குயில் என்னென்று கூவிற்று!

குயில் என்னென்று கூவிற்று! 

பாரதிதாசன், உருவும் மறுஉருவும்


‘அப்போது புலவர் தராசை நோக்கி, “நீயே என் குரு!” என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார். தராசு, “எழுக! நீ புலவன்!” என்றது.’ 1

ஒருவேளை அவர் ‘நமஸ்காரம்’ பண்ணாமலிருந்திருந்தால் ‘தராசு’ என்ன சொல்லியிருக்கும்! ‘சக்தி’ பாடலைப் பாடாமல் நாத்திகப் பாடலைப் பாடியிருந்தால் ‘தராசு’, ‘செல்க! நீ மூடன்!’ என்று சொல்லியிருக்குமா! இப்படியெல்லாம் எண்ணியபடி சற்று கண்ணயர்ந்தேன். உடல் ஓய்ந்துவிட்டாலும் எண்ணங்கள் சுழன்றபடியே இருந்தன.

‘குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசகம்

உடைய நற்காற்றுக் குளிர்ந்தடிக்கும்’2 சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் நனைந்தவாறு பாறையின்மீது நான் வீற்றிருந்தேன்.


‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.’ 3


என்ற குரல் கேட்டு வியப்புற்றேன். குப்பனும் வஞ்சியும் வந்தனர்.


‘மூலிகையில் ஓர் இனத்தை முன்னே இருவருமாய்

ஞாலத்துப் பேச்சறிய நாக்கிலிட்டுத் தின்றார்கள்

வஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின்

நெஞ்சம் வசமாக நேரில் அவர் பேசுதல் போல்

செந்தமிழில் தங்கள் செவியிற் கேட்கப் பெற்றார்.’ 4


என்ற கற்பனையில் நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன். குப்பனின் மடமையைக் கண்டு நகைத்துக்கொண்டிருந்த அதேவேளையில் வஞ்சியின் பகுத்தறிவைக் கண்டு வியப்புற்றேன். ‘சம்பவித்த உண்மை அசம்பவத்தால் தாக்குறுமோ’5 என்ற சொற்றமைப்பில் மனம் கரைந்து கொண்டிருந்தது. சட்டென்று என் மடிமீது வேறுசில சொற்சிதறல்கள் விழுந்தன. மேலோட்டமாய் பார்த்தபோது எழுச்சிமிக்க சொற்களாய் தெரிந்தன. கோர்த்து பார்த்தால் ‘புரட்சிக் கவி’ எதிரில் நின்றான்.


‘சிரம் அறுத்தல் வேந்தனுக்கு பொழுதுபோக்கும்

      சிறிய கதை; நமக்கெல்லாம் உயிரின் வாதை!’ 6


அவனுடைய முழக்கத்தில் சாறல் தகித்தது. பாரதியார் செய்ய மறந்த, செய்ய தயங்கிய மாற்றத்தை பாரதிதாசன் செய்தார். வடமொழி மகாபாரதத்தை ‘பாஞ்சாலி சபதம்’ என்று புதிய வடிவத்தில் தமிழ்ப்படுத்தியிருந்தாலும், உள்ளடகத்தில் அதே புராணக் குப்பையைத்தான் எழுதினார் பாரதியார். ஆனால் பாரதிதாசன் வடமொழி பில்கணீயத்தில் பார்ப்பன கசடுகளை நீக்கி ‘புரட்சி’க்கவியாக்கினார். இப்புரட்சியைக் கொண்டாட


‘நம்பத் தகாதவெலாம் நம்பவைத்துத் தங்கள் நலம்

சம்பாதிக்கின்ற சரித்திரக் காரர்களால்

நாடு நலிகுவதை நான் இன்று கண்டுணர்ந்தேன்’ 7

என்று குப்பனோடு சேர்ந்து உறக்கச் சொன்னேன். பின் குப்பனையும் வஞ்சியையும் வழியனுப்பிவிட்டு மீண்டும் சாரலின் தீண்டலில் வீற்றிருந்தேன். அப்பொழுது தொலைவிலிருந்து யாரோ என்மீது சொற்களை எறிந்து கொண்டிருந்தார்கள். முதலில் பூவோ இலையோ என்று கவனியாமல் இருந்துவிட்டேன். பின்தான் அவை என்மீது தொடுக்கப்படும் சொல்லம்புகள் என்று தெரிந்தது. சிதறிக் கிடந்த சொற்களை அள்ளியெடுக்கும்போதே ‘மணிக்கொடி’ மணம் வீசியது. தொலைவிலிருந்த உருவம் மெல்ல என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. ஒடிசலான அந்த உருவம் புதுமைப்பித்தனேதான். ”என்ன வோய் இந்தப்பக்கம்!” என்று கேட்டேன்.

‘பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாஸன் என்று சொல்லவேண்டும்.’ 8

என்றார் புதுமைப்பித்தன். “சரி மேற்கொண்டு சொல்லும்” என்றேன்.

‘ஸ்ரீ கனக சுப்புரத்தினம் தமது கன்னிக் கவிதையைக் கொணர்ந்து சமர்ப்பித்த பொழுது பாரதியாரின் ‘தராசு’ “எழுகு புலவன்” என ஆசீர்வதித்தது.’ 9

என்று புதுமைப்பித்தன் சொல்லிமுடித்த அடுத்தகணம், அவருக்கு பின்னிருந்த மரத்தின் மறைவிலிருந்து ஒரு குரல் கேட்டது.

‘தார்மீகக் கோபம் நிறைந்த பாரதி தமிழ்க் கவிதைக்கு எத்தனை வேகம் கொடுத்தாரோ, அத்தனை வேகம் பாரதிதாஸனின் கவிதைகளிலும் காணக்கிடைக்கிறது.’ 10

யாரென்று எளிதாக கணிக்கமுடிந்தது. மரத்தின் மறைவில் தடித்த கண்ணாடிபோட்ட முகம் மெலிதாக தெரிந்தது. பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். ஆனாலும் இதை இப்படியே விடக்கூடாது என்று தோன்றியது. நேற்று கைப்பேசியில் மின்னிய ஒளியெழுத்துகள் என் கண்வழியாக காட்சிகளாக விரிந்தது. பாரதிதாசன் என்கிற கனக சுப்புரத்தினம் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை – இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு பிறக்கிறார்; ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி கற்கிறார்; புலவர் பு.அ. பெரியசாமியிடமும் பெரும்புலவர் பங்காரு பந்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சைவ சித்தாந்தங்களையும் கற்கிறார்; மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெறுகிறார் போன்ற காட்சிகள் அடுத்தடுத்து விரிகின்றபோதே புதுமைப்பித்தன் தலைகுனிந்து கொள்கிறார். “ஓய்! பாரதிதாசனுக்கு பாரதியார் ஒரு ஊக்கியா இருந்திருக்கலாம்னுதான் எனக்கு தோணுது. பாரதியார் இல்லன்னாலும் பாரதிதாசனோட தமிழறிவு வேறு வடிவத்துல கண்டிப்பா வெளிப்பட்டிருக்கும்” என்றேன்.

‘பாரதிதாசனைப் பழகி அனுபவிக்க வேண்டுமெனில் ஸ்ரீ கனக சுப்புரத்தினத்தின் கருத்துக்களைக் கண்டு பயப்படுவது விவேகமல்ல; ‘நட்டக் கல்லும் பேசுமோ’ என்று பாடியவரைவிட இவர் பிரமாதமான தவறு எதுவும் செய்துவிடவில்லை. அவருடைய காவியங்களில் ராமாயணம் என்னும் பெரும்புளுகும், ‘எங்கள் மடாதிபதி’ ‘சைவத்தை ஆரம்பித்த’ விமரிசையும் இருந்தால் என்ன குற்றம்? அவர் கவி.’ 11

என்று சளைக்காமல் தொடர்ந்தார் புதுமைப்பித்தன். “உம்முடைய சொற்களிலிருக்கும் கிண்டல் புரியுதுவோய்! எனக்கென்னவோ உம்முடைய கிண்டல் புலம்பலாத்தான் கேக்குது. முன்னாள் நிலவுடைமையாளரின் புலம்பல்! புதுமையான பித்து இதுதானோ! பாரதியார் கிட்டயும் இதே புலம்பல் கேக்குதுவோய். அவங்க அப்பாவோட வியாபாரம் வெள்ளக்காரனால நஷ்டமாயிடுச்சு. அந்த வருத்தத்துல அவரு இறந்துடுடாரு, அதனாலதான் பாரதியார் வெள்ளக்காரன எதுத்து பாட்டு எழுதுனதா ஒரு தகவல்! உமக்குதான் வெளிச்சம்.” என்று நான் சொன்னதும் சில நொடிகள் அமைதி, பின் ஒரு கனைப்புடன் மரத்தின் மறைவிலிருந்த ஒரு குரல்,

‘கோபப் பொருளைவிட என்னைப்பற்றிய வரையில் கோபாவேசமும் அது எடுக்கிற உருவமும்தான் முக்கியம் என்பேன்’ 12

“கொஞ்சம் புரியறமாறி சொல்லும் சுப்ரமண்யரே!” என்றேன். அவருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். அதே கனைப்புடன் மீண்டும் தொடர்ந்தார்,

‘சஞ்சீவி மலையின் சாரலிலே இரு பச்சிலைகளாம்! அதில் ஒன்றைத் தின்றால் உலகில் எங்கும் யார் பேசுவதும் காதில் விழுமாம்! மற்றொன்றைத் தின்றால் உலகில் நடப்பதெல்லாம் தெரியுமாம்! ‘இதென்னடா ஹனுமார் காரியத்தை தூக்கியடிப்பதாக இருக்கிறதே!....

...ராமாயணம் பொய்க்கதை! அதை நம்புகிறவர்கள் மூடர்கள்; என்று கோபமாகக் கவழதை இயற்றவந்த கவி, அதற்கு ருஜூவாக வேறு ஒரு பொய்க்கதையைத்தான் சிருஷ்டிக்க வேண்டியதாக இருக்கிறது.’ 13

என்று வேகமாக சொன்னதில் பாவம் இப்பொழுது மூச்சிறைக்கிறது அவருக்கு. சில நிமிடங்கள் கழித்து இயல்புநிலைக்கு திரும்பியதும், “உங்கள் விமர்சனத்திற்கு இப்பவே பதில் சொல்லனுமா சுப்ரமண்யரே!” என்று நான் கேட்க மரத்தின் மறைவிலிருந்து சத்தமேயில்லை. அந்த கனைப்பு மட்டும் மெலிதாக கேட்டது. இந்த இடைவெளியில் ராஜகோபாலர் கதறினார்,

‘பிரச்சாரத்திற்கு அவர் கவிதையை அடிமைப்படுத்த வேண்டாமென்று நான் அவருடைய பக்தர்களில் ஒருவன் என்ற முறையில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.’ 14

“இதெல்லாம் அநியாயங்காணும். பாரதியும் தானய்யா பிரச்சாரம் பண்ணாரு. பாரத நாடுன்னு பிரச்சாரம் பாடுனா அது கவிதை, திராவிடநாடுன்னு பாடுனா அது பிரச்சாரமா?” என்றதும் இருவரும் பறக்க எத்தனித்தார்கள். புதுமையார் அப்போதே பறந்துவிட்டார். “இருங்கவோய்! நீர் சொல்லுற உணர்ச்சிப் பெருக்கு, கவிதை செருக்கு, ஆவேசம், உருவம் எல்லாம் பாரதிதாசன் கவிதைகள்ல நான் காட்டித்தாரேன் வாரும்” என்று கவிக்குகைக்குள் அவர்களை அழைத்துச் சென்றேன். தீப்பந்தத்தின் ஒளியில் குகையில் வார்க்கப்பட்டிருந்த கவியெழுத்துகள் காந்த அலைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது.


‘........... நித்திய தரித்தரராய் உழைத்துழைத்துத்

தினைத் துணையும் பயனின்றி பசித்த மக்கள்

          சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக்

கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

          கவின்நிலவே உனைக் காணும் இன்பம்தானோ!’ 15


‘இன்பமெனும் பால்நுரையே! குளிர் விளக்கே!’ 16


“ ‘பால்நுரை’ என்றும் ‘குளிர் விளக்கு’ என்றும் நிலவை வியப்பதில் உள்ள கவிச் செருக்கு உமக்கு போதாதாவோய். உழைக்கும் மக்களின் மகிழ்வையும் கவிஞனின் மகிழ்வையும் இணைத்த உணர்ச்சி பெருக்கு உம்முடைய கண்களுக்கு தெரியவில்லையா?” என்றபடி தொடர்ந்து சென்றேன்.


‘ஊனுடல் அன்றி மற்றோர் நிழல்

உயிருக்கில்லை அங்கே’ 17


பாலை வெயிலில் கானல் வெளியில் நடந்தலையும் உணர்வை அயர்வை இதைவிட அழகாய்ச் சொல்ல முடியுமா!


‘என்னென்பேன் அதோ பூரிக்கின்றது வெண்ணிலவும்

எழில் நீலவான் எங்கணும் வயிரக்குப்பை!’ 18


விண்மீன்களை வயிரக்குப்பையாய் காணும் அழகியல் அணுகுமுறை உமக்கு ஒப்பவில்லையா? இவையாவும் மிகையாக உள்ளதென்று கூறினீரென்றால் ‘கலை என்பதே மிகை உணர்வுதான்’ என்பேன் நான். அழகியல் என்ற கோட்பாடு சிறு வரையறைக்குள் அடக்கமுடியுமாவென்று தெரியவில்லை. அழகியல் உணர்வு சார்ந்தது, நிலம் சார்ந்தது, அதிகாரம் சார்ந்தது. ஆளுபவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்குமான அழகியல் அணுகுமுறைகள் வெவ்வேறானதாக இருக்கும். எதிர் அழகியல் என்பதில்கூட ஆழமானதொரு அழகியல் சிந்தனையிருக்கும். சரி மேற்கொண்டு போவோம்.


‘எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பல கழிந்தோம்; குறைகளைந் தோமில்லை.’ 19


‘படக்கலை தான் வராதா என நினைத்த நெஞ்சம்

          பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்

படக்கலையாம் சனி யொழிந்தால் போதுமென என்னும்!’ 20


‘பெண்கள்தான் படித்து அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு வெளியூர்சென்று புரட்டிவிடப் போகிறார்களா என்று அடிக்கடி நம் நாட்டவர் கேட்பதுண்டு. நாமும், ‘ஆம் ஆம் ஆடவர் மாத்திரம் படித்து அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு வெளியூர்போய் புரட்டியதன் பயனாய் அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் புரட்டியதன் கணக்காய் இன்று இந்தியர் என்றால் காறியுமிழாத பிற நாட்டவர் உண்டா’ என்று கேட்கிறோம்.’ 21


“இதுபோன்ற ஆவேசங்கள் உமக்கு போதாதா சுப்ரமண்யரே” என்று அவருடைய கண்ணாடியை கழட்டித் துடைத்துப் போட்டுவிட்டு கேட்டேன். அந்தக் கனைப்பு மட்டுமே பதிலாக வந்தது.

அமிழ்து எதுவென்று தலைவி கேட்க, தலைவன் தலைவி சமைத்த பொங்கலில் தொடங்கி,


‘பொங்கல் அமிழ்துதான் பொய்யில்லை, கட்டிக்

கரும்பும் அமிழ்து; கனி அமிழ்து; முல்லை

அரும்ப மிழ்து; தேனமிழ்து; அப்பம் அமிழ்து

குழந்தை குதலை மொழியமிழ்து; குன்றாய்

பழந்தமிழும் பாட்டும் அமிழ்து; தமிழ்ப் பண் அமிழ்து;

திங்கள் அமிழ்து; திகழ் ஆவின் பாலமிழ்து!

இங்கெனக்கு நீ அமிழ்து! நானுனக் கெப்படியோ?’ 22


என்று அமிழ்து பட்டியலையே தருவான் தலைவன். முடிவில் உலகுயிர்கட்கு ஆதாரமான மழையே அமிழ்து என நிறைவு செய்வான். இப்பட்டியலின் இடையே தலைவனுக்கும் தலைவிக்குமான ஊடல் ‘திராவிட அழகிய’லோடு வெளிப்படும்.

இவ்வாறு நான் பேசிக்கொண்டே திரும்பிப் பார்க்கையில் இருவரையும் காணவில்லை. கவிக்குகைக்குள் வழிமாறுவதோ வந்தவழி திரும்புவதோ சாத்தியமில்லை. கவியெழுத்துக்களின் காந்த அலைகள் வேகமாக சுழன்று கொண்டிருந்தன. கூர்ந்து கவனித்தால் அவர்களிருவரின் முன்னெழுத்துகள் மின்னிக்கொண்டிருந்தன. நான் குகையின் மறுமுனைவழி வெளியே வந்தேன். எதிரில் என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. ஒளி குறைவாகயிருந்தது. காற்று வேகமாக சுழலும் ஒலி நினைவுகளை தேய்த்துக் கொண்டிருந்தது.

சில நொடிகளில் ஒளி நிறைந்து கண்முன் பசும்தோப்பை விரித்தது. வாழை மரங்களும், தென்னை மரங்களும், சில கொய்யா மரங்களுமாக சற்றே பெரிய தோப்பு. தெற்கு மூலையில் குளமொன்றிருந்தது. குளம் நோக்கி நடந்து போகையில், யாரோ குளக்கரையில் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஆவலோடு நெருங்கினேன். அவன் என் நண்பன்தான். அங்கே அமர்ந்து ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தான்.


‘கூட்டமுதம் நானுக்கு

      ராட்டினப் பெண்ணே – அடி

கொஞ்சுங்கிளி நீ எனக்கு

     ராட்டினப் பெண்ணே’ 23


‘தன்னையறிந் தின்பமுற வெண்ணிவாவே’ மெட்டில் பாடிக்கொண்டே ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தான். பாட்டு பாடியவாறே என்னைப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருள் எனக்கு விளங்கியது. ‘தொடக்க காலத்தில் சுப்பிரமணியர் துதியமுது, கதர்ப் பாட்டு, காந்திப் பாட்டு முதலிய பாடல்களை எழுதிக் குவித்தவர் பாரதிதாசன். ஆனால் பெரியார் இயக்கத்தில் சேர்ந்தபிறகு ஒரு பீரோ நிறைய இருந்த மேற்படி புத்தகங்களை தம் கையாலேயே நெருப்பிட்டுக் கொளுத்திவிட்டார்.’ 24

பின்னாட்களில் பெரியார் அளவுக்கு பாரதிதாசனும் காந்தியின் கோட்பாடுகளை மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

‘நாம் இந்நாள் யந்திரம், யந்திரம் என்று கூச்சலிடவேண்டும். யந்திர வளர்ச்சிக்கு விரோதமான எக்கூச்சலையும் நாம் ஓங்கவிடலாகாது. இவ்வகையில் காந்தீயமானது இந்நாட்டுக்கு சாக்குருவி என்பதை ஆயிரம்முறை கூறுவேன்.’ 25

பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே (1928ஆம் ஆண்டு) பாரதிதாசன் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொள்கிறார். பெரியாரின் கொள்கைப்படி இயக்க மேடைகளிலும், இயக்க ஏடுகளிலும் பயன்படுத்தும் சொற்றொடர்கள் மிகவும் எளிமையாக இருக்கவேண்டும். கல்வியறிவற்ற பாமரர்க்கு புரியவேண்டும். அவர் மனத்தினுள் தன்மான உணர்ச்சியையும் பகுத்தறிவையும் விதைக்கவேண்டும். அதற்கேற்ற மொழியிருக்கவேண்டும். ஒரு தகவலை திரும்பத்திரும்ப சொல்லவேண்டும், அப்பொழுதுதான் அது பாமரர் மனதில் பதியும். பெரும்பான்மையான திராவிட எழுத்தாளர்கள் இப்பாணியையே பயன்படுத்தினர். பாரதிதாசன் இதன் உச்சத்தையடைந்தார். அவருடைய பாடல்கள் திராவிட இயக்க மேடைகளிலும், தமிழ் மன்றங்களிலும், பாரதிதாசன் மன்றங்களிலும் திரும்பத்திரும்ப பாடப்பட்டன. எல்லோரும் மனப்பாடமாய் பாடுமளவுக்கு எளிமையாகவும் வலிமையாகவும் இருந்தது. பாரதிதாசன் பெரும்பாலான தன் பாடல்களை இசைத்து பாடக்கூடிய வடிவத்திலேயே எழுதுகிறார். எந்த மெட்டில் இயற்றப்பட்ட பாடலென அவரே குறிப்பும் தருகிறார்.


‘ஆரியர்தமை ஒப்பா

      ஆதித் திராவிடரைச்

சேரியில் வைத்தாரடி – சகியே

      சேரியில் வைத்தாரடி’ 26


‘நான்கு வருணம் என்று

      நவிலும் மனுநூல் விட்டு

ஏனைந்து கொண்டாரடி – சகியே

      ஏனைந்து கொண்டாரடி?’ 27


திராவிட இயக்கத்திற்கே உரிய சமத்துவம், ஜாதி ஒழிப்பு, காதல் மணம், நாத்திகம், திராவிட நாடு போன்ற கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணற்ற கவிதைகளையும் காப்பியங்களையும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் எழுதியிருக்கிறார் பாரதிதாசன்.

‘நம் கண்முன் காணப்படும் பல நாகரிக நாடுகள் நம் நாட்டைவிட இளமையுடையவை. ஆனால் அவைகள் வளர்ச்சிமுறையில் தடங்கடலடையவில்லை. அறிவுத்துறையில் முன்னேறிக் கொண்டே போகின்றன. நம்நாடு அந்த நாடுகளைவிட முதியது – வளர்ச்சி எப்படி? அறிவுத்துறையில் பிறநாடுகள் எப்படி? நம்நாடு எப்படி? காரணம் இங்கு சாதி உண்டு. அங்கெல்லாம் சாதி இல்லை. ஆதலினால் நம் நாட்டில் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியது சாதி வேறுபாடாகும்.’ 28

பெண்கள் தங்கள் அடிமைத் தளைகளை நீக்க, பெரியார் பரிந்துரைத்த முதன்மையான வழிமுறைகளில் ஒன்று ‘கர்ப்பத்தடை’. அதுபற்றி தமிழில் முதல் கவிதை இயற்றியது பாரதிதாசனே.


‘காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்

      கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?’ 29


‘இருக்கும் பிள்ளைகள் எனக்குப்போதும் அம்மா – என்

கருக்கதவை மூடிவிடுங்கள் அம்மா’ 30


திராவிட இயக்க கொள்கைகளை தன் படைப்புகளில் மட்டுமல்லாமல், தன் இயற்வாழ்க்கையிலும் பின்பற்றினார் பாரதிதாசன். 31 – 1 – 1933இல் ம. சிங்காரவேலர் தலைமையில் நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்துகொண்டு, வருகைப் பதிவேட்டில் ‘நான் ஒரு நிரந்தர நாத்திகன்’ என்று எழுதி கையெழுத்திட்டார் பாரதிதாசன். தன் குடும்ப திருமணங்களில் தாலியைத் தவிர்த்தார். கவிஞரின் தலைமகள் சரசுவதியின் திருமணம் 1944ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. இரண்டாவது மகள் வேனில் (வசந்தா) திருமணம் 1951ஆம் ஆண்டு அ. பொன்னம்பலனார் தலைமையில் நடைபெற்றது. மகன் மன்னர் மன்னனின் (கோபதி) திருமணம் 1955ஆம் ஆண்டு கோவை அ. அய்யாமுத்து தலைமையில் நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தில் பெரும்புரட்சியை உண்டாக்கிய பாரதிதாசனை, தந்தை பெரியார் ‘தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்’ என்று பாராட்டினார்.

இப்படியாக பேசிக்கொண்டிருந்ததில் நேரம்போனதே தெரியவில்லை. எதிரிலிருந்த நண்பனைக் காணவில்லை. ஒருவேளை சொற்குளத்தினுள் விழுந்திருக்கலாம். நான் எழுந்து நிற்க முயன்றபொழுது என்னைச் சுற்றியிருந்த வெளி சுழலத் தொடங்கியது. பயந்துபோய் நான் மீண்டும் உட்கார நினைத்தேன், ஆனால் முடியவில்லை. கீழிருந்த நிலம் என்னை இறுக்கியது. வேறுவழியில்லாமல் எழுந்தேன், வெளி சுழல வானத்தின் மீதேறி சென்றேன். என்னைச்சுற்றி எங்கும் புகைமூட்டம். ஒரேயொரு இடம் மட்டும் தெளிவாக தெரிந்தது. ஒரு பெரிய ஓட்டுவீட்டின் வாயிலில் ஒருவர் நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார். வேறு யாராக இருக்கமுடியும், பாரதிதாசன்தான். நான் வேகமாக அவரை நெருங்கினேன். என்னை யாரென்று பார்ப்பதற்கு அவர் முகம் திருப்பிய போது, “உங்களைப் போன்றொரு குழப்பவாதியை நான் பார்த்ததே இல்லை” என்று கத்தினேன்.

அவர் அதை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவருடைய குணத்திற்கேற்ப அளவுகடந்த கோபம் பொங்கியது. ஆனால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனென்றால் அங்கே நான் மட்டும்தான் ஆட்டக்காரன், அவர் வெறும் பார்வையாளர் மட்டுமே. நானும் கோபமாகவே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரால் கன் வெளியிலிருந்து விலகிச் சென்றிருக்க முடியும் ஆனால் நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை கேட்பதற்காக அமர்ந்திருக்கிறார். இதுவும் அவருடைய குணம்தான்.

“உங்களுக்கு என்ன பிரச்சனை, ஏன் இப்படி திராவிடத்திற்கும் தமிழுக்குமிடையே குழப்பிக் கொள்கிறீர்கள். திராவிடன் என்பதில் பெருமை கொள்கிறீர்களா, தமிழன் என்பதில் பெருமை கொள்கிறீர்களா? திராவிட ஒழுக்கத்தை போதிக்கிறீர்களா, தமிழ் ஒழுக்கத்தை போதிக்கிறீர்களா? ஒரேயொரு கடவுள் வேண்டுமா அல்லது கடவுளே வேண்டாமா? ஏன் இவ்வளவு குழப்பம்? மொழிப்பற்று, இனப்பற்று என்பவையெல்லாம் உங்களைப் போன்ற பகுத்தறிவுவாதிக்கு ஏற்புடையதா? மொழி என்பது வெறும் ஊடகம்தானே. உயிர்கள் தங்களுக்குள் தகவலை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு ஊடகம்தானே மொழி. அதன்மேல் எதற்கு பற்று. இனம் என்பது என்ன? இனம் என்பதை எப்படி வரையறுக்கிறார்கள் தெரியுமா?

என் கால்களுக்குக் கீழே வேர் முளைக்கின்றது. வேர்களிலிருந்து சொற்களும், சித்திர எழுத்துக்களும், பிம்பங்களும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. நான் என்ன பேச நினைக்கின்றேனோ அதுகுறித்த தரவுகள் உடனே மேலெழும்பி வருகிறது. காரணங்கள் தெரியவில்லை. இனம் குறித்து பேச நினைத்தேன், அம்பேத்கரின் நூல் தொகுப்பு முன்னே வந்தது.

‘இனம் என்பதை சில குறிப்பிட்ட பண்புக்கூறுகளை மரபுரீதியாகப்பெற்ற ஒரு மக்கள் தொகுதி எனக் கூறலாம். பின்கண்ட பண்புக்கூறுகளைக் கொண்ட மக்களை ஓர் இனம் என்று ஒரு சமயம் கருதப்பட்டது. 1. தலையின் வடிவம் 2. ரோமம் மற்றும் கண்களின் நிறம் 3. தோலின் நிறம் 4. உடல்வாகு. நிறமும் உடல்வாகும் தட்பவெப்பநிலைக்கும் உறைவிடத்துக்கும் ஏற்ப மாறக்கூடிய இயல்புகள். எனவே மக்களின் இனத்தை நிர்ணயிப்பதற்கு அவற்றை ஓர் அளவுகோலாகக் கொள்ளக்கூடாது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது......

......ஒரு தனிநபரது இனத்தை நிர்ணயிப்பதற்குத் தலையின் வடிவமைப்புகளைப் பயன்படுத்துவதை மனித இன ஈராய்ச்சியாளர்கள் ஒரு விஞ்ஞான மாக உருவாக்கி இருக்கின்றார். இந்த உடல்சார்ந்த அளவையியல் விஞ்ஞானம் தலையின் அமைப்பை நிர்ணயிப்பதற்கு இரண்டு வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது. அவை : 1. மண்டை ஓட்டின் நீளத்துக்கும் அகலத்துக்கும் இடையே உள்ள சதவீத அளவைக் காட்டும் குறியீடு 2. முகத்தின் அளவைக் காட்டும் குறியீடு. இந்தக் குறியீடுதான் இனத்தைப் புலப்படுத்துகிறது.’ 31

இப்பொழுது கூறுங்கள், திராவிட இனமென்றோ தமிழ் இனமென்றோ அறுதியிட்டுக் கூறமுடியுமா? அதிலும் நீங்கள் யார் தமிழர் என்று கூறும் வரையறைதான் தற்போதைய தமிழ்த்தேசியவாதிகளுக்கு உதவுகிறது போலும்.

‘தமிழ்நாடு தாய்நாடு, தமிழே தாய்மொழி, தமிழர் ஒழுக்கம் தனதொழுக்கம் என்னும் இம்மூவகைப் பேறு பெற்றவன் தமிழன்; மற்றவன் பிறனே.’ 32

பெண்விடுதலைக்காக கர்ப்பத்தடை பற்றி எழுதிய உங்கள் கைதானா ‘திராவிடர் ஒழுக்கம்’ என்று பெண்களை ஒடுக்கும்முறைகளையும் எழுதழயது? ‘தெய்வம் தொழாஅர்...’ குறளை நியாயப்படுத்த ஏன் அவ்வளவு போராடுகிறீர்கள்? பிற்போக்குக் கருத்துகளும் திருக்குறளில் உள்ளதென ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம்? மக்களின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டிவிட்டால் போதுமா? அறிவூட்ட வேண்டாமா? ஆரியர் போலவே நாமும் இனப்பெருமை பேசுவதாலேயே நம்முடைய தன்மானம் உயிர்பெற்றுவிடுமா?


‘மன்னர் வில் எடுத்தால் – பனி

      வடமலை ஒடுங்கும்

பாண்டியன்பேர் சொன்னால் – இந்தப்

      பார்நடுங்கும் தம்பி

ஆண்டிருந்த சேரன் – அவன்

      ஆரியரை வென்றான்

மாண்ட துண்டு சோழன் – அவன்

       மாநிலத்தைக் காத்தான்

மாண்டுவிட்டால் என்ன – அவன்

       வழி வந்தவர் நாமே!’ 33


இத்தகைய பாடல்களால் என்ன பயன் நிகழ்ந்தது நாட்டில்? ஆண்டபரம்பரைகள் அதிகமானதுதான் மிச்சம்! ஜாதி ஒழிப்பிற்கு நீங்கள் பரிந்துரைத்த வழிகள் என்னென்று ஞாபகம் இருக்கிறதா? 


......  சாதி வேற்றுமை

குமையத் தானே குலம்உயர் வென்ற

ஆரியப் பெண்ணை மணந்தார். அதனால்

ஓர் இனம் தனி இனம் ஒட்டோம் என்னும்

தடையுடை படுவதால் உடைமையுடை படுமே.

உடைமையால் அல்லவோ உயர்வும் தாழ்வும்;

அம்பேத்கார்போல் ஆரியப் பெண்களை

நம்மவர் மணக்க நாடுஉருப் படுமே! 34


உங்களுடைய வரிகளை நீங்களே மீண்டும் படித்துப் பாருங்கள். பெரியாரின் மாணவர் என்பதை உணர்த்துகிறீர்களோ! பிரஞ்சு இந்தியா என்றும் இந்திய யூனியன் என்றும் எளிதாக பிரித்துப் பார்க்கக் கூடிய பாதுகாப்பான இடத்திலிருந்து கொண்டு ஜாதி ஒழிப்பிற்கு நாத்திகத்தை பரிந்துரைக்கிறீர்கள் அல்லது எந்த மதத்தையும் சாராத ஒரேயொரு கடவுளை பரிந்துரைக்கிறீர்கள். பாரதியார் செய்த அதே ஏமாற்று வேலையை நீங்களும் செய்கிறீர்கள். எப்படி அய்யா மனம் ஏற்கும்? போலி முற்போக்குவாதிகளின் முன் உங்களை விட்டுத்தர முடியாது. ஆனால் உங்களை இப்படியே விட்டுவிடவும் முடியாது.

அதிருக்கட்டும் அறிஞர் அண்ணா இருந்தவரை உங்களுக்கான இடம் மதிக்கத்தக்க அளவில் இருந்தது. ஆனால் அவர் மறைந்தபின் உங்கள் மறைந்துவிட்டது போல் தோன்றுகிறதே! தமிழ்நாட்டின் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலாக உங்கள் பாடல் இல்லை. ஆனால் புதுவை தமிழ்த்தாய் வாழ்த்து உங்கள் பாடலே. ‘மனோன்மணியம்’ சுந்தரனார் பாடல் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தாக 1970ஆம் ஆண்டு ஏற்கப்படுகிறது. அதே ஆண்டு ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக உங்களுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைக்கிறது. என்ன உட்கட்சி வேலை நடந்தது?

திடீரென்று குயில் கூவுகின்ற ஒலி கேட்கிறது. என் காலுக்கடியில் இருந்த வேர்கள் உதிரத் தொடங்கின. பாரதிதாசனைச் சுற்றியிருந்த வெளி பறவைகளாகவும் பூச்சிகளாகவும் பறக்கத் தொடங்கின. பாரதிதாசன் மெல்லிய குரலில் குயிலாக கூவினார்.

என் காலுக்கடியே இருந்த தலையணை கீழே விழுந்து கிடந்தது. என் அலைபேசியில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது. என்னைச்சுற்றி புத்தகங்கள் இறைந்து கிடந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பினேன். எல்லாம் நினைவிருக்கிறது, கடைசியாக பாரதிதாசன் என்ன சொன்னார்?


- சிவராஜ் பாரதி



குறிப்புகள்:

1. சுதேசமித்திரன் 27.10.1916

2. சஞ்சீவி பர்வதத்தின்சாரல், பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

3. ”

4. ”

5. ”

6. புரட்சிக் கவி, பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

7. சஞ்சீவி பர்வதத்தின்சாரல், பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

8. புதுமைப்பித்தன் கட்டுரைகள், ப.202

9. மணிக்கொடி மரபும் பாரதிதாசனும் (ப. 190), காலச்சுவடு பதிப்பகம்( அக். 2014)

10. படித்திருக்கிறீர்களா, ப. 155-156

11. புதுமைப்பித்தன் கட்டுரைகள், ப.202, 203

12. படித்திருக்கிறீர்களா, ப. 155-156

13. ”

14. மணிக்கொடி 15-6-1938

15. புரட்சிக் கவி, பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

16. புரட்சிக் கவி, பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

17. இயற்கை (கானல்), பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

18. காதல் (எழுதாக் கவிதை), பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

19. தமிழ் வளர்ச்சி, பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

20. தமிழ்நாட்டிற் சினிமா, பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

21. புதுவை முரசு, 17 - 11 – 1930

22. அமிழ்து எது, பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

23. இராட்டினச் சிறப்பு, பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

24. நாரா. நாச்சியப்பன், தேடிவந்த குயில் (ப. 15), அன்னை நாகம்மை பதிப்பகம்

25. புதுவை முரசு, 3 – 5 – 1931, ப. 10 -12

26. சமத்துவப் பாட்டு, பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

27. ”

28. சாதி ஏன்?, குயில் 10.2.1968

29. தவிப்பதற்கோ பிள்ளை, பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

30. கருத்தடை மருத்துவமனையில் ஒருத்தி வேண்டுகோள், பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

31. டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13, ப. 97 – 98

32. குயில், 1.6.1958

33. திராவிட நாட்டு வாழ்த்து (ஏற்றப் பாட்டு), பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

34. அம்பேத்கார் வாழ்க! அவர் வழிச் செல்க!, பாரதிதாசன் கவிதைகள். 


உதவிய நூல்கள்:

1. மணிக்கொடி மரபும் பாரதிதாசனும், காலச்சுவடு பதிப்பகம்

2. பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

3. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு


இணையதளங்கள்

www.tamilvu.org

www.tamildigitallibrary.in


Comments

Popular posts from this blog

இன்னும் எத்தனைக் காலம்தான்...?

அத்தனை எளிதில் கிட்டுமா ஜிஸ்மானியத்தான மிஃறாஜ்

பேரன்பும் பெருங்கோபமும்