டாக்டர் அம்பேத்கரின் வாழ்வில் திரைப்படங்களும் கலைஞர்களும்
ஸ்பவ சாய்ராம்
தமிழில்: சிவராஜ் பாரதி
டாக்டர் அம்பேத்கரின் பொது வாழ்வு குறித்தும், பலரது வாழ்க்கையை மாற்றிய அவரது சமூக விடுதலைக்கான செயற்பாடுகள் பற்றியும் பல நூல்களும் கட்டுரைகளும் வெளியாகியிருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்வு பற்றி மிகக் குறைந்த தகவல்களே (அதுவும் ஆங்கிலத்தில்) கிடைக்கின்றன. இக்கட்டுரையில் அவரது தனிப்பட்ட வாழ்வின் ஆச்சரிய அம்சமான அவர் பார்த்த திரைப்படங்கள்; உரையாடிய திரை - இசை ஆளுமைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருக்கிறேன். மேலும், 1942இல் திரைப்பட இதழொன்றுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் அளித்த நேர்காணலின் சில பகுதிகளை மேற்கோள் காட்டியிருப்பது இக்கட்டுரையின் தனித்துவமாகும்.
டாக்டர் அம்பேத்கர் என்னென்ன திரைப்படங்கள் பார்த்தார்? அவர்
உரையாடிய கலை ஆளுமைகள் யாவர்? இந்தக் கேள்விகளுக்குத் துல்லியமாகப் பதிலளிப்பது சிரமம்.
அதனால், அவரது வாழ்வை மூன்று கட்டங்களாகப் பிரித்து அவர்
பார்த்த திரைப்படங்களையும் சந்தித்த ஆளுமைகளையும் கண்டறிய முயன்றிருக்கிறேன்.
முதற்கட்டம்
(1910 - 1930)
டாக்டர் அம்பேத்கர் பார்த்த முதல் படம் 1927இல் வெளியான ‘Uncle Tom’s Cabin’ என்று நம்பப்படுகிறது.
இப்படத்தை மனைவி ரமா பாயோடு சேர்ந்து பார்த்தார் என்றும் சொல்லப்படுகிறது.1
அதேசமயம், 1927க்கு முன்பு அவர் திரைப்படங்களைப் பார்த்ததேயில்லை என்பது இதன் பொருளல்ல.
அவருக்கு இருபது வயதான காலகட்டங்களில் பம்பாய் நகரத்தில் திரைத்துறை வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது
என்பது நமக்குத் தெரிந்ததே.
“உலக அளவில் திரை தொழிற்நுட்பத்தில் ஏற்பட்ட
முன்னேற்றங்களை உள்வாங்கிய மகாராஷ்டிர மாநிலம், உள்ளடக்கத்தாலும் உருவாக்கத்தாலும்
மேற்கில் தோன்றிய இக்கலையை இந்தியமயமாக்கியது. 07 ஜூலை 1896 அன்று மும்பை வாட்சன் ஹோட்டலில்
முதன்முதலாக 12 குறும்படங்கள் அடங்கிய தம் முதல் தொகுப்பை லூமியர் சகோதரர்கள் திரையிட்டனர்.
இரண்டு ரூபாய் டிக்கெட் விலையில் 200 பார்வையாளர்கள் அதைக் கண்டனர். ஒரு வாரத்திற்குப்
பிறகு அப்படம் நாவல்டி திரையரங்கில் (பின்னாட்களில் எக்ஸல்ஸியர் என்று பெயர் மாற்றப்பட்டது)
தினம் இரு காட்சிகளாக, இரண்டு அணா முதல் இரண்டு ரூபாய் வரையிலான விலையில் திரையிடப்பட்டது.
...பிற வெளிநாட்டுப் படங்களும் திரையிடப்பட்டுவந்த நிலையில்
பார்சி சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.சேத்னா, மும்பையின் முதல் திரையரங்கை
1904இல் கட்டினார். வெளிநாட்டுப் படங்களில் புகழ்பெற்றவை, இரண்டு பாகங்கள் கொண்ட ‘Life of Christ’.
...1913இல் இந்தியத் திரைத்துறையைத் திசைதிருப்பிய ‘ராஜா
ஹரிச்சந்திரா’ வெளியானது.”2 என்று குறிப்பிடுகிறார்
எழுத்தாளர் மீரா கோசாம்பி.
03 மே 1913 அன்று இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமாகக்
கருதப்படும் தாதாசாகேப் பால்கே இயக்கிய ‘ராஜா ஹரிச்சந்திரா’ வெளியானது. டாக்டர் அம்பேத்கர், ஜூன் 1913க்குப் பிறகே கொலம்பியா பல்கலைக்கழகம்
சென்றார் என்பதை நாமறிவோம். இந்த இடைப்பட்ட காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய
இத்திரைப்படத்தை டாக்டர் அம்பேத்கர் பார்த்திருக்கக் கூடும். கெடுவாய்ப்பாக இது அனுமானமாக
மட்டுமே இருக்கிறது.
1913 ஜூலை மூன்றாம் வாரம் டாக்டர் அம்பேத்கர் நியூயார்க்
நகரம் வந்தடைந்தார். இக்காலத்தில் அமெரிக்காவில் திரைப்படங்களின் நிலை குறித்துப் புரிந்துகொள்வது
சுவாரசியமானது. 1910களில் முழுநீளத் திரைப்படங்கள் (நான்குக்கு மேற்பட்ட படச்சுருள்களைக்
கொண்டு, குறைந்தபட்சம் ஒருமணி நேரம் நீளம் கொண்ட படங்கள்) என்பது அமெரிக்காவில் மிக
அரிது. ஆனால், 1910க்குப் பிறகு இந்நிலை மாறியது. ‘கிளாசிக்கல் ஹாலிவுட் சினிமா’ என்று அடிக்கடி குறிப்பிடப்படும் அக்காலகட்டத்தில் பிரபல திரைப்பட ஸ்டூடியோக்களின்
புகலிடமாக நியூயார்க் நகரம் விளங்கியது.
“...ஸ்டூடியோக்களின் தலைமையகம் ஹாலிவுட்டோ, தென் கலிஃபோர்னியாவோ
அல்ல, நியூயார்க். இங்குதான் வங்கிகளிலிருந்தும் முதலீட்டாளர்களிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டது;
ஒவ்வொரு திரைப்படத்திற்கான செலவு, நீளம், தன்மை ஆகியவை குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன;
திரைப்படச் சுருள்களின் முன்பதிவும் விற்பனையும் ஒருங்கிணைக்கப்பட்டன. திரைப்பட நகரமாக
நீண்ட காலம் இயங்கிய பிறகும், குறிப்பாக 1910இன் பிற்பகுதி முதல் 1930இன் முற்பகுதி
வரையிலான காலகட்டத்தில் சில நிறுவனங்களால் இங்கு தொடர்ந்து திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன.
மேலும், பல முன்னணி நிறுவனங்கள் இங்கு தம் திரைப்படத் தொடர்புகளைக் கைப்பற்றி, நிர்வாகம்
செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தன”3
என்கிறார் பேராசிரியர் ஸ்டீவ் நீல்.
பாபாசாகேப் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில்
(1913 - 1916) Traffic in Souls or White
Newyork Sleeps (1913), சார்லி சாப்ளின் நடித்த Dough and Dynamite (1914), The
Call of The North (1914), சர்ச்சைக்குரிய படமான The Birth of a Nation (1915), The
Child of The Golden West (1915) உள்ளிட்ட பல முக்கிய படங்கள் வெளியாகின.
ஆனாலும், பாபாசாகேப் இத்திரைப்படங்களைப் பார்த்திருப்பார்
என்பதற்கு நம்மிடம் எந்தச் சான்றுகளும் இல்லை. இருப்பினும், அவர் நியூயார்க்கில் வாழ்ந்த
காலகட்டம், ஹாலிவுட்டின் உருமாற்றக் காலம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆதலால்,
அதை அவரும் கவனித்திருப்பார் என்று கருத இடமிருக்கிறது.
இரண்டாம்
கட்டம் (1931 - 1950)
1930களின் முற்பகுதியில் வி.சாந்தாராம் போன்ற சிறந்த இயக்குநர்கள்
பெரிய அளவில் பேசப்பட்டனர்.
“கோலப்பூர் அருகே உள்ள சிறிய ஊரில் ஜைன
தந்தைக்கும் ஹிந்து மராத்திய தாய்க்கும் பிறந்த வி.சாந்தாராம்ஞ் தன் தாயின் பின்னணி
குறித்துப் பெரிதாக எதுவும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. சாந்தாராமின் தாய்வழி
அத்தை திருமதி. பெந்தர்கர், தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என லீலா சிட்னிஸ் குறிப்பிடுகிறார்.”4
என்று மீரா கோசாம்பி கூறுகிறார்.
என்.எச்.ஆப்தேயின் கதையைத் தழுவி பாபுராவ் பெயிண்டர் இயக்கிய
‘சவகரி பஷ்’ (Savakari Pash, 1925) திரைப்படத்தின் மூலம்தான் சாந்தாராம் நடிகராகப் பிரபலமானார்.
ஆனால், அவர் நடிப்போடு நிற்கவில்லை. பல முக்கியத் திரைப்படங்களை இயக்கி, திரைத்துறையில்
தனக்கெனத் தனியிடத்தை உருவாக்கிக்கொண்டார்.
வி.சாந்தாராம் பாபாசாகேப்புடன் நல்லுறவு கொண்டிருந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது. “சைத்ய பூமியின் டிசம்பர் 6 கொண்டாட்டங்கள் உட்பட மும்பையின் பௌத்த
நிகழ்வுகளின் தீவிர ஆதரவாளர் சாந்தாராம். தாதரில் அவர் கட்டியுள்ள ‘தி பிளாஸா சினிமா’ பௌத்த முறைப்படி கட்டப்பட்டது” என்று என் நண்பர் வினய் தெரிவித்தார்.
மேலும், பௌத்தத்திற்கும் இந்துத்துவாவுக்கும் இடையிலான முரண்பாட்டை
அடிப்படையாகக் கொண்டு சாந்தாராம் ‘அம்ரித் மந்தன்’ எனும்
திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“பிரபாத் நிறுவனம் புனேவில் தயாரித்த முதல்
படம் சாந்தாராம் இயக்கிய ‘அம்ரித் மந்தன்’ (ஹிந்தி - மராத்தி,
1934). ஞ்பாடகர் சுரேஷ் பாபு மானே துணை நாயகராகவும், கல்விப் புலமை கொண்ட நளினி தர்கட்
அறிமுக நாயகியாகவும், சாந்தா ஆப்தே துணை நாயகியாகவும் நடித்திருந்தனர். வரலாற்றுக்கால
பின்னணியில் கற்பனையான - பிரச்சாரத் தன்மையிலான - சிக்கலான கதையமைப்பில், அகிம்சாவாதியை
மையப் பாத்திரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். பௌத்த அரசன் ஒருவனை ஹிந்து புரோகிதர்
கொலை செய்கிறார். விளைவாக, பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு தற்கொலை செய்துகொள்கிறார்”5 என்று இப்படம் குறித்து மீரா கோசாம்பி
எழுதியிருக்கிறார்.
இந்தியாவில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் திரைப்படம் ‘அம்ரித்
மந்தன்’. பம்பாயில் 25 வாரங்களைக் கடந்து ஓடியதால்
பிரபாத் நிறுவனத்தின் விநியோகஸ்தர் பாபுராவ் பாய் உருவாக்கிய சொல்தான் ‘வெள்ளி விழா
திரைப்படம்’.
டாக்டர் அம்பேத்கர் இந்தப் படத்தைப் பார்த்தாரா என்பது குறித்துத்
தெரியவில்லை. ஆனால், சாந்தாராம் இயக்கிய ‘தர்மாத்மா’ (1935),
‘குன்கு’ (1937) ஆகிய படங்களைப் பார்த்திருக்கிறார் என்பது
அவருடைய தொகுப்பிலிருந்தும் கடிதங்களிலிருந்தும் அறிய முடிகிறது.
“இப்போது ‘தர்மாத்மா’ திரைப்படத்தில் தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் அவர்களோடு உணவு உட்கொள்ளுவதற்கும்
துணிந்ததால் நாயகராகச் சித்திரிக்கப்படும் துறவி ஏக்நாத்தும் கூட அவர் சாதிக்கும் தீண்டாமைக்கும்
எதிர்ப்பாக இருந்ததால் அப்படிச் செய்யவில்லை. ஆனால், அப்படிச் செய்வதன் மூலம் ஏற்படும்
தீட்டை கங்கை நதியின் புனிதநீரில் ஒருமுறை குளிப்பதன் மூலம் அகற்றிவிட முடியும் என்பதால்
அப்படிச் செய்தார்.”6
மேலும், தீண்டப்படாத சிறுமி பார்ப்பனரின் வீட்டுக்குள் நுழைவது
போல் அமைக்கப்பட்டிருந்த காட்சியை நீக்குமாறு தணிக்கைக் குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள்
இயக்குநரை நிர்பந்தப்படுத்தியிருக்கின்றனர்.7
டாக்டர் அம்பேத்கர் திருமதி சவிதா அம்பேத்கருக்கு எழுதிய
கடிதத்தில், ‘குன்கு’ (ஹிந்தியில் ‘துனியா நா மானே’) திரைப்படம் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.
“சொற்களுக்கு ஏதேனும் பொருள் இருக்குமானால்,
திருமணத்திற்கு ஏதாவது அடிப்படை உண்டென்றால், உங்கள் கடிதத்தில் ‘நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்’
என்று நீங்கள் கூறியிருப்பதற்கு நான் என்ன பொருள் கொள்வது? என்னை
என்னவாக ஏற்றுக்கொள்கிறீர்கள், மதிக்கத்தக்கவனாகவா? கற்றறிந்தவனாகவா? அல்லது தோற்றத்தில்
நல்லவனாகவா? உங்களுடைய எண்ணம் என்ன? ‘அழகின் மீது கட்டப்படும் காதல், அழகு போனவுடன்
மறைந்துவிடும்’ என்றொரு கவிஞன் எழுதினான். மதிப்பு, மேதைமை
மீது உருவாகும் காதலுக்கும் இது பொருந்தும். இவை ஒரு கட்டத்திற்கு மேல் நிலைக்காது.
காதல் கொள்வது திருமணத்தில் முடியலாம். சொந்தமாக்கிக்கொள்வதற்கான ஏக்கம் என்பதைத் தவிர
வேறு எப்படியும் விவரித்துவிட முடியாது. இந்த உணர்வால்தான் தூண்டப்பட்டிருக்கிறீர்களா?
‘குன்கு’ என்ற படத்தையோ அல்லது ஹால் கைன் எழுதிய ‘Woman Thou Gavest Me’ என்ற நாவலையோ நீங்கள்
அறிந்திருப்பீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டிலும் திருமணம் என்பது சடங்கு
ரீதியிலானது, துயரமானது. ஏனென்றால், அதில் சொந்தமாக்கிக்கொள்வதற்கான ஏக்கம் இல்லை.”8
பாபாசாகேப்புக்கும் சாந்தாராமுக்கும் இடையிலான மற்றுமொரு
சுவாரசியமான தொடர்பு, சங்கீத கலாநிதி கிருஷ்ணராவ் புலம்பிரிகர். சிக்கலான ராகங்களையும்
(அப்ரசலித், அன்வத்), கூட்டு ராகங்களையும் (ஜோட்), ஹிந்துஸ்தானி இசைக் கலவைகளையும்
உருவாக்கிய பெருமைக்குரியவர் கிருஷ்ணராவ். சாந்தாராமின் ‘தர்மாத்மா’ திரைப்படத்தில் பாடகராக அறிமுகமானார். (பிரபல மராத்தி மேடைப் பாடகர் பால்
கந்தர்வாவும் இப்படத்தில் அறிமுகமானார். இளவயதிலேயே இவரது திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தியவர்
சாஹூ மஹாராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரே புகழ்பெற்ற மருத்துவர் சார்லஸ்
எட்வர்ட் வெய்ல் மேற்பார்வையில் கந்தர்வாவின் காது சிகிச்சைக்காக உதவியிருக்கிறார்.)9
பாபாசாகேபின் சமூகச் செயற்பாடுகளால் கவரப்பட்ட கிருஷ்ணராவ்,
பல நிகழ்ச்சிகளில் தொடக்கப் பாடலைப் பாடியிருக்கிறார்.10 இவரது குரலால்
ஈர்க்கப்பட்ட பாபாசாகேப், புத்த வந்தனத்திற்கு இசையமைக்குமாறு கிருஷ்ணாராவிடம் கோரிக்கை
வைத்தார். இதற்காக அம்பேத்கரின் சித்தார்த்தா கல்லூரியில் பாலி மொழி கற்றார் கிருஷ்ணராவ்.
“அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் முன்னிலையில்
தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடுவதற்கு அவர் செலுத்திய உழைப்பைக்
கண்ட பாபாசாகேப் அம்பேத்கர், புத்த வந்தனத்திற்கு இசையமைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
கிருஷ்ணாராவும் புத்தருக்குச் செய்யும் தொண்டாக அதை நினைத்து, எந்த ஊதியமும் பெறாமல்
இசையமைத்துக் கொடுத்தார்.
...முதன்மை பாடகராக முழுப் பாடலையும் அவரே பாடினார். சில
இடங்களில் கோரஸையும் பயன்படுத்தினார். இதற்காக மும்பையில் உள்ள சித்தார்த்தா கல்லூரிக்குச்
சென்று பாலி மொழியையும் கற்றார்.
...இவரது பணியைப் பெரிதும் பாராட்டிய பாபாசாகேப், 1956இல்
புத்த வந்தனத்தின் இசைத் தட்டை (78 rpm)
வெளியிட்டார். மேலும், 14 அக்டோபர் 1956 அன்று நாக்பூரில் நடந்த பெருந்திரள் மதமாற்ற
நிகழ்விலும் இது இசைக்கப்பட்டது.”11
‘Uncle
Tom’s Cabin’ (1927), ‘தர்மாத்மா’
(1935), ‘குன்கு’ (1937) ஆகிய படங்களைப் பார்த்த அம்பேத்கர்,
தேவிகா ராம், அசோக் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் பாம்பே டாக்கீஸ் தயாரித்த ‘அச்சுத்
துனியா’ (1936) படத்தையும் பார்த்திருக்கக் கூடும்.12
Film India இதழுக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த நேர்காணல் (1942)
1936இல் டாக்டர் அம்பேத்கர் ‘The Birth of a Baby’ என்ற அமெரிக்கப் படத்தைப் பார்த்தார் என்பதைக் கண்டறிந்தோம்.
அதுகுறித்து Film India இதழுக்கு அளித்த
நேர்காணலில்,
“கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள நம்
மக்கள் அனைவருக்கும் எப்படி உடல்நலத்தைப் பாதுகாத்து நோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும்
என்பன போன்ற விஷயங்கள் கற்றுத்தரப்பட வேண்டும். அத்தகைய படங்களைத் தயாரித்து வெளியிடுபவர்கள்
இந்நாட்டிற்கு மிகப்பெரிய சேவையைச் செய்தவர்களாவர்.
...முன்பு ஒருமுறை ‘The
Birth of a Baby’ என்ற படத்தைப் பார்த்தேன். திரைவழி கற்பித்தலுக்கான என்னுடைய
யோசனையைப் பிரதிபலிக்கும் படம் அது. பிரபல நடிகர் ஒருவர் கூட அப்படத்தில் இல்லை. மருத்துவர்களாக,
செவிலியர்களாக, நோயாளிகளாக, பெற்றோர்களாக நடித்த அனைவரும் சாதாரண மக்கள். ஆண்களும்
பெண்களும் தம் பதின்பருவத்தில், திருமணத்திற்கு முன்பு, திருமண வயதில், திருமணத்திற்குப்
பிறகு ஆகிய காலகட்டங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பிறக்கப் போகும் குழந்தைகளை
எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை மிக அருமையாக எடுத்திருப்பார்கள். விரும்பத்தகாத
வகையிலான கருக்கலைப்புக்கு எதிராகவும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆதரவாகவும் அவ்வளவு
பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். இங்குள்ள தயாரிப்பாளர்கள் இப்படத்தின் உரிமத்தை வாங்கி,
நம் நாட்டிற்கேற்றவாறு கொஞ்சம் மாற்றி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது அவசியமான
சேவையாக இருக்கும்.”
திரைப்படங்கள்
ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பாபாசாகேப் அம்பேத்கர்
“என்னைப் பொறுத்தவரையில் நம் சமூகத்தில்
திரைப்படங்களுக்கு ஒரு முக்கியப் பணி இருக்கிறது. நம் மக்கள் மிகவும் இறுக்கமானவர்கள்.
அவர்களுக்கு இந்த வாழ்க்கையைச் சிரித்து மகிழ்ந்து கொண்டாடத் தெரியாது. இந்த இறுக்கம்
என்பது, நரம்புகள் தோய தங்கள் மொத்த ஆற்றலையும் பயனற்ற ஒன்றுக்காகச் செலவிடுவது.
...அவர்களுடையது மந்தமான, துயரமான இருப்பு - அவர்கள் மீது
திணிக்கப்பட்ட இருப்பு என்பது வேறு கதை. இவ்வாழ்க்கை கடவுள் கொடுத்த தண்டனையென்று நாம்
நம்புகிறோம் என்று தோன்றுகிறது. நம் மக்கள் தம் வாழ்வைப் பார்த்துச் சிரிக்க, தம்மைப்
பார்த்துச் சிரிக்க, சுயபரிசோதனை - சுயவிமர்சனம் செய்துகொள்ள திரைப்படம் ஒரு சிறந்த
ஊடகம்.
...திரைப்படங்கள் அனைவரும் எளிதாகப் பார்க்கக் கூடியவை. மிகவும்
இறுக்கமடைந்த மக்களுக்குச் சற்று ஆசுவாசம் அளிக்கும் முக்கியப் பணியைச் செய்யும் இவை,
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.”
சமூக
நலனைப் பரப்பும் ஊடகமாகத் திரைப்படங்களின் செயல்திறன் குறித்து பாபாசாகேப்
“எந்த வகையிலும் நான் திரைப்படக் கலைஞன்
அல்ல, ரசிகன் கூட இல்லை. அதற்காக வருந்துகிறேன் வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்குப் பிறகு
உங்கள் பழக்க வழக்கங்களையும் விருப்பங்களையும் மாற்றிக்கொள்ள முடியாது. எனது ஆர்வமெல்லாம்
புத்தகங்கள் மீது மட்டுமே. நான் படிப்பதில் பேராசை கொண்டவன், அதேசமயம் தேர்ந்தெடுத்து
வாசிப்பவன். கட்டுப்படுத்த முடியாத தூண்டுதலின் பேரில் மட்டுமே நான் எழுதுவேன். ஆனால்,
நான் திரைப்படங்கள் மீது விருப்பம் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஏனென்றால், கல்விக்கான வழிமுறைகளில் புத்தகங்களைவிட திரைப்படங்கள் பல மடங்கு பயனுள்ளவை,
திறன்வாய்ந்தவை. பெரும்பான்மை மக்கள் காட்சிப் படங்கள், விளக்கப் படங்கள் வாயிலாகக்
கற்றுக்கொள்ள வேண்டும். திரைப்படங்கள் பார்க்கும்போது உங்கள் அனைத்துப் புலன்களையும்
பயன்படுத்துவீர்கள். அது கல்வியை எளிதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கும். Film India வாசகர்கள் எனது கருத்தைப் பொருட்படுத்துவார்களானால்,
திரைப்படங்கள் மீதும், சமூக நலன் - சமூக சேவை ஆகியவற்றில் அதன் பன்மடங்கு பயன்பாடுகள்
மீதும் உங்களால் முடிந்தவரை விரிவாகவும் ஆழமாகவும் ஆர்வங்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்வேன்.”
மேலும் மேலும் மூடநம்பிக்கைகளிலும் பகுத்தறிவின்மையிலும்
மூழ்குவதிலிருந்து தடுத்து திரைப்படங்கள் மக்களுக்குக் கல்வியறிவையும் விழிப்புணர்வையும்
ஊட்ட வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் கருதினார்.
“...நமது தயாரிப்பாளர்கள் புராண மூடத்தனத்திலிருந்தும்,
முரண்பாடுகளிலிருந்தும், மனிதனைக் கடவுளாக்குவதிலிருந்தும் இன்னும் வெளியேறவில்லை...
இருபதாம் நூற்றாண்டின் தொழிற்நுட்பத்தைக் கொண்டு ‘விசித்திர’ங்களும் ‘அற்புத’ங்களும் நிறைந்த ஏகநாதர், சொக்கமேளா
போன்றோரின் கதைகளை அதே மூடத்தன்மையோடு எடுக்கிறார்கள். அதை புராணிகர்களும் கீர்த்தங்கரர்களும்
‘பக்தி’யோடு கண்டு களிக்கிறார்கள். அதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்டோர்
இயக்கம் எவ்வாறு தன்னுடைய மனிதாபிமான - மத தடைகளைக் கடந்து மக்களின் உரிமைகளைக் கோரும்
தர்சார்பு இயக்கமாக மாறியது என்பதைக் குறித்த திரைப்படங்கள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட
வேண்டும்.”13
அறிஞர் அண்ணாதுரை டாக்டர் அம்பேத்கரைச் சந்தித்து உரையாடியதன்
காரணமாக 1940கள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாகியிருக்கிறது. பின்னாட்களில்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆன அறிஞர் அண்ணா, திரைப்படத் துறையோடும் நெருங்கிய தொடர்புடையவர்.
“அவர் (அண்ணாதுரை) அடைந்த பெரும் புகழில்
அவருடைய கலை இலக்கிய ஆளுமைக்கு முக்கிய பங்குண்டு. அண்ணாவின் சில நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டு,
தமிழ்த் திரையுலகின் முக்கிய படைப்புகளாகக் கருதப்படுகின்றன. ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ஆகியவை மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்கள்.
முதலில் மேடை நாடகங்களாக எழுதப்பட்ட இவை, படங்களாக எடுக்கப்படும்போதும் அண்ணாவே கதை
- வசனம் எழுதினார். ஒரு கட்டத்தில், மக்களின் வரவேற்பு காரணமாக நடிகர்கள், இயக்குநர்
பெயர்களுக்கு முன்னதாகவே ‘கதை - வசனம் : சி.என்.அண்ணாதுரை’ என்று காட்சிப்படுத்தி தயாரிப்பாளர்கள் அவரது பெயரை மூலதனமாக்கிக்கொண்டனர்.
அந்த அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது”14
06.01.1940 அன்று பெரியாருக்கும் அவரது தோழர்களுக்கும் டாக்டர்
அம்பேத்கர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில்தான் அறிஞர் அண்ணாதுரையும் டாக்டரும்
முதன்முதலில் சந்திக்கின்றனர். அடுத்தநாள், தாராவியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்
பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் கலந்துகொள்கின்றனர். அறிஞர் அண்ணாதான் இரு தலைவர்களுக்கும்
உதவும் வகையில், டாக்டருடைய உரையைத் தமிழிலும், பெரியாருடைய உரையை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார்.15
16 ஆண்டுகளுக்குப் பிறகு, நாக்பூரில் பத்து இலட்சம் மக்களோடு
பௌத்தத்தைத் தழுவினார் டாக்டர் அம்பேத்கர். இந்தியாவில் இவ்வரலாற்று நிகழ்வை ஆதரித்த
பெரும் ஆளுமைகளில் அறிஞர் அண்ணாவும் ஒருவர். 21.10.1956 தேதியிட்ட திராவிட நாடு இதழில்,
“இந்து மதத்தைவிட்டு உளம் வெந்து கூட்டம்
கூட்டமாக வெளியேறுகிற மக்களை, தனது அரவணைப்புக்குள் அன்புடன் தழுவிக்கொள்ளும் பணியினை,
இப்போது புத்தநெறி ஆற்றி இருக்கிறது. ஒரே இடத்தில், ஒரே நாளில், ஆடவரும் பெண்டிரும்
சிறார்களுமாகச் சேர்ந்து மூன்று இலட்சம் மக்கள், ஒரு மதத்தைவிட்டு வேறொரு மதம் புகுந்த
சம்பவம், அதிலும் இந்து மதத்தைவிட்டுப் புத்த மதம் தழுவிய செய்தி, இதுவரை வரலாற்றில்
இடம் பெற்றிருக்கவில்லை. இம்மத மாற்றச் செய்தியைச் சித்தரித்துள்ள ஒரு நிருபர், “உலகில்
வேறு எங்கும் நடைபெறாத இந்தச் சம்பவம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று இலட்சம் மக்கள் கூடியிருந்த காட்சியையும், அந்த இடத்தின் பரப்பையும், அதே நிருபர்,
“நகருக்கு வெளியே 10 இலட்சம் சதுர அடி விஸ்தீரணமுள்ள மைதானம் என்றும், மைதானம் முழுதும்
ஒரே ஜனசமுத்திரமாகக் காணப்பட்டது” என்றும் வரைந்துள்ளார்.
...டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் உள்ளடக்கத்தை நன்கு
கற்றிருப்பவர்; அவர் கற்காத இந்துமதத் தொடர்புடைய வடமொழி வேதாகம நூல்கள் இல்லை என்றே
சொல்லலாம். இந்திய அரசியல் சட்டங்களை உருவாக்கக்கூடிய அளவிற்குச் சட்ட நூல் பயிற்சி
பெற்றிருப்பவர். அத்தகைய ஒரு பேராசிரியர் இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, மூன்று
இலட்சம் மக்களுடன் புத்த நெறியை மேற்கொண்டார் என்பது சாதாரணமானவர்கள் இந்து மதத்தை
வெறுத்து ஒதுக்கிவிட்ட சம்பவம்போல் கருதக்கூடியது அல்ல.
...தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு
போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட
அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்;
வெளியேறித்தான் தீருவர். டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய
பாராட்டுதலுக்கும் உரியதாகும்.”16
மூன்றாவது
கட்டம் (1948 - 1956)
1948இல் டாக்டர் அம்பேத்கர் மருத்துவர் சவீதா என்பவரை மணந்துகொண்டார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து கீழ்க்கண்ட இரண்டு திரைப்படங்களையாவது பார்த்திருப்பார்கள்
என்று நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன: Oliver Twist (1948), Mahatma
Phule (1954).
Oliver
Twist போலல்லாமல், தன் குருவான மகாத்மா புலே பற்றிய திரைப்படம்
குறித்து டாக்டர் அம்பேத்கரின் மனநிலையைப் புரிந்துகொள்ள சில சுவாரசியமான தகவல்கள்
இருக்கின்றன.
“...மகாத்மா ஜோதிபா புலேவின் வாழ்க்கை வரலாற்றைப்
படமாக எடுக்க முடிவெடுத்திருந்தார் மிகப் பெரும் இலக்கிய ஆளுமையான ஆச்சார்ய அத்ரே.
அவர் படப்பிடிப்புக்காக சாஹேபை அழைத்திருந்தார். சாஹேபுக்கு உடல்நிலை நன்றாக இல்லைதான்.
ஆனால், அது மகாத்மா புலே பற்றிய படம் என்பதாலும், அத்ரேயுடன் அவர் மிக நெருக்கமான உறவைப்
பேணிவந்ததாலும் அவரால் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. பம்பாயிலுள்ள பிரபல ஸ்டூடியோவில்
31 ஜனவரி 1954 அன்று சாஹேபின் கரங்களால் படப்பிடிப்புத் தொடங்கிவைக்கப்பட்டது.
... படம் தயாரானதும்
அதன் முதல் காட்சிக்கு அத்ரே எங்களை அழைத்திருந்தார். அந்தப் படத்தைப் பார்த்து சாஹேப்
உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளானார். மகாத்மா புலே ஆற்றிய காரியங்களும் தியாகங்களும்
நினைவுக்கு வந்து அழத் தொடங்கிவிட்டார். படம் முடிந்ததும், சிறப்பாக நடித்ததற்காக பெந்தார்கரின்
முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். அத்ரேவையும் வாழ்த்தினார். இதில் திருப்தியடையாத
அவர், 20 நவம்பர் 1955 அன்று அத்ரேவுக்குக் கடிதம் எழுதிப் பாராட்டி, திரைப்படம் வெற்றிபெற
வாழ்த்தினார்.”17
பத்தே பாபுராவுக்கும் பாபாசாகேப்புக்கும் இடையிலான முக்கிய
உரையாடல் குறித்தும் சவிதா அம்பேத்கர் எழுதியிருக்கிறார்.
“...‘தீண்டப்படாத பெண்களை மேடையில் நடனமாட
வைத்துப் பணம் ஈட்டும் நபரிடமிருந்து எனக்குச் சல்லிக்காசு கூட வேண்டாம்’ என்று சொல்லி, பிரபல நாடக நடிகர் பத்தே பாபுராவை விரட்டியடித்த நிகழ்வும்
உண்டு. நிறுவனங்களுக்குத் தங்கள் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்
உதவத் தயாராக இருப்பதாக முதலாளிகள் பலர் தெரிவித்திருந்தனர். ஆனால், சட்டவிரோதமாக ஈட்டிய
பணத்தை சாஹேப் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.”18
1940களின் இறுதியில் இந்தியத் திரைத்துறையில் பல இளம் நட்சத்திரங்கள்
உருவாயினர். அவர்களில் முக்கியமான இருவர்: திலிப்குமார் என்றறியப்பட்ட முகமது யூசுப்
கான், லதா மங்கேஷ்கர். பாபாசாகேப்பைச் சந்தித்த தருணம் குறித்து லதா மங்கேஷ்கர், “இந்திய
அரசியலமைப்பின் தந்தை பாரத ரத்னா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில்
அவருக்காக உளமார பிரார்த்திக்கிறேன். அவரை நேரில் சந்தித்திருக்கிறேன் என்பது என் வாழ்வின்
அதிர்ஷ்டம்” என்று அன்றைய டிவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.19
அதேசமயம், மறைந்த லதா மங்கேஷ்கர் தொடர்ந்து பாபாசாகேப் பாடல்களைப் பாட மறுத்துவந்தார்
என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
நடிகர் திலிப்குமாரும் பாபாசாகேபைச் சந்தித்திருக்கிறார்.
இதுகுறித்து இரு தகவல்கள் கிடைத்திருக்கின்றன: திரைப்பட நடிகர்களின் ஒழுக்கம் குறித்து
இருவருக்குமிடையே நடந்த காத்திரமான விவாதம் பற்றி முதல் தகவலும்20, டாக்டர்
அம்பேத்கரின் சொற்களால் திலிப்குமார் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பது பற்றி இரண்டாவது
தகவலும்21 தெரிவிக்கின்றன.
இரண்டு தகவல்களையும் ஆய்வு செய்த பிறகு, சில கருத்து முரண்பாடுகள்
இருந்தாலும் டாக்டர் அம்பேத்கர் மீது திலிப்குமார் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்
என்ற முடிவுக்கே ஒருவர் வர முடியும். ஜப்பார் படேல் இயக்கிய ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திலிப்குமார் ஆற்றிய உரையின் மூலம் இதைப்
புரிந்துகொள்ளலாம்.
“டாக்டர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம்,
அதாவது இந்த மண்ணின் ஒவ்வொரு குடிமக்களின் உரிமையையும் உறுதி செய்த; சமபங்குக்கான உரிமையை,
கண்ணியமாக நடத்தப்படுவதற்கான உரிமையை நிலைநாட்டிய; சகோதரத்துவமுள்ள மக்கள் தொகுப்பாக
இந்த நாட்டை மாற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய ஒருவரைப் பற்றி துணிச்சலுடன்
படமெடுத்திருக்கிறார்கள். தன்னுடைய தியாகத்தாலும் அறிவாற்றலாலும் ஈடுபாட்டுடனும் உறுதியுடனும்
செயற்பட்ட இம்மாமனிதரை, வரலாற்றாய்வாளர்கள், ஏன் ஊடகங்கள், அரசியல்வாதிகள், மக்கள்
ஆகியோருமே கூட தவிர்ப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடைய இறுதிக் காலத்தில் அவரைச்
சந்தித்தது மகிழ்ச்சியும் தனித்துவமுமான அனுபவம். அதை விவரிக்க இது சமயமல்ல. ஆனால்,
நாகரிகமான மக்கள் அனைவருக்கும் அவருடைய வாழ்க்கை சிறந்ததோர் எடுத்துக்காட்டு... குறிப்பிட்ட
சமூகங்களுக்கு என்றில்லாமல் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தனிநபர் உரிமையை உறுதிபடுத்தும்
ஓர் அரசியலமைப்பைக் கொண்ட முதல் நாடு நம்முடையதுதான்.... இந்தியா விடுதலை பெற்றபோது
நாம் அனைவரும் இளைஞர்கள். அந்தவகையில் டாக்டர் அம்பேத்கருக்கு நாம் மிகுந்த கடன்பட்டிருக்கிறோம்.”22
திலிப்குமார் - ராஜ் கபூர் - தேவானந்த் என்ற மூவர் கூட்டணி
அன்றைய பாக்ஸ் ஆபீஸில் கொடிகட்டிப் பறந்தது என்பது நாம் அறிந்ததே. திலிப்குமார் - டாக்டர்
அம்பேத்கர் தொடர்பு பற்றி பார்த்தோம். அதேபோல் ராஜ்கபூரோ தேவானந்தோ அம்பேத்கருடன் உரையாடியிருப்பார்களா
என்று தேடிப் பார்த்ததில், ராகுல் ராவைல் வழியாக ராஜ் கபூர் குறித்த தகவல் கிட்டியது.
“பம்பாயில் Wayside Inn என்ற இடத்திற்கு ராஜ் கபூர் அடிக்கடி செல்வார். அங்கு நடுவில்
இருக்கும் இருக்கையில் எப்போதும் அமர்வார். உடனே அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் வந்து
அவரை வரவேற்பர். அவர்கள் பழகும் விதத்திலேயே, ராஜ் கபூர் சிறு வயதிலிருந்தே அங்கு வருவதை
வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் என்பதையும் அங்கு பணிபுரிபவர்களும் அவரது பால்ய நண்பர்கள்
என்பதையும் புரிந்துகொள்ள முடியும். பிரிட்டிஷ் உணவு வகைகள் கொண்ட உணவகம் அது. ‘ஏன்
இந்த இடம் உங்களுக்கு இவ்வளவு பிடித்திருக்கிறது’ என்று நான்
கேட்டபோது, ‘நான் அடிக்கடி இங்கு வருவதற்கும், அதுவும் குறிப்பிட்ட இந்த இருக்கையில்
அமர்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இந்த இடத்தில் அமர்ந்துதான் டாக்டர் அம்பேத்கர்
அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார். அது என்னையும் ஆக்கப்பூர்வமான வேலையைச் செய்யத்
தூண்டும் என்பதற்காகத்தான் இங்கு அமர்கிறேன்” என்றார் ராஜ்
கபூர்.23
க்வாஜா அகமது அப்பாஸ் இயக்கத்தில், தீண்டாமையைக் கேள்விக்குட்படுத்தும்
‘Char Dil Char Raahein’ (1959) என்ற திரைப்படத்தில்
ராஜ் கபூர் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதீத திறமைவாய்ந்த மீனா குமாரி24
தீண்டப்படாத பெண்ணாக நடித்திருந்தார். டாக்டர் அம்பேத்கரின் பௌத்த மதமாற்றத்தைப் பிரதிபலிக்கும்
வகையில், சாதியின் தடைகளை உடைத்துச் சமத்துவத்தை போதிக்கும் புதிய மதம் குறித்த யோசனையை
இப்படம் முன்வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
திரைப்படத்துறையுடன் பாபாசாகேப் கொண்டிருந்த மற்றோர் அறியப்படாத
தொடர்பு, குமரேசன் சமர்த். குமரேசனின் சகோதரர் எம்.பி.சமர்த், டாக்டர் அம்பேத்கரின்
நெருங்கிய நண்பர். நடிகை ரத்தன் பாயின் மகளும் பிரபல மராத்தி நடிகையுமான ஷோபனா சமர்த்தை
மணந்துகொண்டார் குமரேசன். பிரபல நடிகை நூதன்25, தனுஜா (நடிகை கஜோலின் தாய்)
இருவரும் இவர்களது மகள்கள். மேலும், ‘Shikasth’
(1953), ‘Nastik’ (1954), ‘Kaala Paani’ (1958) போன்ற புகழ்பெற்ற படங்களில்
நடித்த சிறந்த நடிகரான நளினி ஜெயவந்த்தோடும் தொடர்புடையவர் ஷோபனா.
நாக்பூரைப் போன்று மும்பையிலும் 16 டிசம்பர் அன்று பெருந்திரள்
பௌத்த மதமாற்ற நிகழ்வுக்குத் திட்டமிட்டிருந்தார் பாபாசாகேப் அம்பேத்கர். அச்சமயம்
குமரேசன் - ஷோபனா தம்பதியின் வீட்டில்தான் அவர் தங்குவதாக இருந்தது. கெடுவாய்ப்பாக,
6 டிசம்பர் (1956) அன்றே பாபாசாகேப் பரிநிப்பாணமடைந்துவிட்டார்.26
இறுதியாக
பல்வேறு தரப்பு மக்கள் தங்கள் வாழ்வில் பாபாசாகேப்புடன் கொண்டிருந்த
பரந்த தொடர்புகளை ஆவணப்படுத்த வேண்டிய பெரும் தேவை உள்ளது. இத்தகைய ஆவணங்கள் நம்மை
வளப்படுத்துவதோடு, பாபாசாகேபின் தன்வரலாற்றைச் செழுமைப்படுத்தி, அவருடைய வாழ்வில் அறியப்படாத
பல தருணங்களைப் புரிந்துகொள்வதற்கும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
(28.11.2023
தேதியிட்ட Round Table India இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.)
குறிப்புகள்
1.
‘Dr. Ambedkar: Life and Mission’, Keer, pg. 471 (Uncle Tom’s Cabin நாவலைத் தழுவி பல திரைப்படங்கள்
எடுக்கப்பட்டிருப்பினும், தனஞ்செய் கீர் எழுதிய நூலின் அடிப்படையில் 1927இல் வெளியான
படத்தையே பாபாசாகேபும் ரமா பாயும் பார்த்திருப்பார்கள் என்று கணிக்கிறேன். பிற சான்றுகளோடு
ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.)
2.
Gender Culture and Performance Marathi Theatre and
Cinema before Independence, Meera Kosambi, pg. 318.
3.
The Classical Hollywood Reader, edited by Steve Neale.
4.
Gender Culture and Performance Marathi Theatre and
Cinema before Independence, Meera Kosambi, pg. 326.
5.
மேலது, 334.
6.
சாதியை அழித்தொழித்தல், பி.ஆர். அம்பேத்கர், ஆங்கிலத்திலிருந்து
தமிழில்: ப்ரேமா ரேவதி, காலச்சுவடு பதிப்பகம், பக். 312.
7.
Gender Culture and Performance Marathi Theatre and
Cinema before Independence, Meera Kosambi, pg. 334.
8.
Reminiscences and Remembrance of Dr.B.R.Ambedkar by
Nanak Chand Rattu, pg. 67.
9.
Bal Gandharva The Nonpareil Thespian, Mohan Nadkarni,
from page 10. (இந்தச் சான்றுக்காக என் நண்பர் மிலிந்த் பாட்டிலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.)
10.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி
37, ப. 596 (சங்கீத கலாநிதி கிருஷ்ணராவ் புலம்பிரிகார் டாக்டர் அம்பேத்கர் தம்பதியினரைப்
போற்றும் வகையில் வரவேற்புப் பாடலை பாடினார். இப்பாடலுக்கு இசையமைத்தவர் திரு. எஸ்.ஜி.பட்)
11.
https://masterkrishnarao.com/eng/buddhavandana
12.
Dr. Ambedkar: Life and Mission, Keer, pg. 471.
13.
Filmindia Magazine [1942].
14.
https://www.thehindu.com/news/national/tamil-nadu/Significant-contribution-to-Tamil-theatre-cinema/article16881444.ece.
15.
https://www.youtube.com/watch?v=UIjaO-JkoGU (See from
1:00:00).
16.
https://velivada.com/2020/09/16/c-n-annadurai-on-babasaheb-ambedkars-conversion-to-buddhism/.
17.
பாபாசாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை, சவிதா அம்பேத்கர்,
தமிழில் : த.ராஜன், பக்: 294 - 295.
18.
மேலது, பக். 332.
19.
https://www.indiatvnews.com/entertainment/news/babasaheb-ambedkar-birth-anniversary-bollywood-actors-607641.
20.
பாபாசாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை, சவிதா அம்பேத்கர்,
தமிழில் : த.ராஜன், பக்: 331 - 332.
21.
https://www.roundtableindia.co.in/dilip-kumar-a-baghbaan-of-pasmanda-movement/.
22.
Watch https://www.dailymotion.com/video/x8mc757.
23.
Raj Kapoor The Master at Work, Rahul Rawail, pg. 71. (ராஜ்
கபூர், ஷங்கர் - ஜெய்கிஷன் கூட்டணியில் பல படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற பாடலாசிரியர்
ஷைலேந்திரா, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். 1948 - 1966 காலகட்டத்தில் ஹிந்தி திரையுலகின்
பல வெற்றிப் பாடல்களை எழுதியவர். இவரது மேன்மையைப் புரிந்துகொள்ள ‘Guide’ அல்லது ‘Madhumati’ படங்களின் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்.)
24.
மீனா குமாரியின் இதயம் பல படங்களில் அவர் ஏற்று நடித்துள்ள
கதாபாத்திரங்கள் போலவே மென்மையானது. அதனாலேயே தன் சக நடிகைகளின் துயரங்கள் குறித்துக்
கவிதை எழுதும்போது தடுமாறுவார். (அடித்தட்டுச் சாதிப் பெண்களே பெரும்பாலும் கவர்ச்சி
நடனங்கள் ஆட வற்புறுத்தப்படுவர்.) ‘Char
Dil Char Raahein’ கதையை இயக்குநர் க்வாஜா அகமது அப்பாஸ் விளக்கும்போது, நான்கு
முக்கிய கதாபாத்திரங்களில் மீனா குமாரி தானாக முன்வந்து தீண்டப்படாத பெண்களின் கதைகள்
சொல்லப்பட வேண்டும் என்று சொல்லி அக்கதாபாத்திரத்தில் நடித்தார்.
25.
1956க்கு முன்பே நூதன் திரைப்படங்களில் அறிமுகமாகி, சீமா
(1955) போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து, சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும்
பெற்றிருந்தார். Char Dil Char Raahein
திரைப்படம் வெளியான அதே ஆண்டில் (1959) ‘சுஜாதா’ என்ற
புகழ்பெற்ற திரைப்படத்தில் தீண்டப்படாத பெண்ணாக நடித்திருந்தார் நூதன். ஆனால், அந்தப்
படத்தில் சாதியெதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றிய திரைப்படத்தில் டாக்டர் அம்பேத்கர்
பெயரைத் தவிர்த்துவிட்டு, கூச்சமின்றி காந்தி பெயரைச் சேர்த்திருந்தார் இயக்குநர்.
26.
இந்த தகவலுக்காக சித்தார்த் கலை - அறிவியல் - வணிகவியல் கல்லூரியின்
முன்னாள் மாணவர் சங்க ஃபேஸ்புக் பக்கத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்டுரையாளர் ஒரு பல் மருத்துவர்

Comments
Post a Comment