர்களில் வெற்றிமாறனை மட்டுமே தக்கவைத்துக் கொண்டார். இவையாவும் தனுஷ் என்ற தனிமனித ஆளுமையின் வெளிப்பாடு. சில உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்தபோது, “அதிலிருந்து வெளியே வர மிகவும் சிரமப்பட்டேன்” என தனுஷ் சொல்லியதுண்டு. ஆரம்பகாலத்தில் சொல்லயிருந்தால் பிரச்சினை இல்லை, 40 படங்களுக்குப் பிறகும் இப்படி சொல்வது... வெறும் மேடைப் பேச்சு என்று கருத முடியாது. தன்னுடைய சுயத்தை தன் கதாபாத்திரங்களில் தேடும், அல்லது மறைக்க முயலும் ஒருவராக தனுஷ் வெளிப்படுகிறார். இப்போது இதை மீண்டும் ஹேகனின் நடிப்புமுறையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

அவரது எல்லை மீறலின் சாமர்த்தியமான பாய்ச்சலை. ‘மயக்கம் என்ன’ படத்தில் நிகழ்த்தியிருப்பார். தன் ஆழ்மனதில் பதிந்துபோயிருக்கும் பலதரப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிரான பார்வையை செலுத்தியிருப்பார் கார்த்திக் சுவாமிநாதன். பொறுப்பற்றத்தன்மையின் எதிர்வினையாக இல்லாமல், தன் லட்சியத்தின் மீதான அடையாளத்தின் மீதான ஒடுக்குமுறையையும் அதிலிருந்து மீண்டு ஒடுக்கியவனை கூர்மையான பார்வையால் ஒடுக்குவது என கார்த்திக்கையும் மீறி தனுஷ் வெளிப்பட்ட தருணமாக அதைப் பார்க்கலாம். இதற்காகவே தனுஷ் காத்திருந்ததாக தெரிகிறது. கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உடைக்கத் தொடங்கியாயிற்று. இனி அதை விட்டுவிடக் கூடாது என்று முடிவு செய்திருக்கலாம். உதாரணமாக இப்படத்திற்குப் பிறகே தனுஷ் தயாரிப்பாளராக உருவெடுக்கிறார். தன்னுடைய அறிமுகங்கள் என சிலரை முன்னிறுத்த அவர் நினைத்திருக்கலாம். அனிருத், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், ஷான் ரோல்டன் என பலருக்கும் வாய்ப்பு கொடுக்கிறார். இதற்கெல்லாம் உரம் போட்டது ‘மயக்கம் என்ன’ என்றால் மிகையாகாது.

தன்னுடைய பலம், பலவீனம் ஆகியவற்றை சரியாக கணித்தவர் தனுஷ். தன் உடலை வைத்தே அதன் மீதான விமர்சனத்தை உடைத்திருக்கிறார். நடிப்பதற்கான முகம் இல்லை என்ற விமர்சனத்தை இதற்கு முன் பலரும் எதிர்கொண்டிருக்கிறார்கள்; சிலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். கதாநாயகனுக்கான முகமும் உடலும் இல்லை என்ற விமர்சனத்தை தன் உடலை வைத்தே உடைத்திருக்கிறார். அந்த உடலுக்கான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்தது, அதன் வழியாகவே தன் சுயத்தை அர்த்தப்படுத்திக்கொண்டது என தனுஷ் தேர்ந்த கலைஞனாகவே மிளிர்கிறார். “இந்த உடலை வைத்து என்னென்ன கதாபாத்திரங்கள் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்துவிட்டுத்தான் உடல் எடையை ஏற்றுவேன்” என பேட்டி ஒன்றில் சொன்னது நினைவுகூரத்தக்கது.

தன்னுடைய வெற்றியை விட தன்னுடைய தோல்வியே இங்கு பிரதானப்படுத்தப்படும் என்பதை தொடக்க காலங்களிலேயே தனுஷ் புரிந்துகொண்டிருக்கிறார். எத்தனை உயரம் போனாலும் சமூகம் தன்னை கீழே தள்ளிவிட ஒருநொடி போதும் என்பதையும் உணர்ந்திருக்கிறார். மிகவும் பாதுகாக்கப்பட்ட வளையத்திற்குள் தன்னை இருத்திக்கொள்வதற்கான காரணமும் இதுவாக இருக்கலாம். இளையராஜா நினைத்திருந்தால், ரஜினிகாந்த் நினைத்திருந்தால் இந்த சமூகம் உருவாக்கியிருக்கும் எல்லையை ஒட்டுமொத்தமாக கட்டுடைத்து மீறியிருக்க முடியும். ஆனால் அதன்பிறகு அவர்கள் வீழ்த்தப்பட்டு காணாமலாக்கப்பட்டு விடுவார்கள். அந்தப் புரிதல்தான் இன்னமும் அவர்களை தக்கவைத்திருக்கிறது. தனுஷும் இதை உணர்ந்தே காலம் அனுமதிக்கும் மீறலை மட்டும் மேற்கொள்கிறார்.

இந்தப் பரிணாம வளர்ச்சியை கார்த்திக் சுவாமிநாதன் வழியாக புரிந்துகொள்ளலாம். ஒரே கதாபாத்திரம் வழியாக தன் மீதுள்ள இருவகையான விமர்சனங்களுக்கும் பதிலளித்திருக்கிறார். அவரது இந்த வளர்ச்சியில் இளைய மகன் என்பதில் உள்ள உளச்சிக்கலைக் கடந்துபோவதற்கும், வெளியேறுவதற்குமான மையப்புள்ளியாக ‘மயக்கம் என்ன’ அமைந்திருக்கிறது. ஆனால், தன்னைவிட இளையோரை அவர் எப்படி கையாள்கிறார் என்பது இதன் மறுபக்க பிரச்சினை. இதிலிருந்தும் மீள அவரால் முடியும், ஆனால் அதை செய்யத் துணிவாரா என்பதை காலமே தீர்மானிக்கும்.


படச்சுருள், மே 2021

Comments

Popular posts from this blog

இன்னும் எத்தனைக் காலம்தான்...?

அத்தனை எளிதில் கிட்டுமா ஜிஸ்மானியத்தான மிஃறாஜ்

பேரன்பும் பெருங்கோபமும்