விடுதலையின் தூரம் 116 மைல்

விடுதலையின் தூரம் 116 மைல்



‘Oh go down, Moses,
    Way down into Egypt's land,
Tell old pharaoh,
    Let my people go.’


காட்சி 1

அமெரிக்காவின் தென் மாகாணத்தில் உள்ள மேரிலாந்து பகுதிக்கும் டெலவெயர் ஆற்றுக்கும் இடையே உள்ள மரப்பாலத்தில் அவர்கள் காத்திருக்கிறார்கள். கைகளில் துப்பாக்கியுடன் பரபரத்துக்கொண்டிருந்தவர்களின் மனங்களில் இருந்தது ஒரே சிந்தனைதான். ‘மற்ற அடிமைகளைக் கூட விட்டுவிடலாம். ஆனால் அந்தத் துரோகிக்குக் கொடூரமான தண்டனை வழங்க வேண்டும்.' தூரத்தில் சிறு அசைவு தெரிகிறது. இரட்டை குதிரை பூட்டிய வண்டி வருகிறது, நீண்ட அங்கியும் தலையில் தொப்பியும் அணிந்த கனவான் அதை ஓட்டி வருகிறார். 

“எதுக்காக இங்க கூடியிருக்கீங்க, ஏதாவது விஷேசமா?”
“அந்தத் திருடன் மறுபடியும் வந்திருக்கானாம். அதான் மோசஸ். அவனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம்னு..”
“உங்களால முடியலன்னா சொல்லுங்க, நான் புடிச்சத் தரேன். இப்ப வழி விடுங்க, எனக்கு வியாபாரம் இருக்கு”
“இரு இரு, வண்டியில என்ன இருக்குன்னு காட்டு”
“நான் லூதர் கிராண்ட் பையங்கிறது மறந்து போச்சா”
“சரி சரி கிளம்பு,”

டெலவெயர் ஆற்றங்கரையில் அந்த வண்டி நிற்கிறது. தன் நீண்ட அங்கியையும் தொப்பியையும் நடுங்கிக்கொண்டே கழற்றும் வண்டிக்காரன் உண்மையில் ஆணல்ல, பெண். சோளக் கதிர்களை விலக்கிவிட்டு வண்டிக்குள்ளிருந்து வயதான தம்பதி, இளைஞன், பெண் என நான்கு பேர் இறங்குகின்றனர். 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் அனைவரையும் ஆற்றுப்படுத்துகிறார். 

பின்னணி குரல்

நீங்கள் எதிர்பார்ப்பது சரிதான். அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அடிமைகள் இவர்கள்தான். ஆனால், உடன்வந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லும் இந்த 40 வயது பெண்தான் அவர்கள் கொல்லத் துடிக்கும் துரோகி மோஸஸ் என்பதை நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். வெளியேறுதல் என்பது சாதாரண நிகழ்வு கிடையாது. விடுதலை மீதான வேட்கையிலிருந்தே இந்த வெளியேறுதல் தொடங்குகிறது. தன் மக்களின் விடுதலை மீதான உள்ளுறுதியில் கடந்த பத்து ஆண்டுகளாகத் தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை மீட்டு, சுதந்திர பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் இந்த ‘மோஸ’ஸின் பெயர் ஹேரியட் டப்மேன். வரலாற்றில் விடுதலை வீரர்கள் தத்துவார்த்த பலத்தினால் உருவாவதில்லை, உள்ளுணர்வு தரும் ஆன்ம பலத்தினாலேயே உருவாகிறார்கள்.


முன்கதை

பண்ணை அடிமை முறையில் உரிமையாளர் தன் அடிமைகளை அவ்வப்போது பிறரிடம் வாடகைக்கு விடுவது வழக்கம். அந்தவகையில் மிஸ் சூசன் என்பவருக்கு செவிலியராகப் பணிசெய்ய அனுப்பப்பட்டாள் ஆறு வயது சிறுமி டப்மேன். சூசனின் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பணி. ஒருவேளை குழந்தை அழுதால், டப்மேனுக்குக் கசையடிகள் கிடைக்கும். இப்படியான தண்டனைகளின் தழும்புகள் அவள் உடல் முழுவதும் பதிந்துள்ளன. அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் காரணத்தால் டப்மேன் அவளது உரிமையாளர் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவாள். உடல்நிலை தேறியதும் மீண்டும் அடுத்த இடம். சமயங்களில், அதிக வேலைப் பளு காரணமாக எங்காவது ஓடிவிடும் டப்மேன், ஐந்து நாட்கள் கழித்துத் திரும்புவாள். பருவ வயதை அடைந்தவுடன் பயிர் விதைப்பது, காளைகளை ஓட்டுவது என விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டாள். இந்நிலையில், அண்டை நிலத்தில் வேலை செய்யச் சென்ற டப்மேன், மேற்பார்வையாளருடன் பொருட்களறைக்குச் சென்றாள். அப்போது அங்கு வேலை செய்துகொண்டிருந்த சிறுவன் தப்பியோட முயல, அவனை அடிப்பதற்கு இரும்பு எடை கல்லை வீசினார் மேற்பார்வையாளர். அது தவறுதலாக டப்மேன் தலையில் பட்டு மண்டை உடைந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகே சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனையடுத்து அவளுக்கு அடிக்கடி தலைவலி, தூக்கமின்மை போன்றவை ஏற்படத் தொடங்கியது. அதுமட்டுமல்லாது எதிர்கால காட்சிகள், இறை வெளிப்பாடுகள் ஆகியவையும் தெரியத் தொடங்கின. தன்னிடம் கடவுள் பேசுகிறார் என்று நம்பினாள் டப்மேன். 

காட்சி 2

தன் பெற்றோர் உட்பட தன்னுடன் வந்தவர்களைப் படகில் ஏற்றிவிட்டு, இளைஞன் வால்டரிடம், அவர்களைப் பத்திரமாக அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்துகிறார் டப்மேன். அவரது கண்களில் உறுதியிருந்தது. பின் வந்தவழியே திரும்பிச் சென்று வானுயர வளர்ந்த மரங்களின் பின்னால் மறைந்துகொண்டு யாரும் பின்தொடர்ந்து வருகிறார்களா என்று பார்க்கிறார். நினைத்தது போலவே இரண்டு குதிரைகள் வருகின்றன. ஒருகாலத்தில் டப்மேனின் உரிமையாளனாக இருந்த எட்வர்டும் அடிமைகளைப் பிடித்துக்கொடுக்கும் ஏஜென்ட்டான பிக்கர் லாங்கும் வருகிறார்கள். அவர்கள் முன்பாகச் சென்று பின் எதிர்த்திசையில் வேகமாக மறைகிறார். அவர்களும் டப்மேனை சுற்றிவளைக்க ஆளுக்கொரு திசையில் விரைகின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. எட்வர்ட் பரபரப்பாகக் குதிரையைச் செலுத்துகிறான். அப்போது மரங்களிடையே இருந்து கையில் துப்பாக்கியுடன் அவன் முன் நிற்கிறார் டப்மேன். எட்வர்ட் கண்களில் அதே வன்மம்.

பின்னணி குரல்

டப்மேன் தனக்கு அடங்கியிருக்கவில்லை என்பதுதான் எட்வர்டுக்கிருக்கும் கோபம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயதுதான். சிறுவயதில் எட்வர்ட் காய்ச்சலில் படுத்திருந்தபோது டப்மேன் தனக்காகப் பிரார்த்தித்தாள் என்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது. தன் அடிமை தனக்காகப் பிரார்த்திக்கிறாள் என்ற பெருமை. ஆனால் நாளடைவில் அது வெறும் கருணை அடிப்படையிலானது என்பதை அவன் மனம் ஏற்கவில்லை. டப்மேனுக்குத் திருமணமான பின்பும் தன் அடிமை தனக்குரியவள் என்ற கர்வத்திலேயே டப்மேனை அணுகினான் எட்வர்ட். இந்தச் சூழலில், எட்வர்டின் தந்தை பேட்டின்சன் பிராடஸ்சுக்கும் டப்மேனுக்கும் பிரச்சனை எழுகிறது. அதில் மனமுடையும் டப்மேன், ‘ஆண்டவரே, இந்த இரக்கமில்லாதவரின் மனதை மாற்ற முடியாமல் போனால், அவரைக் கொன்றுவிடு” என்று பிரார்த்தித்ததை எட்வர்ட் பார்த்துவிடுகிறான். மறுவாரமே பேட்டின்சன் இறந்துவிடுகிறார். தன் தந்தை மரணத்துக்கு டப்மேன்தான் காரணம் என்ற எண்ணம் எட்வர்டு மனதில் மேலும் வன்மமாக மாறியது.

முன்கதை

 டப்மேனின் தந்தை பென்ஜமின் ராஸ், ஆண்டனி தாம்சன் என்பவரிடம் அடிமையாக இருந்தார். அதேபோல் அவரது தாய் ரிட் (எ) ஹேரியட் க்ரீன், மேரி பிராடஸ் குடும்பத்தாருக்கு அடிமையாக இருந்தார். பென்ஜமின் ராஸ் 45 வயதுவரை தன்னிடம் அடிமையாக இருக்க வேண்டும், பிறகு அவருக்கு விடுதலை என்பதாக தாம்சன் சட்டப்படி உறுதியளித்திருந்தார். அதன்படி 45ஆவது வயதில் பென்ஜமின் விடுதலை செய்யப்பட்டடார். இதேபோன்றொரு சட்டப்படியான உறுதிமொழியை ரிட்டுக்கும் மேரியின் தந்தை அளித்திருந்தார். அந்தவகையில், தன்னுடைய 45ஆவது வயதில் விடுதலையைக் கோரும் சட்டப்படியான ஆவணங்களுடன் ரிட் சென்றார். ஆனால், மேரியின் கணவர் பேட்டின்சன் பிராடஸ்ஸோ அதற்கு மறுத்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் ரிட்டும் அவளது சந்ததியும் தன் குடும்பத்திற்கு அடிமை என்று பேட்டின்சன் அறிவித்தார். இதனிடையே, 1844ஆம் ஆண்டு ஹேரியட் டப்மேனுக்கும் சுதந்திர கறுப்பரான ஜானுக்கும் திருமணம் நடந்தது. இதிலும் சிக்கல் எழுந்தது. ஜான் சுதந்திரராக இருந்தாலும், டப்மேன் அடிமை நிலையிலேயே தொடர்வதால், அவர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவானது. குழந்தையும் அடிமையாகத் தொடர்வதை இருவருமே விரும்பவில்லை. இச்சூழலில்தான் ரிட் தன் விடுதலையைக் கோரினார்.

முன்வரலாறு

அமெரிக்க விவசாயத்தில் பணப்பயிராகப் பெரும்பாலும் புகையிலையே பயிரிடப்பட்டுவந்த நிலையில், தொழிற்புரட்சி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1793ஆம் ஆண்டு பருத்தி அரவை இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பருத்தி விவசாயமும் பருத்தித் தொழிற்சாலையும் உலகெங்கும் பரவலானது. இதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. புகையிலை பயிரிட்ட நிலங்களைப் பருத்தி ஆக்கிரமித்தது. தொழிற்சாலைகளும் அதிகரிக்கத் தொடங்கின. இதனால் அடிமைகளின் தேவையும் அதிகரித்தது. ஆனால் 1808ஆம் ஆண்டுமுதல் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டதால், மாகாணங்களுக்குள் அடிமைகள் விற்கப்பட்டனர். இத்தகைய சூழ்நிலையில் பேராசை பிடித்த சில நிலவுடைமையாளர்கள் தங்கள் அடிமைகளை விடுதலை செய்யாமல் தவிர்த்தனர்.

காட்சி 3 

டப்மேன் முன்பாக மண்டியிட்டிருந்தான் எட்வர்ட். டப்மேனின் கைகளில் வேட்டைத் துப்பாக்கி.

“நீ என்னோட அடிமங்கறத மறந்துட்டியா?”
“நா உன்னுடைய அடிமயில்ல, நா யாருடைய அடிமயும் இல்ல, சுதந்திரமானவ. நா ஆண்டவர்கிட்ட கேட்டது இத மட்டுந்தான்.
“மனுசன மனுசன் அடிமப்படுத்தனும்னு கடவுள் சொல்லல. 
“நீ என் குடும்பத்த அழிக்கணும்னு நினச்ச, முடியல. என் மக்கள அழிக்கணும்னு நினக்குற, உன்னால முடியாது.
“நாங்க விடுதலயாகிட்டோம், கேக்குதா...”

எட்வர்டுடைய வேட்டைத் துப்பாக்கியை வீசியெறிந்துவிட்டு, குதிரை மேலேறிச் செல்கிறார் டப்மேன். மலைமுகட்டில் அவர் கீழிறங்க சூரியன் தங்க நிறத்தில் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. 

 பின்னணி குரல்

எல்லா தருணங்களையும் கோட்பாடுகளால் விளக்கிவிட முடியாது. அப்படியான தருணங்களிலிருந்துதான் சில கோட்பாடுகள் பிறக்கின்றன. டப்மேனும் அத்தகையதொரு தருணம்தான். அவருக்கு எழுத படிக்கத் தெரியாது, ஆனால் எது தன் மக்களுக்கான எழுத்து, எது தன் மக்களுக்கான கோட்பாடு என்பது அவருக்குத் தெரியும். சின்ன சம்பவத்தைச் சொல்கிறேன். அவர் மேரிலாந்திலிருந்து தப்பித்து, பிலடெல்ஃபியாவில் சமையல் பணியாளராய் இருந்தபோது, அங்கு ‘Uncle Tom's Cabin*' நாடகம் அரங்கேற்றப்பட்டிருந்தது. அதைப் பார்க்க வருமாறு சகப் பணியாளர் அழைக்கும்போது, “இல்லை, மேடையில் என் மக்கள் துன்புறுவதை என்னால் பார்க்க முடியாது. அந்தக் கதையைக் கேட்டிருக்கிறேன். நான் நிச்சயம் சொல்கிறேன், தெற்கில் நான் உணர்ந்த அடிமைத்தனத்தை திருமதி. ஸ்டாவ்வால் எழுதவே முடியாது.” என்றார். சமகாலச் சூழலிலும் இது தீர்க்கமான அரசியல் பார்வை. கறுப்பின படைப்பு என்றில்லாது, உலகின் பிற நாடுகளில் இருக்கும் அடித்தள மக்களின் படைப்புகளுக்கும் இது பொருந்தும். மேலிருந்து பார்க்கும் பார்வைக்கும் கீழிருந்து பார்ப்பதற்கும் ஆகப்பெரிய வித்தியாசங்கள் உண்டு.

முன்கதை

விடுதலை கோரிய ரிட் குடும்பத்தாரையும், தன் தந்தை உயிரிழக்கக் காரணமாக இருந்த டப்மேனையும் பழிவாங்குவதற்காக டப்மேன், அவரது சகோதரர்கள் இருவர் ஆகியோரை விற்க முடிவு செய்தான் எட்வர்ட். அதற்கான துண்டறிக்கையைப் பொது இடங்களில் காட்சிப்படுத்தினான். இதனால் அங்கிருந்து தப்பித்து வெளியேறும் முடிவை எடுத்தார் டப்மேன். கணவர் ஜானின் கருத்தைக் கேட்டார். வெளியேறும்போது மாட்டிக்கொண்டால் தன்னையும் அடிமைப்படுத்திவிடுவார்கள் என்ற பயத்தில் ஜான் தயங்கினான். அதனால் டப்மேனும் அவரது சகோதரர்களும் மட்டும் தப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சகோதரர்களும் பின்வாங்க, டப்மேன் மட்டும் களமிறங்கினார். தந்தை ஆலோசனையின்படி, பாதிரியார் சாமுவேல் க்ரீனை அணுகினார். அவர் அடிமையொழிப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர். வடக்கு திசை நட்சத்திரத்தின் துணைகொண்டும், ஆற்றின் துணைகொண்டும் நல்ல மனிதர்களின் துணை கொண்டும் பயணப்படு என்றார் சாமுவேல். 1849ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் ஹேரியட் டப்மேனின் வாழ்க்கையையே புரட்டிப் போட காத்திருந்தது. கிட்டத்தட்ட 90 மைல், 3 வாரங்கள் 5 நாட்கள் நடந்தே கடந்தார். பெரும்பாலும் இரவுகளிலேயே பயணப்பட்டார். ஒருபக்கம் உரிமையாளர்கள், அடிமைப்பிடிப்பாளர்கள் ஆகியோர் துரத்திக்கொண்டிருக்கின்றனர், மறுபக்கம் காலநிலை, பசி. விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்டு, தாமஸ் காரெட் போன்ற அடிமையொழிப்புத் தோழர்கள் துணையுடன் பென்சில்வேனியா வந்தடைந்தார்.


காட்சி 4

ஆற்றுக்கு அந்தப் பக்கம் டப்மேனின் பெற்றோரும் வண்டிக்காரப் பெண்ணும் காத்திருக்கின்றனர். எங்கேயோ சென்றிருந்த வால்டர், அப்போதுதான் வந்திருந்தான். பெஞ்சமினும் ரிட்டும் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருக்கின்றனர். வண்டிக்காரப் பெண் மட்டும் பதற்றத்துடன் இருந்தாள். தூரத்தில் குதிரைச் சத்தம் கேட்கிறது. பெஞ்சமின் சலனமில்லாமல் பார்க்கிறார். பெண்களின் முகங்களில் சற்றே பயம் தெரிகிறது. வால்டர் கடகடவென மரத்தின் மீது ஏறி பார்க்கிறான். "பாஸ்" என்று உற்சாகமாகக் குதிக்கிறான். எட்வர்டின் குதிரையில் டப்மேன் வருகிறார். வால்டரின் உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. டப்மேன் கீழிறங்கி பெற்றோரை ஆரத் தழுவிக்கொள்கிறாள். வண்டிக்காரப் பெண் நன்றியோடு அழுகிறாள். 

பின்னணி குரல்

இந்த அழுகை நினைவிருக்கிறதா! பென்சில்வேனியாவில் சூரிய உதயத்தைப் பார்த்ததும் டப்மேன் துள்ளிக் குதித்தது, அழுதது, தங்க நிற ஒளியில் தன் கையைத் தொட்டுப் பார்த்தது என எல்லாமே நினைவுக்கு வருகிறதா! விடுதலையின் தீண்டலை கண்ணீரால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். பௌத்த மதத்துக்கு மாறிய பின்பு பாபாசாகேப்பும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபோது மால்கம் எக்ஸும் இத்தகைய மனநிலையில்தான் இருந்தார்கள். இன்னொன்றும் முக்கியமானது, இவர்கள் இதோடு நின்றுவிடவில்லை. 

முன்கதை

பென்சில்வேனியாவிலிருந்து பிலடெல்ஃபியா செல்லும் டப்மேன், அங்கு அடிமையொழிப்பு இயக்கத்தின் முக்கிய நபரான வில்லியம் ஸ்டில்லை சந்திக்கிறார். கிட்டத்தட்ட 116 மைல் தனியாகக் கடந்துவந்திருக்கும் டப்மேனை அவர் ஆச்சிரியமாகப் பார்க்கிறார். டப்மேன் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துகொள்ளும் வில்லியம் கடைசியாக, 

"உங்க பேர்?" 
"அரமிண்டா ராஸ்" 
"இல்ல, இப்ப நீங்க விடுதலையாகிட்டீங்க. புதுப் பேர் வச்சுக்க விரும்புறீங்களா?" 
"... எங்கம்மா பேரு ஹேரியட், ஆனா அவங்கள ரிட்ன்னுதான் கூப்பிடுவாங்க. இனி அதுதான் என் பேரு, நான் ஹேரியட் டப்மேன்" 

பின்னர், மேரி புக்கனான் வீட்டில் தங்கவைக்கப்படுகிறார். தென் மாகாணங்களிலிருந்து தப்பிவந்த பெண் அடிமைகளுக்கு மேரியின் வீடுதான் புகலிடம். அந்நகரில் சிற்சில வேலைகள் செய்து சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தார் டப்மேன். ஒருநாள், வீட்டில் பாத்திரங்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்த சமயத்தில் டப்மேனுக்கு ஒரு கனவு வந்தது. 

 
காட்சி 5

டப்மேன் பெஞ்சமின் மடியில் படுத்திருக்கிறார். படகின் கீழறையில் ரிட், வண்டிக்காரப் பெண், மேலும் சில அடிமைகளும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றனர். டப்மேன் தன் கைப்பையில் இருந்து மரப்பொம்மை ஒன்றை எடுக்கிறார். அதைப் பெஞ்சமினிடம் காட்டுகிறார். அவர் அதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சிரிக்கிறார். டப்மேனும் சிரிக்கிறார். வானில் வடக்கு நட்சத்திரம் மட்டும் தெரிகிறது. 

பின்னணி குரல்

சிறு வயதில், பிராடஸ் பண்ணையிலிருந்து ஓடிவிடும் டப்மேன், பக்கத்து பண்ணையிலிருக்கும் தன் தந்தையின் அறைக்குச் செல்வாள். சிறந்த தச்சரான பெஞ்சமின், மரக்கட்டைகளை வைத்து எதையாவது செய்துகொண்டிருப்பார். டப்மேனைப் பார்த்ததும் அவளைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவார். வானில் நட்சத்திரங்களைக் காட்டிக் கதைகளைச் சொல்வார். வடக்கு நட்சத்திரம் நம்மை வழிநடத்தும், காப்பாற்றும் என்றெல்லாம் சொல்வார். நம் முன்னோர்களால் எதிர்காலத்தையும் மிகச் சரியாக கணிக்க முடியும் என்பார். டப்மேன் தப்பித்துப்போவதற்காக வந்தபோது கூட மரத்தில் வனைந்து வைத்த தன் முகத்தை அவளிடம் கொடுத்து, 'அப்பா உன் கூடவே இருப்பேன். வடக்கு நட்சத்திரம் காப்பாற்றும்’ என்று சொல்லியனுப்பினார். 

முன்கதை

டப்மேன் மீண்டும் மேரிலாந்துக்குச் சென்றார். தான் மட்டும் விடுதலையடைவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் குடும்பம், தன் மக்கள் என அனைவரும் விடுதலையடைய வேண்டும் என முடிவெடுத்திருந்தார். ஆனால் அதற்குச் சிறிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. டப்மேனின் கணவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்குக் குழந்தையும் இருந்தது. மொத்தமாய் அழுது தீர்த்த பின்னரே அவருக்குப் புரிந்தது. கடவுள் தனக்கிட்ட பணி மக்களை மீட்பதே. தான் கண்ட கனவுக்கும் அதுவே அர்த்தம் என்பதாக முடிவுசெய்து தன் சகோதரர்கள் உட்பட 9 பேரை அழைத்துச் சென்றார். இவர்களைப் பிடிக்க உரிமையாளர்கள் காத்திருந்த பாதையைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் அழைத்துச் சென்றார். வடக்கு நட்சத்திரமும் அவர் நம்பும் கடவுளும் ஒருமுறை கூட அவரைக் கைவிடவில்லை என்பது மக்கள் மனதில் இன்றும் நினைவுகூரப்படுகிறது. 

முன்வரலாறு

கறுப்பின அடிமை வியாபாரம் என்பது அமெரிக்கா முழுவதும் இருந்த ஒன்றுதான். ஆப்பிரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான மக்களை அடிமைகளாய் கடத்திவந்து பெரும் இனவெறுப்பு வன்முறையை நிகழ்த்திய வடுக்கள் இன்றும் ஆறாமல் இருக்கின்றன. இருப்பினும் அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகான அரசியல் சூழல் இந்நிலைமையைக் கொஞ்சம் மாற்றிவிட்டது. வடக்கு மாகாணங்களில் நிலவிய சீர்திருத்தத் திருச்சபையின் ஆதிக்கம், கனடாவில் பிரிட்டிஷ் அரசின் ஆட்சி போன்றவை வடக்கு மாகாணங்களில் அடிமை வியாபாரத்தை முற்றாக நீக்கியிருந்தன. மேலும், வடக்கு மாகாணங்களில் கறுப்பர்கள் சொத்துகள் வாங்கவும் வசதியிருந்தது. அதனால் பெரும்பாலான கறுப்பின மக்கள் கனடா செல்வதையே விரும்பினர். 

காட்சி 6 

அந்த இடமே பரபரப்பாக இருந்தது. டப்மேன் அனைவரையும் பாதுகாப்பாக யார் கண்ணிலும் சிக்காமல் மெதுவாக அழைத்துச் செல்கிறார். பல வெள்ளை பண்ணைக்காரர்கள் தன்னை நோக்கி வருவதாகத் தெரிந்ததுமே மற்றவர்களைச் சட்டென்று மறைத்துவிட்டு நொடிப்பொழுதில் வயதான பெண்ணைப்போல தன்னை உருமாற்றிக்கொண்டார் டப்மேன். வேகமாக வந்த பண்ணைக்காரர்கள் ஏமாந்து நிற்கின்றனர். 

"வால்டர் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்."
"என்ன பிரச்சன"
"நமக்கு உதவுறவங்களையும் கொல்றதுக்குச் சட்டம் போட்டுருக்காங்க" 

பின்னணி குரல்

அடிமையிடம் அவன் அடிமை என்பதை உணர்த்திவிட்டால் கிளர்ந்தெழுவான் என்று சொல்வார்கள். ஆனால், போராடும் நம் மனோபலத்தைக் காட்டுவதன் மூலமும் கிளர்ந்தெழச் செய்ய முடியும். அப்படி எழுந்தவன்தான் வால்டர். முதன்முயற்சியாக டப்மேன் 9 பேரை மீட்டுவரும்போது வழக்கமான பாதையில் எதிரிகள் காத்திருக்கிறார்கள் என்பதை உள்ளுணர்வின் மூலம் தெரிந்துகொண்ட டப்மேன், மாற்று வழியாக நடந்தே ஆற்றைக் கடக்கும் முடிவை எடுத்தார். அவரது சகோதரர்கள் எதிர்த்தார்கள். அப்போது அவர் ஒன்றைச் சொன்னார், அதைப் பிறகு சொல்கிறேன். தன் உள்ளுணர்வின் பலத்தைக் காட்ட அவர் ஆற்றில் இறங்கி நடந்தார். ஆற்றுநீர் அவரது தாடையத் தொடும்போது அவர் பிரார்த்தித்தார். பின்பு தொடர்ந்து நடந்தார். அவரைப் பார்த்து அனைவரும் நடந்தே ஆற்றைக் கடந்தனர். ஆற்று நீர் கழுத்தைத் தாண்டவில்லை. மரத்தின் மீதிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த வால்டர், மனம் மாறினான். அடிமைகளைப் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்துவந்த அவன், அதன்பிறகு டப்மேனுக்கு உதவ ஆரம்பித்தான். கடைசி முயற்சிவரை உடனிருந்தான். 

முன்கதை

அடிமைகளை மீட்டுக்கொண்டு செல்லும் ‘மோஸ’ஸை பிடித்துக்கொடுத்தால் 300 டாலர் பரிசு என பண்மை உரிமையாளர்கள் அறிவிப்புகளை வெளியிட்டனர். அந்த அளவுக்கு டப்மேன் அச்சுறுத்தலாக இருந்திருக்கிறார். அடிமைகளை அழைத்துச் செல்வது என்பது சிக்கலான பணி. எவ்வளவு நாட்களாகும் என்று உறுதியாகத் தெரியாத பயணம். உணவு, பாதுகாப்பு என எதற்கும் உத்தரவாதம் இருக்காது. இதனால் பல அடிமைகள் சோர்ந்துவிடுவார்கள், பாதியிலேயே திரும்பிவிடுவார்கள், அடிமைகளைப் பிடித்துக்கொடுக்கும் ஆட்களிடம் சிக்கிவிடுவார்கள். ஆனால், டப்மேன் தான் அழைத்து வந்த எந்த அடிமையையும் இப்படி விட்டதில்லை. 13 பயணத்திலும் அவர் யாரையும் பறிகொடுத்ததில்லை.

முன்வரலாறு

தென் மாகாணங்களிலிருந்து அடிமைகள் தப்பித்து வடக்கு மாகாணங்களுக்கும் கனடாவுக்கும் செல்வது தொடர்கதையாக இருந்ததால் கோபமுற்ற பண்ணைக்காரர்கள், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தனர். ஏற்கெனவே 1793ஆம் ஆண்டின் அடிமைகள் சட்டம் இருந்தாலும், அதை வடக்கு மாகாண அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. இதனால் இச்சட்டம் கடுமையாக்கப்பட்டு மீண்டும் 1850ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதன்படி தப்பித்து ஓடும் அடிமைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்குச் சிறை தண்டனை, அபராதம், தப்பிக்கும் அடிமைகளைக் கைது செய்யாத அதிகாரிகளுக்கு அபராதம் என கடுமையாக்கப்பட்டது. இதற்குப் பலத்த எதிர்ப்பு எழுந்தது. மேலும், 1861இல் தொடங்கிய அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. 

காட்சி 7 

அந்த நிலத்தைப் பார்த்ததும் டப்மேனுக்கு திருப்தி. 1,200 டாலர்கள். 
'எங்களுக்கென்று ஒரு நிலம், எங்கள் நிலம்' 
டப்மேன் நிலத்திலிருந்து ஒருபிடி மண்ணை எடுத்துத் தன் தந்தையின் கைகளில் கொடுக்கிறார். அதீத உற்சாகத்தில் 'I go to prepare a place for you…' என்று பாடினார். பாடி, ஆடி முடித்ததும், மர நிழலில் தந்தையுடன் அமர்கிறார். 

"அப்பா, நான் போறேன். என் வேல இன்னும் முடியல..."
"வடக்கு நட்சத்திரம் வழிகாட்டும்" 
"இனித் தனியா இல்ல, படையோடதான் போவேன்" 
"oh go down moses..." 

பின்னணி குரல்

இந்தச் சிரிப்புக்கு அவ்ளோ சக்தி இருக்கு. தனி ஆளா 116 மைல், நடந்தே 90 மைல், 13 முறை, 70 அடிமைகள்... இது எல்லாத்துக்கும் ஒரே காரணம்தான். முன்பே சொன்னேன், டப்மேன் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், அதைப் பிறகு சொல்கிறேனென்று. தப்பித்து ஓடும் அடிமைகளுக்கான சட்டம் அமல்படுத்திவிட்டார்கள். அடிமைகளை மீட்டுக்கொண்டு கனடா வரை செல்ல வேண்டியிருக்கும். 700 மைல் தூரத்தை முன்பு போல் எளிமையாகக் கடக்க முடியாது. அதனால் போருக்காகக் காத்திருக்கலாம் என அடிமையொழிப்பு இயக்கத்தினர் முடிவெடுத்தனர். வேகமாக உள்ளே நுழைந்த டப்மேன், "நான் கூட்டி வருகிறேன், நடந்து, படகில், ரயிலில், நான் கூட்டி வருகிறேன். உங்களுக்கு அடிமைமுறை என்பது வெறும் தகவல், எனக்கு அப்படியல்ல. என்னால் போர் வரைக்கும் காத்திருக்க முடியாது. என் முன்பு எப்போதும் இரண்டு விஷயங்கள் மட்டுமே இருக்கும். விடுதலை அல்லது மரணம், ஒன்று கிடைக்காத பட்சத்தில் மற்றொன்று கிடைத்தேயாக வேண்டும். கடவுள் எனக்கு வழிகாட்டுவார்." 

ஆம், விடுதலை அல்லது மரணம். உங்களுக்கு எது வேண்டும்? 

பின்கதை

தொடர்ந்து அடிமை மீட்பில் ஈடுபட்டுவந்த டப்மேன், அமெரிக்க உள்நாட்டுப் போரில் கலந்துகொண்டார். செவிலியராகப் பணியாற்றினார், உளவாளியாகச் சென்றார், அடிமைகளை மீட்கும் படைக்குத் தலைமை தாங்கினார். ஆயுதமேந்திய படைக்குத் தலைமையேற்ற முன்னோடி பெண்களில் டப்மேனும் ஒருவர். 1863இல் ஆபிரகாம் லிங்கன், அடிமைமுறையை ஒழிக்கும் விடுதலைப் பிரகடனத்தை அறிவித்த பின்பு தீவிரமாகச் செயல்பட்டு பல்வேறு இடங்களிலிருந்து அடிமைகளை மீட்டார். கூட்டுப் படையில் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர், மார்ச் 1869இல் தன்னை விட 22 வயது இளையவரான நெல்சன் சார்ல்ஸ் டேவிஸ் என்ற விவசாயியைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் கெர்ட்டி என்ற பெண்ணைத் தத்தெடுத்துக்கொண்டனர். காசநோயால் பாதிக்கப்பட்ட நெல்சன் 1888ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று உயிரிழந்தார். தொடர்ந்து சமூகப் பணிகள் செய்துவந்த டப்மேன், பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்று குரலெழுப்பினார். அதை ஆதரித்து ஆஃப்ரோ அமெரிக்கப் பெண்களின் தேசிய கூட்டமைப்பில் பேசினார். சிறு வயதிலிருந்தே இருக்கும் தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த டப்மேன், அதற்காகத் தலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மயக்க மருந்து எடுத்துக்கொள்ளாமலேயே அறுவை சிகிச்சை நடந்தது. இருப்பினும் உடல்நிலை மோசமாகிக்கொண்டே போனது. 

பின்வரலாறு

டப்மேன் அடிமைகளை அழைத்துவந்த பாதையைச் சுரங்க ரயில்பாதை என்று குறிப்பிடுவார்கள். அது குறியீட்டு சொல். அவர்கள் நடந்துவரும் பாதைதான் ரயில், வழிநடத்தும் நபர்தான் கண்டக்டர். ஆங்காங்கே மறைந்துகொள்ளும் வீடுகள்தான் ரயில் நிலையங்கள், அடிமைகள்தான் சரக்குகள். இப்படியாக மிகுந்த போராட்டத்தின் நடுவே பலபேரின் உதவியோடுதான் இந்த மீட்புப் போராட்டம் சாத்தியமானது. மேரிலாந்தில் வசிக்கும் கறுப்பின அதிகாரி சாம் க்ரீன், அங்கிருந்து வடகிழக்காக டெலவெயர், காம்டென் பகுதிகளில் வில்லியம், ஆபிரகாம் கிப்ஸ் போன்றோர் உதவுவார்கள். அங்கிருந்து டோவர் வழியாக வில்மிங்டன் வரைக்கும் உள்ளூர் மக்களின் உதவி கிடைக்கும். வில்மிங்டனில் தாமஸ் காரெட்டின் பரிந்துரையில் பிலடெல்ஃபியாவில் உள்ள வில்லியம் ஸ்டில் அலுவலகத்தை அடையலாம். இந்த 116 மைல் தூரத்தில் இருக்கும் விடுதலையை நோக்கி பல்லாயிரம் பேர் வந்திருக்கிறார்கள். ஆனால் தன் உயிரைப் பணயம் வைத்து 116 மைல் தூரத்தை 13 முறை கடந்த மோஸஸை போற்றும் வகையில் நினைவுச் சிற்பங்கள், நினைவிடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்க அரசு, 20 டாலர் நோட்டில் இவரது உருவத்தை அச்சிட்டு சிறப்பு செய்துள்ளது. மேலும், அஞ்சல்தலைகளையும் வெளியிட்டிருக்கிறது. சிறுகோள் ஒன்றுக்கு டப்மேனின் பெயரைச் சூட்டியிருக்கிறது அமெரிக்கா. இதுபோக பல பள்ளிகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் டப்மேனின் பெயர் பயன்பட்டிருக்கிறது. அவர் பயணித்த 116 மைல் தொலைவு இன்று வரலாற்றுத் தடமாக மாறியிருக்கிறது. மக்கள் பலரும் அந்த வழியில் பயணிப்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவருகிறார்கள். டப்மேனின் மனஉறுதியும் விடுதலை உணர்வும் ஏதோவொரு வகையில் இன்றும் தேவைப்படுவதை ஜார்ஜ் ஃபிளாயிட் சம்பவங்கள் பறைசாற்றுகின்றன. வரலாறு என்பது ஆறு போலதான். கடல், நீராவி, மழை, அருவி என சுழற்சி முறையில் இங்கு தொடர்ந்துகொண்டே இருக்கும். ஹேரியட் டப்மேன் திரும்பவும் வரலாம்.  

இறுதிக்காட்சி

படுக்கையில் படுத்திருக்கிறார் டப்மேன். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கிறது. சுற்றியுள்ள உறவினர்கள் செய்தித்தாள் விளம்பரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில், ‘ஹேரியட் டப்மேன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். முடிந்தவர்கள் அவருக்கு உதவலாம்’ என்றிருக்கிறது. தாதி உள்ளே வருகிறார். டப்மேனை மருந்து செலுத்த நெருங்கியபோது,

“ஏதோ சொல்றாங்க..”

உறவினர்களும் நெருங்கி வந்தனர். மெதுவாக குரல் கேட்டது,

“இல்ல பாடுறாங்க”

“I go to prepare a place for you…”

முற்றும்


நீலம், பிப்ரவரி 2022

Comments

Popular posts from this blog

இன்னும் எத்தனைக் காலம்தான்...?

அத்தனை எளிதில் கிட்டுமா ஜிஸ்மானியத்தான மிஃறாஜ்

பேரன்பும் பெருங்கோபமும்